சச்சின் சாதனையும் மும்முனைத் தாக்குதலும்!

By அரவிந்தன்

அதிர்வலைகளை எழுப்புவதற்குப் பேர்போன இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சர்வதேசப் பயணத் திட்டத்தில் கைவைத்து விபரீத விளையாட்டில் இறங்கியிருக்கிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணி நவம்பரில் இந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்று ஒரு நாள் போட்டிகளும் ஆடும் என்ற அறிவிப்பு இந்த மாதத்தின் தொடக்கத்தில் வந்தபோது பல கேள்விகள் எழுந்தன.

அக்டோபரில் இங்கே வரும் ஆஸ்திரேலிய அணியுடன் டி20 மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர் முடிந்த கையோடு தென்னாப்பிரிக்கச் சுற்றுப் பயணத்திற்குக் கிளம்ப வேண்டிய இந்திய அணி அப்படிக் கிளம்ப முடியாது என்பதுதான் இந்த அறிவிப்பின் முதல் விளைவு. சர்வதேச அளவில் தீர்மானிக்கப்பட்டு அனைத்து வாரியங்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பயணத் திட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது?

இந்தக் கேள்விக்குப் பல பதில்களைக் கூற முடியும். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரியாக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹாரூன் லோர்கட்டிற்கும், இந்திய வாரியத்துக்கும் ஒத்துவராது என்பது முதல் காரணமாகச் சொல்லப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக லோர்கட் இருந்தபோது இந்திய வாரியத்துடன் இவருக்கு உரசல்கள் ஏற்பட்டன. இவர் தென்னாப்பிரிக்க வாரியத் தலைமைச் செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே இந்தியாவின் தென்னாப்பிரிக்கப் பயணம் குறித்த ஐயங்கள் ஊடகங்களில் எழுப்பப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தென்னாப்பிரிக்கப் பயணத்தைப் பாதிக்கும் வகையில் இந்திய வாரியம் எடுத்த முடிவு பழைய பகைமையின் விளைவாக இருக்கலாம் என்று ஊடகங்கள் விமர்சிக்கின்றன.

கிறிஸ்துமஸுக்கு மறு நாளானான பாக்ஸிங் டே அன்று இந்தியாவுடனான போட்டிக்கு ஏற்பாடாகியிருந்தது. பாக்ஸிங் டே போட்டி கிறிஸ்தவர்களுக்கு உணர்வுபூர்வமாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய வாரியத்தின் திட்டத்தால் இப்போட்டி கேள்விக்குறியாகியிருக்கிறது. இது தென்னாப்பிரிக்க அணியினருக்கும் ரசிகர்களுக்கும் கடும் அதிருப்தியைத் தந்திருக்கிறது.

மூன்று டெஸ்டுகளுக்குப் பதில் இரண்டு டெஸ்டுகள், ஏழு ஒரு நாள் போட்டிகளுக்குப் பதில் ஐந்து என்று இந்திய வாரியம் பேரம் பேசுகிறது. போட்டிகள் குறைவதால் தென்னாப்பிரிக்க வாரியத்தின் வருமானமும் குறையும்.

வாரியத்தின் முடிவுக்கு வருமானம்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் போட்டிகள் மிகவும் குறைவாக இருப்பதால் வாரியத்தின் வருமானம் இந்த ஆண்டு குறைந்திருக்கிறது. இதை மேம்படுத்தவே மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடர் நுழைக்கப்பட்டிருக்கிறது என்று கருத இடமிருக்கிறது. வாரியத்தின் பொறுப்பாளர்கள் இதுபற்றி வெளிப்படையாகவே பேசிவருகிறார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியை இப்போது அழைத்திருப்பதில் வேறொரு நுட்பமான கணக்கும் இருப்பதாகத் தெரிகிறது. சச்சின் டெண்டுல்கரின் 200ஆவது டெஸ்ட் போட்டி என்னும் ஒப்பற்ற சாதனை நிகழ்த்தப்பட இன்னும் இரண்டே போட்டிகள்தான் இருக்கின்றன. மேற்கிந்திய அணி இப்போது வராவிட்டால் சச்சினின் 200ஆவது போட்டி அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில்தான் நடைபெறும். இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ஆராதிக்கப்படும் சச்சினின் சாதனையை இந்திய மண்ணில் நிகழ்த்துவதற்கான ஆவல் எழுவது இயற்கைதான். அதே சமயம் அந்தச் சாதனைப் போட்டியின் வணிக ரீதியான பலன்கள் வாரியத்துக்கே அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் அது உள்நாட்டில் நிகழ்த்தப்பட வேண்டும். இந்தக் கணக்கும் வாரியத்தின் முடிவுக்குப் பின் இருக்கலாம்.

அதாவது வாரியம் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்திருக்கிறது. உள்நாட்டுப் போட்டியால் சுமார் ரூ.300 கோடி வருமானம், சச்சினின் சாதனைப் போட்டியால் கூடுதல் வருமானம், தனக்குப் பிடிக்காத தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகிக்கு மூக்குடைப்பு.

உலகிலேயே பண பலம் அதிகம் கொண்ட இந்திய வாரியத்தின் இந்த அதிரடியால் தென்னாப்பிரிக்க வாரியம் நொந்துபோயிருக்கிறது. இந்திய ரசிகர்களோ சச்சினின் 200ஆவது போட்டியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.

வாரியத்தின் இந்த அதிரடிப் புயலில் சச்சின் தனது 200ஆவது போட்டிக்குப் பின் ஆடுவாரா, தென்னாப்பிரிக்க அணியின் வலுவான பந்துவீச்சைக் கடைசியாக ஒருமுறை எதிர்கொண்டு இந்த வயதிலும் தன் தன் திறமையை நிரூபித்துவிட்டு விடைபெற அவருக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்பன போன்ற கேள்விகளை இப்போதைக்குக் கேட்க வேண்டாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்