சென்னை லீக் கால்பந்து போட்டியின் சீனியர் டிவிசன் பிரிவில் நடப்பு சாம்பியன் ஏரோஸ் எப்.சி.-ஏஜிஓஆர்சி (தலைமைக் கணக்காளர் மனமகிழ் மன்றம்) அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் (சிஎப்ஏ) இணைந்து நடத்தும் சென்னை லீக் கால்பந்து போட்டியின் சீனியர் டிவிசன் போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி குழுமங்களின் தலைவர் பாபு மனோகரன் கலந்து கொண்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சீனியர் டிவிசன் போட்டியைத் தொடங்கி வைத்தார்.
முதல் நாளில் ஏரோஸ் அணியும், ஏஜிஓ அணியும் மோதின. இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்றாலும், சந்தோஷ் டிராபியில் தமிழக அணிக்காக விளையாடிய சுதாகர், ரீகன், எடிசன் ஆகியோர் ஏஜிஓ அணியில் இடம்பெற்றிருந்ததால் அந்த அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே ரீகன்-சுதாகர் கூட்டணி அசத்தலாக ஆட, ஏரோஸ் வீரர்கள் சூசைராஜ், திமோத்தி, சனத் ராய், வைசாகன், மாற்று வீரராக களம்புகுந்த மசூர் ஷெரீப் ஆகியோர் அவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாட ஆட்டம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்றது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஏஜிஓ அணிக்கு நல்ல கோல் வாய்ப்புகள் கிடைத்தன. முதல் வாய்ப்பை ரீகன் கோட்டைவிட்டார்.
இதன்பிறகு மிட்பீல்டில் இருந்து சுதாகர் அசத்தலாக ‘பாஸ்’ செய்த பந்தை மெர்பின் வீணடித்தார். ஏரோஸ் கோல் கீப்பர், கோல் கம்பத்தின் அருகில் இல்லாத நிலையில், மிக எளிதாக கோலடிக்க வேண்டிய நிலையில் பந்தை ரீகனிடம் ‘பாஸ்’ செய்ய முயன்று வெளியில் அடித்தார் மெர்பின்.
இதன்பிறகு மற்றொரு ப்ரீகிக் வாய்ப்பையும் கோட்டைவிட்டது ஏஜிஓ. 30-வது நிமிடத்தில் ஏரோஸ் அணிக்கு கிடைத்த கோல் வாய்ப்பு நூலிழையில் தவறியது. கார்னர் கிக் வாய்ப்பில் திமோத்தி தலையால் முட்ட, அது கோல் கம்பத்தின் அருகில் விழ, ஏஜிஓ கோல் கீப்பர் அற்புதமாக ‘சேவ்’ செய்தார்.
ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் எதிரணியின் கோல் கம்பத்தின் அருகே இருந்த பந்து செலஸ்டின் கைக்கு கிடைக்க, அதை சூப்பராக விசாகனிடம் பாஸ் செய்தார். அதை அவர் கோலாக்க, முதல் கோல் விழுந்தது. ஏரோஸ் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து ஏஜிஓ அணியில் மூர்த்திக்குப் பதில் வினோத் குமார் களமிறங்கினார். மிட்பீல்டரான வினோத் குமார் தடுப்பாட்டக்காரராக களம்புகுந்தது குறிப்பிடத்தக்கது.
இதன்பிறகு ஏஜிஓ கோலடிக்க போராடியது. அதற்கு 39-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. ஏரோஸ் வீரர் சனத்ராய், ஸ்டிரைக்கர் ரீகனை கீழே தள்ள ஏஜிஓ அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாகப் பயன்படுத்திய நவீன் குமார் கோலடிக்க ஸ்கோர் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
ஆனால் இந்த சமநிலை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அடுத்த 3-வது நிமிடத்தில் (42-வது நிமிடம்) வலது எல்லையில் இருந்து பந்தை அற்புதமாகக் கடத்திய மசூர் ஷெரீப், சுமார் 15 அடி தூரத்தில் இருந்து துல்லியமாக கோலடித்தார். இதன்பிறகு கிடைத்த மற்றொரு நல்ல வாய்ப்பை ஏரோஸ் வீரர் வைசாகன் நழுவவிட்டார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஏரோஸ் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டம் மந்தமாக சென்ற நிலையில் ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது ஏஜிஓ. அந்த அணியின் ஜோபின் கொடுத்த ‘பாஸில்’ ரீகன் கோலடித்தார். இதன்பிறகு இரு அணிகளும் வெற்றிக் கோலை அடிக்க போராடினாலும், கடைசி வரை அதற்கு பலன் கிடைக்காமல் போகவே, ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ஏமாற்றம் அளிக்கிறது
ஏஜிஓ அணியின் பயிற்சியாளர் விஜயகுமார் கூறுகையில், “வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஆட்டம். ஆனால் 6 கோல் வாய்ப்புகளை கோட்டைவிட்டதால் வெற்றியை இழந்திருக்கிறோம். இது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. இனிவரும் போட்டிகளில் இந்தத் தவறை சரி செய்து வெற்றி பெற முயற்சிப்போம்” என்றார்.
பலவீனமான பின்களம்
ஏரோஸ் அணியின் பயிற்சியாளர் தியாகராஜன் கூறுகையில், “இடது பின்களம் பலவீனமாக இருந்ததால் வெற்றிபெற முடியாமல்போனது. அது அடுத்த ஆட்டத்தில் சரி செய்யப்படும். ஆனால் ஒட்டுமொத்த ஆட்டம் என்று எடுத்துக் கொண்டால் எங்கள் வீரர்களின் செயல்பாடு திருப்தியளிக்கிறது.
வைசாகன் இதுவரை கல்லூரிக்காக விளையாடி வந்தவர். இப்போதுதான் தொழில்முறை போட்டியில் களமிறங்கியிருக்கிறார். அதனால் கொஞ்சம் பதற்றமடைகிறார். இது முதல் ஆட்டம்தான். சூழலுக்கு ஏற்றவாறு மாறிவிட்டால் வரும் போட்டிகளில் எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள்” என்றார்.
ஊடக ஆட்டம்
சீனியர் டிவிசன் போட்டியின் தொடக்க விழாவுக்கு முன்னதாக பத்திரிகை செய்தியாளர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கான கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில் பத்திரிகை செய்தியாளர்கள் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
இன்றைய ஆட்டங்கள்
சீனியர் டிவிசன் லீக்
தமிழ்நாடு காவல் துறை
Vs
சென்னை சுங்க வரித்துறை
முதல் டிவிசன் லீக்
மத்திய உற்பத்தி வரித்துறை
Vs
ஸ்போர்ட்டிங் ஸ்டார்
போட்டி நேரம்: மதியம் 3 மணி முதல்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago