முன்னூறுக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் முண்டியத்துக் கொண்டிருக்கிறார்கள். அறுபதுக்கும் மேற்பட்ட வீடியோ கேமராக்கள் பரபரப்புடன் காத்திருக்கின்றன. சிரித்த முகத்துடன் கறுப்பு சூட் அணிந்தபடி அமைதியாக உள்ளே நுழைந்தார் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். அனைத்து ஊடகங்களும் இவர் புகழ் பாடிக்கொண்டிருக்கின்றன. பலர் வாய் விட்டு அழுகிறார்கள். பலர் ரகசியமாகக் கண்ணைத் துடைத்துக் கொள்கிறார்கள். தேசத்தின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னா இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகில் எந்தத் துறையிலும் யாருக்கும் கிடைக்காத பிரிவுபசாரம் இவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்தப் பெருமைகள் எதுவும் அவர் முகத்தில் தெரியவில்லை. செய்தியாளர்களின் கேள்விகளை மிக அமைதியாக எதிர்கொண்டார். கேள்வி கேட்க வாய்ப்புக் கிடைக்காதவர்கள் மைதானத்தில் இருக்கும் ரசிகர்களைப்போல சச்சின், சச்சின் என்று துடித்தார்கள். மும்பை டிரைடன்ட் ஓட்டலில் ரூஃப் டாப் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து சில பகுதிகள்:
ஓய்வு பெற்ற நேரம் குறித்து?
என் உடல் சொன்னதை நான் கேட்டேன். உடலுக்கு ஓய்வு தேவை என்று தோன்றியது. பயிற்சிகள் முன்பு போல இல்லை. சற்று மெனக்கெட வேண்டியிருந்தது. விடைபெற இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன்.
பாரத் ரத்னா விருது பெற்றது குறித்து?
மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த விருதை என் அம்மாவுக்கு அர்ப்பணம் செய்வதாக நேற்று குறிப்பிட்டேன். அவர் எனக்காகச் செய்த தியாகங்களுக்கான அர்ப்பணம் இது. என் அம்மாவுக்கு மட்டுமல்ல. லட்சக்கணக்கான அன்னையர்கள் தத்தமது குழந்தைகளுக்காக எத்தனையோ தியாகங்கள் செய்கிறார்கள். தங்கள் குழந்தைகள் வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகக் கடுமையாகப் பாடுபடுகிறார்கள். பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் அனைவருக்காகவும் இந்த விருதை அர்ப்பணம் செய்கிறேன்.
இந்தத் தருணத்தில் பாரத் ரத்னா விருது பெற்ற பேராசிரியர் ராவ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்துக்கு மாபெரும் பங்களிப்புச் செய்த ஒரு அறிவியல் அறிஞருடன் இணைந்து எனக்கும் இந்த விருது அளிக்கப்பட்டிருப்பதைப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
உங்கள் கடைசி டெஸ்ட் பலவீனமான அணியோடு அமைந்துவிட்டதே?
தயவுசெய்து அப்படி நினைக்காதீர்கள். மேற்கிந்திய அணி உலகத் தரமான ஆட்டக்காரர்களைக் கொண்ட அணி. சரியான உணர்வுடன் ஆட்டத்தை அணுகுபவர்கள். சில சமயம் நமது முயற்சிகள் பலிக்காது. எதுவும் நாம் எதிர்பார்த்தபடி அமையாது. அதுதான் இப்போது அவர்களுக்கு நடந்திருக்கிறது.
நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் பயிற்சி மையம் தொடங்கிப் பல திறமைசாலிகளை உருவாக்கக் கூடாது?
நல்ல யோசனை. யோசித்துப் பார்க்கிறேன். ஆனால் அகாடமி நடத்தினால்தான் இளைஞர்களுக்கு உதவ முடியும் என்பதில்லை. இப்போதும் நான் 17 வயது, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணிகளில் இடம்பெற்றுள்ள ஆட்டக்காரர்களைச் சந்தித்து என் ஆலோசனைகளை வழங்குகிறேன். அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.
மைதானத்தைத் தொட்டுக் கும்பிட்டது பற்றி?
22 கஜ நீளம் கொண்ட இந்த ஆடுகளம்தான் நான் இப்படி இருப்பதற்குக் காரணம். அது எனக்குக் கோவில் மாதிரி. இனி இந்தக் களத்தில் நான் ஆடப்போவதில்லை. எனவே என் நன்றியையும் வணக்கத்தையும் அதற்குத் தெரிவித்துக்கொண்டேன்.
கிரிக்கெட்டுக்குப் பிறகு வாழ்க்கை?
இன்று காலை வழக்கம்போல ஆறே கால் மணிக்கு எழுந்தேன். நேற்று மேட்சுக்காக எழுந்தது போலவே இன்றும் எழுந்தேன். சீக்கிரம் குளித்துவிட்டுத் தயாராக வேண்டும் என்ற எண்ணம் வழக்கம்போல் எழுந்தது. உடனே யதார்த்தம் புரிந்தது. எழுந்து டீ போட்டுக் குடித்தேன். அஞ்சலியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். வாழ்த்துச் செய்திகளுக்கு பதில் அனுப்பிக் கொண்டிருந்தேன். ரிலாக்ஸ் ஆக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று இன்னும் யோசிக்கவில்லை.
இங்கிலாந்து (இங்கிலாந்தி லிருந்து வந்திருந்த பத்திரிகையாளர் கேட்ட கேள்வி) அணிக்கெதிரான ஆட்டங்களில் மறக்க முடியாத தருணங்கள் இரண்டை நினைவுகூர முடியுமா? ஆஷஸ் தொடர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஓல்ட் ட்ரஃபோர்டில் அடித்த சதம், சென்னையில் 374 ரன்களை சேஸ் செய்து வென்ற தருணம் இவை இரண்டும் முக்கியமானவை. ஆஷஸ் தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலிய மண்ணிலும் தங்களால் வெல்ல முடியும் என்று நிரூபிக்க இங்கிலாந்து விரும்பும். இந்தியாவில் சமீபத்தில் மிட்செல் ஜான்சன் பந்து வீசியதைப் பார்த்தபோது ஆஸ்திரேலிய அணியின் மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.
கடைசி மேட்சில் 74 ரன் அடித்தபோது உங்கள் அம்மா கண்கலங்கினார். இதுபோன்ற தருணங்கள் இதற்கு முன்பு ஏற்பட்டிருக்கின்றனவா?
என் குடும்பத்தினர் எப்போதுமே நிதானம் தவற மாட்டார்கள். நான் சரியாக ஆடாதபோதும் சிறப்பாக ஆடும்போதும் ஒரே விதமாகத்தான் என்னை எதிர்கொள்வார்கள். நான் நன்றாக ஆடும்போது தூக்கிவைத்துக் கொண்டாடுவது, அப்படி ஆடாதபோது முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்வது அப்படி எதுவும் கிடையாது. இந்த நிதானம்தான் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என்று நினைக்கிறேன்.
நேற்று மேட்ச் முடிந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?
படி ஏறிச் செல்லும்போது யார் முகத்தையும் பார்க்க விரும்பவில்லை. என் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அந்தக் கோலத்தில் என்னை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டக்காரர்களும் எதிர்ப்பட்டார்கள். யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அறைக்குச் சென்றுவிட்டேன்.
உங்கள் மகனின் கிரிக்கெட் வாழ்க்கை பற்றி?
அர்ஜுன் டெண்டுல்கருக்குக் கிரிக்கெட் பிடிக்கும். அவன் என்ன ஆகப்போகிறான் என்பதைப் பற்றி நான் யோசிக்கவில்லை. கிரிக்கெட்டில் சிறந்து விளங்க வேண்டுமென்றால் கிரிக்கெட்டின் மீது பைத்தியமாக இருக்க வேண்டும். கிரிக்கெட்டை ரசித்து ஆட வேண்டும். இந்த இரண்டும் முக்கியம். மற்றதெல்லாம் அப்புறம்தான். இதைத்தான் நான் அவனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
உங்களுக்குப் பிறகு வந்த திறமைசாலிகளில் உங்களை அதிகம் கவர்ந்தவர்கள் யார்?
குறிப்பாக ஒருவர் என்பதல்ல. இவர்கள் அனைவரது சாதனைகளையும் சிறப்புகளையும் நான் மதிக்கிறேன். கிரிக்கெட் என்பது 11 பேர் ஆடும் அணி விளையாட்டு. இதில் ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லோருமே நன்றாக ஆடுவது சாத்தியமில்லை. ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று பேர் நன்றாக ஆடலாம். எனவே எல்லாருடைய பங்களிப்பும் முக்கியம். எல்லாரையும் நான் சமமான அக்கறையோடு கவனித்து வருகிறேன்.
அணியிலுள்ள இளைஞர்களுக்கு நீங்கள் ஆலோசனை வழங்கியது பற்றி?
அது எப்போதுமே நடப்பதுதான். நான் சீனியராக இருக்கும்போது மட்டுமல்ல. ஜூனியராக இருந்தபோதும் அணியில் மற்றவர்களுடன் அவர்கள் ஆட்டம் பற்றிப் பேசுவேன். கிரிக்கெட்டைப் பற்றிப் பேசுவது எனக்கு எப்போதும் பிடிக்கும். தொடர்ந்து கலந்துரையாடல் நடக்க வேண்டும். அது இனியும் தொடரும். அப்போதுதான் வாழ்நாள் முழுவதும் புதிதுபுதிதாய்க் கற்றுக்கொண்டிருக்க முடியும்.
பாரத் ரத்னா விருது பெற்றிருக்கிறீர்கள். கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் இடம்பெறச் செய்யக் குரல் கொடுப்பீர்களா?
(சிரிக்கிறார்) விருது அறிவிக்கப்பட்டு 24 மணிநேரம்தான் ஆகியிருக்கிறது. அதற்குள் இவ்வளவு பெரிய விஷயத்தையெல்லாம் கேட்டால் என்ன சொல்வது? உங்கள் யோசனையை நினைவில் வைத்துக்கொள்கிறேன்.
இந்திய அணிக்கு ஏன் இந்திய கோச்சை நியமிக்கக் கூடாது?
என்னைப் பொறுத்தவரை கோச் இந்தியரா வெளிநாட்டுக்காரரா என்பது முக்கியமல்ல. கோச் என்பவர் அணியினரைப் புரிந்துகொண்ட அவர்களுக்கு நல்ல நண்பன்போலச் செயல்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். கவர் ட்ரைவ் எப்படி அடிப்பது என்று ஆடுபவர்கள் எல்லோருக்கும் தெரியும் ஆடச் சொல்லிக்கொடுப்பதல்ல கோச்சின் வேலை. ஒவ்வொருவரும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு உதவுவதே கோச்சின் வேலை. அத்தகைய கோச் எந்த நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago