தோனி அடுக்கிய தோல்வி காரணங்களும் ஓய்வு கேள்வியை எதிர்கொண்ட விதமும்!

By ஆர்.முத்துக்குமார்

மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் மே.இ.தீவுகளின் காட்டடி தர்பாருக்கு இந்திய அணி சரணடைந்து வெளியேறியது. இதற்குப் பனிப்பொழிவும், வீசப்பட்ட நோ-பால்களுமே காரணம் என்று கேப்டன் தோனி கூறியுள்ளார்.

முதலில் ஆட்டம் முடிந்த பிறகு பரிசளிப்பு விழாவில் கூறியதை அவர் கூறியதைப் பார்ப்போம்:

"டாஸ் தோற்றது முதல் பின்னடைவு. இதனால் பனிப்பொழிவில் பந்து வீச நேர்ந்ததால் ஸ்பின்னர்கள் பந்தை நன்றாக பற்ற முடியாமல் போனது. ஈரப்பந்தில் ஸ்பின்னர்கள் வீசுவது பற்றிய பிரச்சினைகளின் வரலாறு நம்மிடம் உள்ளது. ஆனால் நான் உண்மையில் ஏமாற்றமடைந்தது அந்த 2 நோ-பால்களே. வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தப் போட்டியை வெற்றிக்குத் திருப்ப வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகள் கடினமாக அமைந்தன. இந்த டி20 வடிவம் அதிகம் நம்மிடமிருந்து உழைப்பைக் கோருவது" என்றார் தோனி.

அஸ்வினும் உலகக் கோப்பையும்

இந்தியப் பந்துவீச்சைத் தலைமை தாங்குபவராக அஸ்வின் கருதப்படுகிறார். ஆனால் அவருக்கு இந்த உலகக் கோப்பை ஓர் அமைதியான தொடராக மாறிப்போனது. ஓரளவுக்கு இதற்கு தோனியும் பொறுப்புதான். காரணம் ஸ்பின்னுக்குச் சாதகமான ஆட்டக்களமே இந்தியாவுக்கு கிடைத்தது (அரையிறுதி நீங்கலாக) ஆனால், அஸ்வின் 5 போட்டிகளில் வீசிய ஓவர்கள் 15 மட்டுமே. 5 போட்டிகளில் அஸ்வின் 2 போட்டிகளில் மட்டுமே தனது முழு 4 ஓவர்களையும் வீசினார். கொல்கத்தா பிட்சில் பாகிஸ்தானுக்கு எதிராக பந்துகள் ஸ்கொயராகத் திரும்பிய பிட்சில் அஸ்வின் 3 ஓவர்களே வீசினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்களை வழங்கிய 2 ஓவர்கள், பிறகு நேற்று அரையிறுதியில் 2 ஓவர்கள்.

தோனி நேற்று அஸ்வினை 7 மற்றும் 9-வது ஓவரில் பயன்படுத்தினார். 20 ரன்கள் கொடுத்தார், ஆனால் அதன் பிறகு மிடில் ஓவர்களிலும் கொண்டுவரவில்லை, கடைசி ஓவரில் 8 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்படும் நிலையிலும் பகுதி நேர வீச்சாளரான கோலியிடம் அளிக்கப்பட்டது. அஸ்வின் ஒரு ஆகிருதி, கடைசி ஓவரை அவரிடம் கொடுத்திருந்தால் ஒருவேளை... ஒருவேளை... மே.இ.தீவுகளின் பேட்ஸ்மென் பதற்றமடைந்திருக்கலாம், விராட் கோலி என்றவுடன் அவர்கள் எப்படியும் ஒரு பந்து சிக்கும் என்ற நம்பிக்கை பெற்று விட்டனர். எப்போதும் இப்படிப்பட்ட நெருக்கடியான (crunch) போட்டிகளில் முன்னணி பவுலர்களையே பயன்படுத்த வேண்டும். ஆனால் இடை ஓவர்களில் பாண்டியா வாங்க வாங்க கொடுத்துக் கொண்டே இருந்தார் தோனி.

ஏன் இப்படி? - தோனி விளக்கம்:

"பந்தின் தையலில் ஈரம் படியத் தொடங்கியது, ஆடுகளத்திலும் பந்துகள் பேட்டுக்கு நன்றாக வந்தன. அஸ்வின் 2 ஓவர்களே வீச முடிந்தது, ஜடேஜா முழு ஓவர்களை முடிக்கத் தள்ளப்பட்டோம். கடைசியில் இரண்டு வலது கை பேட்ஸ்மென்கள் (ரஸல், சிம்மன்ஸ்) கிரீசில் இருந்ததால் இடது கை ஸ்பின் தெரிவு செய்யப்பட்டது.

கடைசி ஓவரை அஸ்வினிடம் கொடுக்க வேண்டும் என்பது என் மனதில் இல்லை. பிட்சில் பந்துகள் மட்டைக்கு நன்றாக வரும் வேளையில், பந்து ஈரமாக இருக்கும்போது அஸ்வின் வீச சரியான நேரம் அதுவல்ல என்றே கருதினேன். பந்துகள் திரும்பும் பிட்சில் நான் அவரைப் பயன்படுத்தியிருப்பேன்.

கொல்கத்தாவில் பும்ராவை பயன்படுத்தியதற்குக் காரணம், ஒரு ஸ்பின்னரின் ஓவரில் 15 ரன்கள் எடுக்க வாய்ப்பிருப்பதாகக் கருதினேன், அஸ்வின் சரியாக வீச மாட்டார் என்று நான் கருதவில்லை, அந்தப் போட்டியில் பாதுகாப்பான தெரிவாக பும்ராவை வீச அழைத்தேன். நேற்று சூழ்நிலை அஸ்வினை அழைக்க ஏதுவாக இல்லை.

மேலும் 30 ரன்களைக் கூடுதலாக எடுத்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். அரை மணி நேரம் முன்னால் ஆட்டம் தொடங்கியது, டாஸில் வேறு தோற்றோம். அவர்கள் பேட் செய்யத் தொடங்கிய போது பரவாயில்லை, ஆனால் சிறிது நேரம் கழித்து பனிப்பொழிவு தொடங்கியது. அதனால் ஸ்பின்னர்கள் பந்தை சரியாகப் பற்ற முடியவில்லை.

பந்து ஈரமாக இருக்கும்போது பேட்டுக்கு அருமையாக வரும், இதுதான் முதலில் பேட் செய்வதற்கும், 2-வதாக பேட் செய்வதற்குமான வேறுபாடு. 190 ரன்களை எடுப்பது கடினம்தான், ஆனால் 2-வது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவினால் ஆடுகளம் மாறிப்போனது.

நான் ஏமாற்றமடைந்தது அந்த 2 நோபால்களே. மற்றபடி சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இல்லாத போதும் நாங்கள் முடிந்த அளவுக்கு முயற்சி மேற்கொண்டோம்" என்றார் தோனி.

டி20 ஓய்வு எப்போது?- தோனி சுவாரசியம்

போட்டி முடிந்தபின்பு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர், தோனியின் டி20 போட்டி ஓய்வுத் திட்டம் குறித்த கேள்வியை எழுப்பினார்.

அந்தச் செய்தியாளரை தன் அருகே அழைத்து அமரவைத்த தோனி, "நான் ஓய்வு பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டார். அதற்கு, "இல்லை... இல்லை... நான் ஜஸ்ட் கேட்டென்" என்றார் செய்தியாளர். அதற்கு, "நான் உடல்தகுதியுடன் இல்லை என்று நினைக்கிறீர்களா?" என்று தோனி கேட்டார். இல்லை என்று பதில் வந்ததும் "என்னுடைய ஓட்டத்தைப் பார்த்தீர்கள்தானே?" என்றார். "ஆம்... ரொம்ப வேகம்தான்" என்றார் செய்தியாளர்.

அதன் பிறகும் விடாத தோனி, "2019 உலகக் கோப்பை வரை என்னால் தாக்குப் பிடிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?" என்று கேட்க, "நிச்சயமாக, ஆம் நிச்சயமாக" என்று அந்தச் செய்தியாளர் சொல்ல, "அப்புறம் என்ன... நீங்களே கேள்விக்குப் பதில் சொல்விட்டீர்கள்" என்றார் முடித்தார் தோனி.

மேலும் அவர் விளையாட்டாக விவரித்தபோது, "இந்தக் கேள்வியை இந்திய செய்தியாளர் யாராவது ஒருவர் கேட்டிருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஏனென்றால் அவருக்கு கிரிக்கெட் விளையாடும் மகன் இருக்கிறாரா என கேட்டிருப்பேன், அந்த மகனுக்கு விக்கெட் கீப்பிங் தெரிந்தால் அவர் எனக்கான மாற்றாக வரலாம் என சொல்லியிருப்பேன். அவர் இல்லை என்று சொல்லியிருந்தால், ஒருவேளை உங்கள் சகோதரனால் விளையாட முடிந்து, அவர் ஒரு விக்கெட் கீப்பராக இருந்தால் எனக்கு மாற்றாக வரலாம் என சொல்லியிருப்பேன். நீங்கள் தவறான கேள்வியை தவறான நேரத்தில் கேட்டுவிட்டீர்கள்" என்றும் சிரித்துக்கொண்டே ஜாலியாக சொன்னார் தோனி.

தோனியின் இந்த வித்தியாசமான அணுகுமுறை செய்தியாளர்களையும் பார்வையாளர்களையும் வெகுவாக கவனத்தை ஈர்த்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்