பாகிஸ்தானுக்கு எதிராக இன்று பிரிஸ்பனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 42.4 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
உண்மையில் சொல்லப்போனால் 78/5 என்று இருந்த ஆஸ்திரேலியாவைப் பிடியிலிருந்து நழுவ விட்டது வழக்கமான பாகிஸ்தான். பிடியிலிருந்து விடுவித்தது, மேத்யூ வேட் (100 நாட் அவுட்), மேக்ஸ்வெல் (60) ஆகியோரின் ஆட்டமே. பாகிஸ்தானின் ‘பீல்டிங்கும்’ ஆஸ்திரேலியாவுக்குக் கைகொடுத்தது.
ஆனால் தொடக்கத்தில் மொகமது ஆமிர் அபாரமாக வீசி டேவிட் வார்னர் (7), ஸ்மித் (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி உற்சாகம் கொடுத்தார். மொகமது ஹபீஸை வைத்து இன்னொரு முனையில் தொடங்கியது ஆஸ்திரேலிய அதிரடி தொடக்கத்தை கட்டுப்படுத்தியது. ஆனால் வார்னரை பவுல்டு செய்த ஆமிர் பந்து அபாரமானது.
ஹபீஸ் 7 ஓவர்களில் 23 ரன்களையே விட்டுக் கொடுத்தார். இவரது ஓவர்களை ஏன் முடிக்கவில்லை என்பது கேப்டன் அசார் அலிக்கே வெளிச்சம். முன்னால் களமிறக்கப்பட்ட டிராவிஸ் ஹெட் (39 பந்துகளில் 39 ரன்கள்), கிறிஸ் லின் (12 பந்துகளில் 1 சிக்சருடன் 16) ஆகியோரும் ஹசன் அலி, இமாத் வாசிம் ஆகியோரிடம் வெளியேறினர். மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் இமாத் வாசிமிடம் ஆட்டமிழக்க 16.2 ஒவர்களில் ஆஸ்திரேலியா 78/5 என்று சரிவு கண்டது.
கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் இணைந்தனர், இதில் மேத்யூ வேட் செட்டில் ஆக முயற்சிக்கும் வேளையில் கிளென் மேக்ஸ்வெல் சக்தி வாய்ந்த ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் என்று அடிக்கத் தொடங்கினார். 56 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அபாயகரமாக திகழ்ந்த போது வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஓரு ஓவரை வேகம் குறைவாகவும் வேகம் அதிகமாகவும் மாறி மாறி வீசி மேக்ஸ்வெலை தடுமாறச் செய்து கடைசியில் வீழ்த்தினார். 14 ஓவர்களில் மேக்ஸ்வெல், வேட் ஜோடி 82 ரன்களைச் சேர்த்தனர். 31-வது ஓவரில் ஆஸ்திரேலியா 160/6 என்று இருந்தது. இப்போது கூட பாகிஸ்தான் கொஞ்சம் முயன்றிருந்தால் 200 ரன்களுக்கு மட்டுப்படுத்தியிருக்கலாம். மேக்ஸ்வெல் ஆட்டமிழக்கும் போது மேத்யூ வேட் 43 பந்துகளில் ஒரேயொரு பவுண்டரியுடன் 28 ரன்களையே எடுத்திருந்தார்.
பாக்னரும் 5 ரன்களில் மொகமது நவாஸிடம் வீழ்ந்தார். மேக்ஸ்வெல் ஆட்டமிழந்த பிறகே பவுண்டரிகள் வறண்டது. 32-வது ஓவர் முதல் 41-வது ஓவர் வரை பவுண்டரியே வரவில்லை. இந்த ஓவர்களில் 160/6 என்ற நிலையிலிருந்து ஆஸ்திரேலியா 41-வது ஓவர் முடிவில் 195/7 என்ற நிலையிலேயே தடுமாறியது. அப்போதும் 64 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 44 ரன்களில் இருந்த வேட், 42-வது ஓவரில் மொகமது நவாஸை லாங் ஆனில் சிக்ஸ் அடித்து அரைசதம் எடுத்தார்.
அதன் பிறகு வஹாப் ரியாஸை 2 பவுண்டரிகள் அடித்தார், இடையில் ஸ்டார்க், மொகமது ஆமிரை லெக் திசையில் சிக்ஸ் அடித்தார், இதிலும் பீல்டர் தேவையில்லாமல் முன்னால் வந்து நின்றதால் கேட்ச் வாய்ப்பு பறிபோனதோடு சிக்ஸ் ஆனது, பின்னால் நின்றிருந்தால் கேட்ச் பிடித்திருக்கலாம். அதன் பிறகு மொகமது ஆமிர் லெக் ஸ்டம்பில் வேகம் குறைந்த பந்தை வீச வேட் அதனை நீளமான பவுண்டரியில் எளிதாக சிக்ஸருக்குத்தூக்கினார். பிறகு ஹசன் அலி, ஆமிரை பவுண்டரிகள் என்று வேட் பாகிஸ்தானிடமிருந்து ஆட்டத்தைப் பறித்தார். 93 ரன்களில் ஒரு முறை ஆமிர் பந்து லெக்ஸ்டம்பில் பட்டது ஆனால் பைல் விழவில்லை. கடைசியில் கடைசி ஓவரில் கடைசி பந்தில் வேட் சதம் அடித்தார். 100 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 100. ஆஸ்திரேலியா 268 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும் இமாத் வாசிம், ஆமிர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர், வஹாப் ரியாஸுக்கு சாத்துமுறை, 6 ஓவர்களில் 42 ரன்கள்.
பாகிஸ்தான் பேட்டிங்கைத் தொடங்கிய பொது ஷர்ஜீல் கான் 1 பவுண்டரி ஒருசிக்சருடன் 18 ரன்களில் பாக்னர் பந்தை மிட் ஆனில் மேக்ஸ்வெலுக்கு அடித்து வெளியேறினார், அசார் அலி ரன் ஓடும்போது சிக்கல் ஏற்பட்டு பெவிலியன் திரும்பி பின்னால் களமிறங்கினார், மொகமது ஹபீஸ் பாக்னர் பந்தை எளிதில் எட்ஜ் செய்து வெளியேறினார். உமர் அக்மலுக்கு ஆஃப் கட்டர் பவுன்சரை ஸ்டார்க் வீச அதனை மிட் ஆனில் புல் ஆட நினைத்து 17 ரன்களுக்கு நன்றாக ஆடிய உமர் அக்மல் சோடை போனார். சிறந்த ஒருநாள் வீரர் பாபர் ஆஸம் பாட் கமின்ஸ் பந்தை ஸ்லிப்பில் ஸ்மித் கையில் அடித்தார். ரிஸ்வான் கமின்ஸ் பந்தில் மார்ஷிடம் கேட்ச் ஆனார். மொகமது நவாஸ், ஸ்டார்க்கின் ஃபுல் பந்துக்கு பவுல்டு ஆனார். மோசமான ஷாட். பாபர் ஆசம் மட்டுமே பாகிஸ்தானில் அதிகபட்சமாக 33 ரன்களை எடுத்தார், அசார் அலி மீண்டும் இறங்கி ஒன்றும் செய்ய முடியவில்லை. 42.4 ஓவர்களில் 176 ரன்களுக்குச் சுருண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் மேத்யூ வேட்.
ஆஸ்திரேலியா தரப்பில் பாக்னர் 4 விக்கெட்டுகளையும் கமின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago