சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் டிரினிடாட் அன்ட் டொபாக்கோ அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியைத் தோற்கடித்தது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் கேப்டன் ஜேம்ஸ் ஹோப்ஸ், டிரினிடாட் அன்ட் டொபாக்கோ அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார்.
லென்டல் சிம்மன்ஸ்- எவின் லீவிஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3 ஓவர்களில் 28 ரன்கள் சேர்த்தது. மெக்டெர்மோட் வீசிய 3-வது ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விளாசிய சிம்மன்ஸ், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 19 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார்.
சிம்மன்ஸ் ஆட்டமிழந்ததால், அந்த அணியின் ரன்வேகமும் குறைந்தது.
பின்னர் வந்த டேரன் பிராவோ ரன் ஏதுமின்றியும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லீவிஸ் 14 ரன்களிலும், ஜேசன் முகமது 10 ரன்களிலும், கங்கா ரன் ஏதுமின்றியும் நடையைக் கட்ட, 10.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது டிரினிடாட்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் தினேஷ் ராம்தின் 38 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் சேர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார்.
கடைசி ஓவரில் சாமுவேல் பத்ரி இரு சிக்ஸர்களை விளாச, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது டிரினிடாட். பத்ரி 7 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்தார்.
பிரிஸ்பேன் தரப்பில் மெக்டெர்மோட் 4 ஓவர்களில் 37 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
136 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணியில் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஜேம்ஸ் ஹோப்ஸ் 4 ரன்களில் ராம்பால் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். பின்னர் வந்த பீட்டர் போரஸ்ட் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது (7.5-வது ஓவரில்) மைதானத்தில் இருந்த மின் விளக்கு ஒன்று திடீரென அணைந்தது. இதையடுத்து ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது பிரிஸ்பேனின் சரிவு தவிர்க்க முடியாததானது. டேனியல் கிறிஸ்டியான் 13, கிறிஸ் லின் 4, கிறிஸ் ஹார்ட்லே 3 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜோ பர்ன்ஸ் 45 ரன்களில் ராம்பால் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
அவர் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். பின்னர் வந்தவர்களில் பென் கட்டிங் மட்டுமே 17 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற, 18.4 ஓவர்களில் 110 ரன்களுக்கு சுருண்டது பிரிஸ்பேன்.
டிரினிடாட் தரப்பில் ரவி ராம்பால் 3.4 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எம்ரிட், சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சாமுவேல் பத்ரி 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago