கேட்ச்களை கோட்டைவிட்ட தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது

பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை, ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகித்தது.

நல்ல பேட்டிங் பிட்சில் தெ.ஆ. கேப்டன் டிவிலியர்ஸ் முதலில் பீல்ட் செய்ய முடிவெடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.1 ஓவர்களில் 268 ரன்களுக்குச் சுருண்டது.

பெய்லிக்கு மட்டும் தவறவிடப்பட்ட 4 கேட்ச்கள்:

தென் ஆப்பிரிக்கா அணியின் பீல்டிங் இன்று படு மோசமாக இருந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் காயமடைந்தார். அவர் 11 ரன்களில் ஸ்டெய்னிடம் ஆட்டமிழந்தார். ஆனால் காயம் காரணமாக பீல்டிங்கில் களமிறங்கவில்லை. ஜார்ஜ் பெய்லி கேப்டனாக செயலாற்றினார். விஷயம் இதுவல்ல.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களை எடுத்த ஜார்ஜ் பெய்லி 75 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 70 ரன்கள் விளாசினார். ஆனால் இவருக்கு மட்டும் தென் ஆப்பிரிக்க பீல்டர்கள் 4 கேட்ச்களை கோட்டைவிட்டனர். இல்லையெனில் 300 ரன்களை ஆஸ்திரேலியா எட்ட வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது.

அதாவது விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் ஜார்ஜ் பெய்லி 92 ரன்களை 6-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது இந்த விடப்பட்ட கேட்ச்களினால்தான்.

பெய்லி இறங்கியவுடன் ஸ்டெய்ன் அவருக்கு ஒரு பயங்கர பவுன்சரை வீச குனிய வேண்டியதாயிற்று. பிறகும் அவருக்கு தெ.ஆ. பவுலர்கள் ஏகப்பட்ட தொல்லைகளைக் கொடுத்தனர்.

பெய்லி 2 ரன்களில் இருந்த போது 2 கேட்ச்கள் விடப்பட்டன. முதலில், மோர்கெல் பந்தை கட் செய்தார், பாயிண்டில் டேவிட் மில்லர் எளிதான வாய்ப்பைத் தவற விட்டார். அடுத்ததாக இம்ரான் தாஹிர் பந்தில் அவரிடமே பெய்லி கொடுத்த மேலும் எளிதான வாய்ப்பை தாஹிர் கோட்டை விட்டார். 50 பந்துகள் கழித்தே பெய்லி தன் முதல் பவுண்டரியை அடித்தார். அதுவும் பவர் பிளேயின் போது.

39 ரன்களில் பெய்லி இருந்த போது மெக்லாரன் பந்தை ஒரு சுழற்று சுழற்றினார். ஆனால் கேட்ச் பிடிக்க பின்னால் சென்ற பிலாண்டர் கேட்சை தவறவிட்டார். மீண்டும் 47 ரன்களில் இருந்த போது பிலாண்டர் பந்தை புல் ஆட, வந்த கேட்சை பெஹார்டியன் கோட்டை விட்டார். இந்த 4 கேட்ச்கள் தென் ஆப்பிரிக்காவின் விதியை தீர்மானித்தது.

அதன் பிறகு சும்மா இருப்பாரா பெய்லி, 69 பந்துகளில் அரைசதம் கண்டார். மெக்லாரனை ஒரே ஓவரில் 2 சிக்சர்கள் விளாசினார். பிறகு ஸ்டெய்ன் மெதுபந்தை ஒன்றை முயற்சி செய்ய அதுவும் லாங் ஆனுக்கு மேல் சிக்சராக முடிந்தது. கடைசியில் 75 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து டுபிளேசியின் அபார கேட்சிற்கு வெளியேறினார்.

கடைசி 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 104 ரன்களை விளாசியது. வேட் 35 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 29 ரன்களையும் எடுத்தனர். வெர்னன் பிலாண்டர் அபாரமாக வீசி 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

முன்னதாக வார்னர் அற்புதமாகத் தொடங்கினார். அவரும் பின்ச்சும் இணைந்து 86 பந்துகளில் 94 ரன்களை தொடக்க விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஆனால் இருவரையும் பிலாண்டர் ஒரே ஓவரில் காலி செய்தார். வார்னர் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 49 பந்துகளில் 46 ரன்களை விளாச, பின்ச் 4 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 35 ரன்கள் எடுத்தார்.

வாட்சன் 13 ரன்களில் இம்ரான் தாஹிரிடம் வெளியேற, கிளார்க் 11 ரன்களில் ஸ்டெய்ன் பவுன்சரை ஹுக் செய்ய முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மிட்செல் மார்ஷ் 10 ரன்களில் இருந்த பொது பிலாண்டரின் அபாரமான இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார். 29.3 ஓவர்களில் 144/5 என்று இருந்த ஆஸ்திரேலியா, மோசமான தென் ஆப்பிரிக்க பீல்டிங்கினால் 300 ரன்களை எட்டியது.

டிவிலியர்ஸ் ஆட்டம் வீண்:

301 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் ஆம்லா (8), டி காக் (2) ஆகியோர் மிட்செல் ஜான்சனின் வேகத்திற்கு இரையாயினர்.

பெஹார்டியன் 20 ரன்கள் எடுத்து நேதன் கூல்டர் நைல் பந்தை புல் செய்து ஆட்டமிழந்தார். டுபிளேசிஸ் 31 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடிவந்தார். அவர் வாட்சன் வீசிய பவுன்சரை பைன்லெக் திசையில் சிக்ஸ் அடித்தார். அடுத்த பந்தில் அதே ஷாட்டில் கேட்ச் ஆனார்.

15.5 ஓவர்களில் தெ.ஆப்பிரிக்கா 76/4 என்று ஆனது.

ஆனால் அதன் பிறகு டேவிட் மில்லர், டிவிலியர்ஸ் இணைந்து ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தத் தொடங்கினர். இருவரும் இணைந்து சுமார் 126 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். மில்லர் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 64 ரன்களை எடுத்தார். சிக்சர் வாட்சன் பந்தில் அடித்தது.

டிவிலியர்ஸ் வழக்கம் போல் அபாரமாக தன் இன்னிங்சைக் கட்டமைத்தார். 13 ரன்களில் இருந்த போது மிட்செல் ஜான்சன் பந்தில் எல்.பி என்று தீர்ப்பளிக்கப்பட்டார். ஆனால் ரிவியூ மூலம் தீர்ப்பை மாற்றினார் டிவிலியர்ஸ். அதன் பிறகு கிளென் மேக்ஸ்வெல் பந்தை மிகப்பெரிய சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார் டிவிலியர்ஸ். நன்றாக போய்க்கொண்டிருந்த போது கூல்டர் நைல், டேவிட் மில்லரை வீழ்த்தினார். டிவிலியர்ஸ் 67 பந்துகளில் 70 என்று இன்னொரு வெற்றி துரத்தலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.

ஆனால் மில்லர் வீழ்ந்த அதே ஓவரில் மெக்லாரனையும் கூல்டர் நைல் வீழ்த்தினார். வெர்னன் பிலாண்டரை, ஹாசில்வுட் அடுத்த ஓவரில் காலி செய்தார்.

டிவிலியர்ஸ் 76 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 80 ரன்களில் ஆடிவந்த போது, ஸ்டெய்ன் தப்பும் தவறுமாக ஒரு முடிவை எடுக்க டிவிலியர்ஸ் ரன் அவுட் ஆனார். பிறகு கூல்டர் நைல், ஸ்டெய்னை பெவிலியன் அனுப்பினார். இம்ரான் தாஹிர் 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இவரை மேக்ஸ்வெல் அவுட் செய்ய, மோர்கெல் ஒரு முனையில் 22 ரன்களுடன் நாட் அவுட்டாக இருந்தார்.

தெ.ஆ. 32 ரன்களில் தோல்வி தழுவியது. கூல்டர் நைல் 48 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவர்தான் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்