உகோ காலிறுதி: ஆஸி. - பாகிஸ்தான் போட்டி பதிவுகள்

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் இந்தியாவை சந்திக்கும் ஆஸ்திரேலியா

உலகக்கோப்பை காலிறுதியில் பாகிஸ்தானின் 214 ரன்கள் இலக்கைத் துரத்தி வந்த ஆஸ்திரேலியா 33.5 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அரையிறுதியில் இந்தியாவை சந்திக்கிறது.


அடிலெய்டில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் 3-வது காலிறுதியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 214 ரன்கள் வெற்றி இலக்கை ஆஸ்திரேலியா 33.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

34-வது ஓவரை சொஹைல் கான் வீச முதல் பந்து ஆஃப் ஸ்டம்பில் நல்ல அளவில் விழ, அதனை அலட்சியமாக ஆஃப் திசையில் மிகப்பெரிய சிக்சருக்குத் தூக்கினார் மேக்ஸ்வெல்.

பிறகு 5-வது பந்தை வாட்சன் ஆஃப் திசையில் டிரைவ் ஆடி பவுண்டரி விளாசினார். மட்டையை உயர்த்திய படியே ஷேன் வாட்சன் வந்தார். ஆஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இந்தியாவுடன் சிட்னியில் அரையிறுதியில் விளையாடுகிறது ஆஸ்திரேலியா.

வாட்சன் 66 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 64 ரன்கள் நாட் அவுட். மெக்ஸ்வெல் 29 பந்துகளில் 5 பவுண்டரிகல் 2 சிக்சர்களுடன் 44 நாட் அவுட்.

97 பந்துகள் மீதம் வைத்து ஆஸ்திரேலியா மிகப்பெரிய வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் தனி நபராக வஹாப் ரியாஸ் போராடினா. கடும் சவால் அளித்தார். ஆனால் பாகிஸ்தான் பீல்டிங் இதற்குக் கை கொடுக்கவில்லை. வாட்சன், மேக்ஸ்வெலுக்கு கேட்ச் விடப்பட்டது. எளிதான கேட்ச்கள். மேக்ஸ்வெலுக்கு கேட்ச் விடப்பட்டு 4 ஓவர்களில் ஆட்டம் முடிந்தது.

வஹாப் ரியாஸ் வீசிய 33-வது ஓவரில் ரியாஸ் பவுன்சர் வீச அதனை டீப் ஸ்கொயர் லெக் திசையில் ரசிகர்களுக்கு சிக்சர் அடித்தார் வாட்சன். பிறகு ஒரு பவுண்டரி. மேக்ஸ்வெலுக்கு கேட்ச் விடப்பட்ட பிறகு 4 ஓவர்களில் ஆட்டமே முடியும் நிலைக்கு வந்தது.

32-வது இஷான் அடில் ஓவரில் அலட்சியமாக எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்த மேக்ஸ்வெல் அடுத்த பந்தை சிக்சருக்கு அனுப்பினார். கேட்சை விட்ட பிறகே மேக்ஸ்வெல் அவசரமாக மேட்சை முடிக்கிறார்.

பாக். பீல்டிங் மோசம்: மேக்ஸ்வெலுக்கு கேட்ச் விடப்பட்டது

ஆட்டத்தின் 29-வது ஓவர் மீண்டும் இன்றைய சிறந்த பவுலர் இடது கை வேகப்பந்து வீசும் வஹாப் ரியாஸை கொண்டு வந்தார் மிஸ்பா. அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களில் இருந்தார். ரியாஸ் வீசிய பவுன்சரை கண்ணை மூடிக்கொண்டு அவர் சுற்ற பந்து தேர்ட் மேன் திசையில் உயரே பறந்து சென்றது, ஓடி வந்த சோஹைல் கான் கையை நீட்டினார் பந்து தரையில் விழுந்தது.

அருமையான வாய்ப்பு பறிபோனது. வாட்சனுக்கும், மேக்ஸ்வெலுக்கும் வஹாப் ரியாஸ் பந்தில் கேட்ச் விடப்பட்டது. மோசமான பீல்டிங். 29-வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள். மேக்ஸ்வெல் 9 ரன்களுடனும், வாட்சன் 44 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இருவருக்கும் கேட்ச் விடப்பட்டது.

பாகிஸ்தானுக்கு முக்கிய விக்கெட்: ஸ்மித் ஆட்டமிழந்தார்

ஆட்டத்தின் 27-வது ஓவரில் மிஸ்பா உல் ஹக் மீண்டும் வேகப்பந்து வீச்சைத் தெரிவு செய்து இஷான் அடிலைக் கொண்டு வந்தார். 4-வது பந்து நேராக ஸ்டம்ப்களுக்கு வந்த பந்து அதனை ஸ்மித் பிளிக் செய்ய முயன்று தோல்வி அடைந்தார், பந்து பேடைத் தாக்கியது நடுவர் தர்மசேனா கையை உயர்த்தினார்.

ஸ்மித் 69 பந்துகளில் 7 பவுண்டரிகளூடன் 65 ரன்களில் எல்.பி. ஆனார். பாகிஸ்தான் அணி 27 ஓவர்கள் முடிவில் 149/4. கிளென் மேக்ஸ்வெல் களமிறங்கியுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் நீண்ட நேரம் கழித்து பவுண்டரி ஒன்றை அடித்தார். அப்ரீடி வீசிய பந்தை லாங் ஆனில் விளாசினார். இது இவரது 7-வது பவுண்டரி.

ஸ்டீவ் ஸ்மித் 53 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரைசதம் எடுத்தார். ரஹத் அலி வீசிய பந்தை எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார் ஸ்மித்.

வஹாப் ரியாஸ் 6 ஓவர்கள் 24 ரன்கள் 2 விக்கெட். வஹாப் ரியாஸ் பேட்டிங் செய்த போது மிட்செல் ஸ்டார்க் அவரது பேட்டிங்கை கேலி செய்தார். இது இவரை கடுமையாக உசுப்பேற்ற தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனி நபராக போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேன் வாட்சனுக்கு எளிதான கேட்ச் விடப்பட்டது

உலகக்கோப்பை கிரிக்கெட் 3-வது காலிறுதியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 214 ரன்கள் இலக்கை எதிர்த்து திணறி வருகிறது ஆஸ்திரேலியா.

இந்நிலையில் ஆட்டத்தின் 17-வது ஓவரை வஹாப் ரியாஸ் வீச, முதல் பந்து அருமையான பவுன்சர். ஹூக் ஆடினார் வாட்சன், பந்து மட்டையின் மேல் விளிம்பில் பட்டு ஃபைன் லெக் திசையில் நின்று கொண்டிருந்த ரஹத் அலி கையில் நேராக போய் விழுந்தது. ஆனால் அவர் அதனை நழுவ விட்டார். வாட்சன் தற்போது 5 ரன்களுடன் ஆடி வருகிறார். ஸ்மித் 45 ரன்களில் ஆடி வருகிறார்.

ஆஸ்திரேலியா 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. கேட்சை கோட்டைவிட்டாரா, அரையிறுதி வாய்ப்பைக் கோட்டைவிட்டாரா? என்பது ஆட்ட முடிவில் தெரியும்.

பாகிஸ்தானுக்கு எதிராக 214 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி, 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் 35 ரன்களுடனும், வாட்சன் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை எளிதாக எட்டிவிடும் என கருதப்பட்ட நிலையில், 60 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது, பாகிஸ்தான் அணியின் போராட்ட முயற்சியைக் காட்டுகிறது.

முன்னதாக, 2.3-வது ஓவரில் சோஹைல் கான் பந்துவீச்சில் ஃபின்ச் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, 8.3-வது ஓவரில் வாஹப் ரியாஸ் பந்துவீச்சில் ராஹத் அலியிடம் கேட்ச் கொடுத்து வார்னர் ஆட்டமிழந்தார். அவர் 24 ரன்கள் சேர்த்திருந்தார்.

இதையடுத்து, சற்றே தடுமாறிய ஆஸ்திரேலிய அணி 10.4-வது ஓவரில் 3-வது விக்கெட்டை இழந்தது. ரியாஸ் பந்துவீச்சில் சோஹைல் மக்ஸூத்திடம் கேட்ச் கொடுத்து மைக்கேல் கிளார்க் ஆட்டமிழந்தார். அவர் 8 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார்.

பாகிஸ்தான் இன்னிங்ஸ்:

ஆஸி.யிடம் திணறிய பாகிஸ்தான் 213 ரன்கள் சேர்ப்பு

உலகக் கோப்பை 3-வது காலிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை 213 ரன்களில் ஆஸ்திரேலிய அணி சுருட்டியது.

பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு 214 ரன்கள் என்ற சற்றே எளிதான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியில் ஹாரிஸ் சோஹைல் அதிகபட்சமாக 41 ரன்களையும், மிஸ்பா உல் ஹக் 34 ரன்களையும் சேர்த்தனர். மக்ஸூத் 29 ரன்களையும், அப்ரிதி 23 ரன்களையும், உமர் அக்மல் 20 ரன்களையும் எடுத்தனர். ரியாஸ் 16 ரன்களும், இஷான் அடில் 15 ரன்களும் சேர்த்தனர். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஹாஸில்வுட் 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஃபவுல்க்னர், ஜான்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முந்தைய பதிவுகள்:

49.5-வது ஓவரில் ஃபவுல்க்னர் வீசிய பந்தில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து இஷான் அடில் ஆட்டமிழந்தார்.

43.6-வது ஓவரில் ஹாஸில்வுட் பந்துவீச்சில் 4 ரன்கள் எடுத்த நிலையில் சோஹைல் கான் ஆட்டமிழந்தார். அவரது கேட்சை பிடித்தார் ஹேடின்.

41.3-வது ஓவரில் ஹாஸில்வுட் பந்துவீச்சில் மக்ஸூத் ஆட்டமிழந்தார். அவரை கேட்சை ஜான்சன் பிடித்தார். மக்ஸூத் 44 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து, 42.2-வது ஓவரில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து ரியாஸ் ஆட்டமிழந்தார். அவர் 16 ரன்கள் சேர்த்தார்.

33.6-வது ஓவரில் ஹாஸில்வுட் பந்துவீச்சில் ஃபின்ச்சிடம் கேட்ச் கொடுத்து அப்ரிதி ஆட்டமிழந்தார். அவர் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார்.

29.1-வது ஓவரில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஃபின்ச்சிடம் கேட்ச் கொடுத்து உமர் அக்மல் ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.

26.4-வது ஓவரில் ஜான்சன் வீசிய பந்தில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சோஹைல். அவர் 57 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார்.

ஒரு சுவாரசியம்:

26-வது ஓவரில் மேக்ஸ்வெல் வீசிய பந்தை உமர் அக்மல் பவுண்டரிக்கு விரட்டினார். அதே நேரத்தில் ஸ்டம்பின் பெயில்களும் கீழே விழ, ஹிட் விக்கெட் என ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் செய்தனர். ஆனால் இதில் கள நடுவருக்கு சந்தேகம் இருந்ததால் 3-வது நடுவரிடம் அப்பீல் சென்றது. ரீப்ளேயில், விக்கெட் கீப்பர் ஹேடின் கை பட்டே பெயில்கள் கீழே விழுந்தது தெரிந்தது. தன் கை பட்டே பெயில்கள் விழுந்தும் ஏன் ஹேடின் அப்பீல் செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

முன்னதாக, அடிலெய்டில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

பாகிஸ்தான் வீரர்கள் அஹ்மத், ஷெசாத் இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் துவக்கினர். அஹ்மத் 10 ரன்கள் எடுத்திருந்தபோது 5-வது ஓவரில், ஸ்டார்க் வீசிய பந்தில் ஸ்லிப்பில் வாட்சன் பிடித்த அற்புதமான கேட்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரின் முதல் ஓவரிலேயே மற்றோரு துவக்க வீரர் ஷெசாத் 5 ரன்களுக்கு ஹேசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து இணைந்த மிஸ்பா - சோஹைல் ஜோடி பார்டனர்ஷிப்பில் 73 ரன்கள் சேர்த்து பாகிஸ்தானை பின்னடைவிலிருந்து மீட்க முயற்சித்தனர்.

ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாடான பந்துவீச்சில் பவுண்டரிகள் வருவது அரிதாக காணப்படுகிறது. பாகிஸ்தானின் ரன் சேர்ப்பும் வேகமெடுக்கவில்லை.

மேக்ஸ்வெல் வீசிய 24-வது ஓவரில் பொறுமையிழந்த மிஸ்பா பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயல, அது பவுண்டரிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஃபின்சின் கைகளில் தஞ்சமடைந்தது. 34 ரன்களுக்கு மிஸ்பா பெவிலியன் திரும்பினார்.

ஷெசாதை தொடர்ந்து களமிறங்கிய மிஸ்பா, தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்திருக்க வேண்டிய சூழல் உருவானது. ஹாஸில்வுட் வீசிய அந்தப் பந்து லெக் ஸ்டம்பை உரசி கீப்பரின் பக்கம் சென்றது. ஆனால் பெயில்ஸ் கீழே விழாததால் மிஸ்பா ஆட்டமிழந்ததாக அறிவிக்க முடியாமல் போனது.

எத்தையது இந்த ஆட்டம்?

ஆஸ்திரேலியா அணி லீக் சுற்றில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் தவிர, எஞ்சிய ஆட்டங்களில் சிறப்பாகவே ஆடி வந்துள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தானோ ஆரம்பத்தில் தடுமாறிய நிலையில், பின்னர் அதிலிருந்து மீண்டு தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

கடைசியாக 2005-ல் பெர்த்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பாகிஸ்தான், அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதில்லை. இதுதவிர அந்நிய மண்ணில் ஆடிய கடைசி 7 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுள்ளது. இதுபோன்ற விஷயங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.

ஆனால் கணிக்க முடியாத அணியான பாகிஸ்தானை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும். கடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்