துலீப் டிராபி: மத்திய மண்டலம் சாம்பியன்

துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியில் மத்திய மண்டல அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தெற்கு மண்டலத்தை தோற்கடித்து சாம்பியன் ஆனது. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய மண்டல அணி முதல்முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது.

டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மத்திய மண்டலம் 276 ரன்களும், தெற்கு மண்டலம் 379 ரன்களும் குவித்தன. பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆடிய மத்திய மண்டலம் 403 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, 301 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த தெற்கு மண்டலம் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 121, பாபா அபராஜித் 30 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

கடைசி நாளான நேற்று தெற்கு மண்டலத்தின் வெற்றிக்கு 117 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ராகுல் 130 ரன்களிலும், அபராஜித் 56 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்தவர்கள் விரைவாக வெளியேறினர். இதனால் தெற்கு மண்டலம் 88.4 ஓவர்களில் 291 ரன்களுக்கு சுருண்டது. மத்திய மண்டலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மத்திய மண்டல அணியின் சுழற்பந்து வீச்சாளர் மோர்ட்டஸா, பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் சக்ஸேனா இரு விக்கெட்டு களையும் வீழ்த்தினர். இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ராகுல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE