உலக செஸ் சாம்பியன்ஷிப் பரபரப்பான முதல் ஆட்டம்

ஆனந்த் - கார்ல்சன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் பரபரப்பாக நடந்தது.

ஆனந்த் - கார்ல்சன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவின் சூச்சி நகரில் நேற்று தொடங்கியது. மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியின் முதல் சுற்றில் ஆனந்த் வெள்ளைக் காய்களுடனும் கார்ல்சன் கருப்புக் காய்களுடனும் ஆடினார்கள். இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.

டி4 காய் நகர்த்தலுடன் ஆட்டத்தைத் தொடங்கினார் ஆனந்த். சென்றமுறை முதல் 2 ஆட்டங்களும் விரைவாக முடிந்து டிரா ஆனதால் இந்த தடவை வித்தியாசமான முடிவு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். 12வது காய் நகர்த்தலின்போது, ஆனந்த் தன் இரு குதிரைகளையும், கார்ல்சன் இரு பிஷப்களையும் இழந்திருந்தார்கள். 13வது நகர்த்தலுக்குப் பிறகு கார்ல்சன் 30 நிமிடங்கள் பின் தங்கியிருந்தார். பலருக்கும் இது ஆச்சரியத்தைக் கொடுத்தது. 15வது காய் நகர்த்தல் முடிந்தபிறகு இருவரும் டிராவை விரும்பாமல் வெற்றி என்கிற இலக்கு நோக்கி நகர்வதாகத் தெரிந்தது.

19வது நகர்த்தலில் இரண்டு ராணிகளும் வெளியேறி ஆட்டம் இன்னும் அதிகமாக நீள்வதற்கான வாய்ப்பு உருவாகியது. இது கார்ல்சனுக்குப் பலமானது என்பதால் ஆனந்த் அதைத் தவிர்த்தார். 21வது நகர்த்தலில் ஆனந்துக்கு இருந்த சாதகமான நிலை பறிபோனது. கார்ல்சன் நன்கு விளையாடிக்கொண்டிருந்தார். ஆனந்த் ரசிகர்கள் பதறிப் போனார்கள். 23வது நகர்த்தலின்போது ஆனந்த், பிஷப்பையும் கார்ல்சன் குதிரையையும் இழந்தார்கள். தோல்வியிலிருந்து தப்பிக்க, டிராவை நோக்கி ஆடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் ஆனந்த். கார்ல்சன் கூலாக இருக்க, ஆனந்த் டென்ஷனுடன் காணப்பட்டார்.

26வது நகர்த்தலில், இருவரும் தலா ஒரு யானையை இழந்தார்கள். மூன்று முடிவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு என்று 26வது நகர்த்தலின் போது தெரிந்தது. அதேசமயம், கார்ல்சன் ஆதிக்கத்துடன் இருப்பதையும் உணர முடிந்தது. ஆனால் Qe3 என்கிற 27வது நகர்த்தலில் ஆனந்த் சுதாரித்துக்கொண்டார். அப்போது கார்ல்சன் வெற்றியை நோக்கி கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE