தடுமாறும் இலங்கை மீண்டெழுமா? ஐதராபாத்தில் 3-வது ஒருநாள் போட்டி

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

முதல் 2 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த இலங்கை, நாளைய ஆட்டத்தில் மீண்டெழுந்து வெற்றி பெற வேண்டிய அவசியம் உள்ளது. மாறாக தொடரை வெல்வதில் இந்திய அணி கோலி தலைமையில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளது.

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர்களான அஜிங்க்ய ரஹானே, ஷிகர் தவன் ஆகியோர் உச்சகட்ட பார்மில் இருப்பதால் இந்தப் போட்டியிலும் அவர்களின் அதிரடி தொடரும் என்பதில் சந்தேகமில்லை. மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் சதமடித்த அம்பட்டி ராயுடு, இந்த முறையும் அதே 3-வது இடத்தில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர கேப்டன் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் இந்தியாவின் பேட்டிங்கிற்கு பெரும் பலமாகத் திகழ்கின்றனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின், அக்ஷர் படேல், ஜடேஜா கூட்டணியே இந்தப் போட்டியிலும் பந்துவீச்சை கவனிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி குமார் சங்ககாரா, ஜெயவர்த்தனா, கேப்டன் மேத்யூஸ் ஆகியோரையே பேட்டிங்கில் நம்பியுள்ளது. தொடக்க வீரர்களான குஷல் பெரேரா, தில்ஷான் ஆகியோர் தொடர்ந்து தடுமாறி வரும் நிலையில், சங்ககாரா, மேத்யூஸ் ஆகியோர் சிறப்பாக ஆடினால் மட்டுமே அந்த அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட முடியும்.

இலங்கையின் பந்துவீச்சு மிக மோசமாகவுள்ளது. முன்னணி பந்துவீச்சாளர்களான லசித் மலிங்கா, ரங்கனா ஹெராத் ஆகியோர் இல்லாத நிலையில், இலங்கை அணி 8 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியபோதும் இந்திய பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்தத் தொடருக்கு முன்பாக 2014-ல் இலங்கை 20 போட்டிகளில் 15-ல் வெற்றி கண்டது. இதில் 12 போட்டிகளில் அயல்நாட்டில் வென்றுள்ளது.

இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை 45 போட்டிகளில் 31 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது.

ஷிகர் தவன் 45 ரன்கள் எடுத்தால் 2,000 ரன்களை எட்டுவார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE