சென்னையில் வரும் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வெல்லப்போவது யார் என உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
பார்க்கும் ரசிகர்களையே மூளையைக் கசக்க வைக்கும் இந்த மூளைக்காரர்களின் விளையாட்டில் முடிசூடா மன்னனாகத் திகழும் நடப்பு சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மாக்னெஸ் கார்ல்ஸெனை இந்தப் போட்டியில் சந்திக்கிறார்.
உலக செஸ்ஸில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஆனந்த், 6-வது முறையாக பட்டம் வெல்வாரா அல்லது முதல்முறையாக உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் களமிறங்கும் கார்ல்ஸென், ஆனந்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதுதான் உலக செஸ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
ஆனந்தும், கார்ல்ஸெனும் கடுமையான பயிற்சியை முடித்துவிட்டு களத்தில் சந்திக்கக் காத்திருக்கிறார்கள். இவர்கள் இருவருக்குமான வயது இடைவெளி ஒன்றல்ல, இரண்டல்ல….21. ஆனந்தின் வயது 43, கார்ல்ஸெனின் வயது 22. கார்ல்ஸெனைவிட 21 வயது மூத்தவர் ஆனந்த். இந்த வயது இடைவெளி நிச்சயம் கார்ல்ஸெனுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியாக விளையாடும்போது இருவருக்குமே மூளை சோர்வடையும். அறிவியல் கூற்றுபடி அதிக வயதுடையவர்களுக்கு விரைவாக மூளை சோர்வடையும் என கூறப்படுகிறது. அதனால் இந்த முறை கார்ல்ஸென் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர்கள் கூறியுள்ள நிலையில், உலகமே அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறது.
19 வயதில் உலகின் முதல் நிலை வீரராக உருவெடுத்த கார்ல்ஸென், இப்போது வரை தொடர்ந்து அந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இளம் வயதில் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தவர் என்ற சாதனையை இன்றும் தன்வசம் வைத்துள்ள கார்ல்ஸென், 2870 இ.எல்.ஓ. ரேட்டிங் புள்ளிகளை வைத்துள்ளார். செஸ் வரலாற்றில் எந்தவொரு வீரரும் இந்த ரேட்டிங் புள்ளியை எட்டியதில்லை. இதன்மூலம் முன்னாள் உலக சாம்பியனான ரஷியாவின் கேரி காஸ்பரோவின் சாதனையை (இ.எல்.ஓ.ரேட்டிங் 2851) தகர்த்தார் கார்ல்ஸென். அபார நினைவாற்றல் கொண்டவரான கார்ல்ஸெனுக்கு “மேட்ச் பிளே” முறையில் பெரிய அனுபவம் இல்லை என்பது அவருடைய பலவீனமாகக் கருதப்படுகிறது. இதேபோல் உலக செஸ் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இல்லை. போட்டியின் நடு மற்றும் இறுதிக் கட்டங்களில் லாவகமாக காய்களை நகர்த்தும் ஆற்றல் கொண்டவரான கார்ல்ஸென் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் ஒன்றல்ல… 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ஆனந்த். டபலோவ் போன்றவர்களை அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றவரான ஆனந்த், இந்த முறை தனது சொந்த ஊரான சென்னையில் விளையாடவிருப்பது அவருடைய கூடுதல் பலமாகும். இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டரான ஆனந்த், எப்போதுமே சரிவிலிருந்து மீண்டு எதிராளியை வீழ்த்தும் ஆற்றல் பெற்றவர். கடந்த இரு உலக செஸ் போட்டிகளிலும் ஆரம்பத்தில் தடுமாறிய ஆனந்த், பின்னர் சிறப்பாக ஆடி டபலோவ், போரீஸ் கெல்ஃபான்ட் ஆகியோரை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
கடந்த 3 உலக செஸ் போட்டிகளிலும் மேட்ச் பிளே முறையில்தான் ஆனந்த் வாகை சூடினார். போட்டியின் தொடக்கத்தில் நுட்பமாக காய்களை நகர்த்தக்கூடிய ஆற்றல் பெற்றவர். ஆனந்தின் மதிநுட்பமும் கூர்மையான திறனும் அவருக்கு பெரிய பலம் ஆகும். அதனால் இந்த முறை ஆனந்த் சாம்பியன் ஆவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
குழந்தை கார்ல்ஸென்
1991-ல் சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் அலெக்ஸி டிரீவை வீழ்த்தி ஆனந்த் காலிறுதிக்கு முன்னேறினார். அப்போது கார்ல்ஸென் ஒரு வயதைக்கூட எட்டாத குழந்தையாக இருந்தார். அன்று குழந்தையாக இருந்த கார்ல்ஸென், இப்போது ஆனந்துடன் போட்டியிடவிருக்கிறார். 1991-க்குப் பிறகு ஆனந்த் இப்போதுதான் சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடவுள்ளார்.
தேர்வானது எப்படி?
நடப்பு சாம்பியனான ஆனந்த் கடந்த 2012-ல் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி சாம்பியன் ஆனார். அதன்மூலம் இந்த உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார். லண்டனில் நடைபெற்ற உலக செஸ் போட்டிக்கான “கேன்டிடேட்” போட்டியில் ரஷியாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி உலக செஸ் போட்டியில் விளையாட தகுதி பெற்றார் கார்ல்ஸென்.
சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ள ஹயத் ரீஸென்ஸி ஹோட்டலை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆகஸ்டில் சென்னை வந்த கார்ல்ஸென், தமிழகத்தைச் சேர்ந்த 7 வயது முதல் 17 வயது வரையிலான வீரர்களுடன் செஸ் விளையாடினார். தொடர்ச்சியாக 20 போட்டிகளில் விளையாடிய கார்ல்ஸென் 4-ல் தோல்வி கண்டார். 6 போட்டிகளை டிரா செய்தார்.
ஹெட் டூ ஹெட்
ஆனந்தும், கார்ல்ஸெனும் கிளாசிக்கல் நாக் அவுட் செஸ் போட்டிகளில் இதுவரை மோதியதில்லை. ஒரு போட்டித் தொடரில் (அதாவது பல வீரர்கள் பங்கேற்பது) இருவரும் விளையாடியிருக்கின்றனர். ஆனால் இருவருக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் பிரத்யேக போட்டித் தொடர் எதுவும் நடைபெற்றதில்லை.
2005 முதல் தற்போது வரையில் இருவரும் 62 போட்டிகளில் மோதியிருக்கிறார்கள். அதில் ஆனந்த் 15 முறையும், கார்ல்ஸென் 11 முறையும் வெற்றி கண்டுள்ளனர். 36 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இதில் 29 கிளாசிக்கல் செஸ் போட்டியாகும். இந்த முறையிலான போட்டியில் ஆனந்த் 6 முறையும், கார்ல்ஸென் 3 முறையும் வெற்றி கண்டுள்ளனர். 20 போட்டி டிராவில் முடிந்துள்ளது. கிளாசிக்கல் செஸ்ஸில் பெரும்பாலான போட்டிகளில் ஆனந்த் கறுப்பு காய்களுடன் விளையாடி வெற்றி கண்டுள்ளார்.
யாருக்கு வாய்ப்பு?
உலக செஸ் போட்டியின் வெற்றி வாய்ப்பு குறித்துப் பேசிய இந்தியாவின் கிராண்ட்மாஸ்டரான சசி கிரண், “கடும் சவால் நிறைந்த போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். ஆனந்த் சாம்பியன் ஆக வாய்ப்புள்ளது. எனினும் போட்டி டைபிரேக்கருக்கு சென்றால், அது கார்ல்ஸெனுக்கு சாதகமாக அமையலாம்” என்றார்.
மகளிர் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரான இந்தியாவின் கொனேரு ஹம்பி கூறுகையில், “இதுபோன்ற போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை முன்கூட்டியே கணிப்பது கடினமானது. கடுமையான சவாலை இந்தப் போட்டியில் காணலாம்” என்றார்.
ஆனந்தின் ஆர்வம்
வானியல், வாகனத்தில் பயணிப்பது, கணினி விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர் ஆனந்த். சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை ஆகியவை ஆனந்த் அடிக்கடி செல்லக்கூடிய இடங்கள். மார்கழி மாதத்தில் இசைக் கச்சேரிகளுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள ஆனந்த், புத்தகப் பிரியரும்கூட.
கார்ல்ஸெனின் பொழுதுபோக்கு
கார்ல்ஸெனுக்கு செஸ் தவிர கால்பந்து, பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகளிலும் அலாதியான ஆர்வம் கொண்டவர். நகைச்சுவை புத்தகங்கள் வாசிப்பதில் அதீத ஈடுபாடு கொண்டவர்.
ரஷியர்கள் இல்லாத போட்டி
92 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷிய மொழி பேசாத இருவர் விளையாடவுள்ள உலக செஸ் போட்டி இதுவாகும். 1921-ம் ஆண்டு நடைபெற்ற உலக செஸ் போட்டியில் ஜெர்மனியின் இம்மானுவேல் லஸ்கரும், கியூபாவின் ஜோஸ் ரால் கேபாபிளான்சாவும் மோதினர். அவர்கள் இருவருக்குமே ரஷிய மொழி தெரியாது. அதன்பிறகு 92 ஆண்டுகள் கழித்து இப்போது ரஷிய மொழி தெரியாத ஆனந்தும், கார்ல்ஸெனும் மோதவுள்ளனர். 2010 உலக செஸ் போட்டியில் ஆனந்திடம் தோல்வி கண்ட டபலோவ் பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும்கூட, அவர் ரஷிய மொழி பேசக்கூடியவர்.
போட்டி நடைபெறும் முறை
இந்தப் போட்டி மொத்தம் 12 சுற்றுகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு சுற்றிலும் இருவருக்கும் முதல் 40 காய் நகர்த்துதலுக்கு தலா 2 மணி நேரம் வழங்கப்படும். அடுத்த 20 காய் நகர்த்துதலுக்கு தலா ஒரு மணி நேரம் வழங்கப்படும். அதன்பிறகு இருவருக்கும் தலா 15 நிமிடங்கள் வழங்கப்படும். 61-வது நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு காய் நகர்வுக்கும் தலா 30 விநாடிகள் நேரம் அதிகரிக்கப்படும். இதில் இருவரும் தலா 6 சுற்றுகளில் வெள்ளைக் காயுடனும், தலா 6 சுற்றுகளில் கறுப்பு காயுடனும் விளையாடுவார்கள்.
இதில் வெற்றி பெறுபவருக்கு ஒரு புள்ளியும், போட்டி டிராவில் முடிந்தால் இருவருக்கும் தலா அரை புள்ளியும் வழங்கப்படும். முதலில் 6.5 புள்ளிகளை எட்டுபவர் சாம்பியன் ஆவார். ஒருவேளை 12 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும் பட்சத்தில் டைபிரேக்கர் முறை மூலம் வெற்றி தீர்மானிக்கப்படும்.
டைபிரேக்கர் முறையில் 4 போட்டிகள் நடத்தப்படும். இதில் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும். அதில் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 விநாடிகள் நேரம் அதிகரிக்கப்படும். ஒருவேளை இந்த 4 டைபிரேக்கர் போட்டிக்குப் பிறகு இருவரும் சமநிலையில் இருக்கும் பட்சத்தில், அதன்பிறகு இரு டைபிரேக்கர் கேம்கள் நடைபெறும். அதில் ஒவ்வொருவருக்கும் தலா 5 நிமிடங்கள் வழங்கப்படும். ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 3 விநாடிகள் நேரம் அதிகரிக்கப்படும். இதேபோன்று 5 கேம்கள் நடத்தப்பட்ட பிறகும் இருவரும் சமநிலையில் இருந்தால், “சடன் டெத் கேம்” என்ற முறையில் வெற்றி தீர்மானிக்கப்படும். அதில் வெள்ளைக் காய்களுடன் விளையாடுபவருக்கு 5 நிமிடங்களும், கறுப்புக் காய்களுடன் விளையாடுபவருக்கு 4 நிமிடங்களும் வழங்கப்படும். இதில் 61-வது நகர்த்தலில் இருந்து 3 விநாடிகள் நேரம் அதிகரிக்கப்படும். இதுவும் டையில் முடிந்தால், கறுப்புக் காய்களுடன் விளையாடியவர் சாம்பியன் ஆவார்.
ரூ.14 கோடி பரிசு
இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.14 கோடியாகும். இதில் வெற்றி பெறுபவருக்கு 60 சதவீதமும், தோல்வியடைபவருக்கு 40 சதவீதமும் பரிசாக அளிக்கப்படும்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் போட்டி
1972-ம் ஆண்டில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் அமெரிக்காவின் பாபி ஃபிஷர்-சோவியத் யூனியனின் போரீஸ் ஸ்பாஸ்கி ஆகியோர் மோதினர். அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையிலான பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் இந்தப் போட்டி நடைபெற்றதால் அது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பாபி ஃபிஸர் வெற்றி கண்டார். இதன்மூலம் உலக செஸ்ஸில் சோவியத்தின் 24 ஆண்டுகால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. உலக செஸ்ஸில் அந்தப் போட்டி என்றும் மறக்க முடியாத போட்டியாகும். அதன்பிறகு இப்போது சென்னையில் நடைபெறவுள்ள ஆனந்த்-கார்ல்ஸன் இடையிலான போட்டிதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago