சீனியர் டிவிசன் லீக்: ஏரோஸ்-ஏஜிஓ இன்று மோதல்

By ஏ.வி.பெருமாள்

செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் இணைந்து நடத்தும் சென்னை லீக் கால்பந்து போட்டியின் சீனியர் டிவிசன் லீக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஏ.ஜி.ஓ.ஆர்.சி. (தலைமைக் கணக்காளர் மனமகிழ் மன்றம்), தமிழ்நாடு போலீஸ், ஐசிஎப், இந்தியன் வங்கி, தெற்கு ரயில்வே, ரிசர்வ் வங்கி, இந்திய உணவுக்கழகம் (எப்சிஐ), ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ், சென்னை சிட்டி போலீஸ், சாய், சென்னை சுங்க வரித்துறை, ஏரோஸ் எப்.சி. ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் நடப்பு சாம்பியன் ஏரோஸ், ஏ.ஜி.ஓ., ஐசிஎப், சென்னை சுங்க வரித்துறை, ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் அணிகளிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரீகன், சுதாகர் பலம்

போட்டியின் முதல் நாளான இன்று நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஏரோஸ் எப்.சி., ஏ.ஜி.ஓ.ஆர்.சி. அணிகள் மோதுகின்றன. ஏ.ஜி.ஓ. அணி முன்னணி வீரர்களின் வருகையால் பலம் பெற்றுள்ளது. சந்தோஷ் டிராபியில் தமிழக அணிக்காக விளையாடிய ஸ்டிரைக்கர் ரீகன், தமிழக அணியின் கேப்டனாக இருந்த சுதாகர் உள்ளிட்ட 7 பேர் அந்த அணிக்காக களமிறங்குகின்றனர்.

முன்களம், நடுகளம் என இரண்டிலும் மிக வலுவாக உள்ள ஏ.ஜி.ஓ. அணி, இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. வலுவான வீரர்களைக் கொண்டுள்ள ஏ.ஜி.ஓ. அணிக்கு சாம்பியனாக வேண்டிய கட்டாயமும், நெருக் கடியும் அதிகமாக உள்ளது.

வலுவான நடுகளம்

இது தொடர்பாக அந்த அணியின் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் கேட்டபோது, “எங்கள் அணி 4-4-1-1 பார்மட்டில் களமிறங்கும். ரீகன் முதல் ஸ்டிரைக்கராகவும், சுதாகர் 2-வது ஸ்டிரைக்கராகவும் செயல்படுவார்கள். சந்தோஷ் டிராபியில் கலக்கிய இவர்களின் அதிவேக ஆட்டமும், அனுபவமும் எங்களுக்கு கை கொடுக்கும்.

இதேபோல் எங்களின் நடுகளமும் மிக பலமாக உள்ளது. ஜோபின், வினோத் குமார், ஷெரின், மெர்வின், விக்ரம் பாட்டில் என 5 முன்னணி நடுகள வீரர்கள் எங்களுக்கு பலம் சேர்க்கின்றனர். இவர்களில் விக்ரம் பாட்டிலுக்கு சில அலுவலக நடைமுறையை முடிக்க வேண்டியுள்ளது. அது முடிந்துவிட்டால் அவர் இந்தப் போட்டியில் களமிறங்குவார்.

எங்களின் பின்களம் வலுவானது என்று சொல்லமுடியாவிட்டாலும், பலம் வாய்ந்த ஸ்டிரைக்கர்களும், மிட்பீல்டர்களும் இருப்பதால் பின்களத்தைப் பற்றி கவலைப் பட வேண்டியதில்லை. சைதாப் பேட்டை ஆசிரியர் கல்லூரி வளாகத்தில் 3 மாத பயிற்சியை முடித்து சவாலை சந்திக்கத் தயாராக இருக்கிறோம். ஏரோஸை வீழ்த்த முடியும் என நம்புகிறோம்.

தடையில்லா சான்றிதழ்

எங்கள் அணிக்கு ஒரு நைஜீரி யரைக் கொண்டு வருவதற்காக சென்னை கால்பந்து சங்கத்திடம் (சி.எப்.ஏ) தடையில்லா சான்றிதழ் கேட்டிருந்தோம். 3 மாதங்களாகியும் இதுவரை கிடைக்கவில்லை. அது தொடர்பாக இந்திய சம்மேளனத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என சிஎப்ஏ தெரிவித்துள்ளது” என்றார்.

திமோத்தியின் அதிவேகம்

நடப்பு சாம்பியனான ஏரோஸ் எப்.சி. அணியில் இரண்டு நைஜீரியர்கள், கேரளத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் உள்ளனர். சாம்பியன்ஷிப்பை தக்கவைப்பதில் தீவிரமாக உள்ள ஏரோஸ், ஏ.ஜி.ஓ. அணியின் சவாலை சந்திக்கத் தயாராக இருக்கிறது.

2003-ல் ஏரோஸ் கால்பந்து கிளப் தொடங்கப்பட்டதில் இருந்தே பயிற்சியாளராக இருக்கும் கே.தியாகராஜனிடம் கேட்டபோது, “எங்கள் அணி 4-4-2 என்ற பார்மட்டில் களமிறங்கும். திமோத்தி, செலஸ்டின் என இரு நைஜீரியர்கள், 5 கேரள வீரர்கள் எங்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஸ்டிரைக்கர் திமோத்தியின் மிகப்பெரிய பலம் அவருடைய வேகம்தான். அசுர வேகத்தில் பந்தைக் கடத்திச் செல்லக்கூடியவர். திமோத்தியும், விசாகனும் (கேரளம்) ஸ்டிரைக்கர்களாக செயல்படுவர். செலஸ்டின், ஷாஜன், மசூர், சூசை ராஜ் ஆகியோர் எங்கள் நடுகளத்திற்கு பலம் சேர்க்கிறார்கள்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த வரான சூசைராஜ், கடந்த சென்னை லீக்கில் அபாரமாக ஆடியவர். இந்த முறையும் அவர் சிறப்பாக ஆடுவார் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல் எங்களின் வலது பின்கள ஆட்டக்காரர் அருண்ராஜ் 5 சென்னை லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர். மிகுந்த நம்பிக்கையோடு ஆடக் கூடியவரான அவர், பின்களத்தில் எங்களின் தூணாக இருப்பார்.

பயிற்சியாளர் வேதனை

கடந்த சென்னை லீக்கில் எங்கள் அணிக்காக விளையாடியவர்களில் 6 பேர் மட்டுமே இந்த முறை இடம்பெற்றுள்ளனர். புதிய வீரர்கள் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது எங்கள் கிளப் மட்டும்தான். கடந்த முறை நாங்கள் சாம்பியன் பட்டம் வென்றபோதும் சந்தோஷ் டிராபி அணியில் எங்கள் வீரர்களில் ஒருவருக்குகூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது வேதனையான விஷயம். இதனால் எங்கள் கிளப்பில் சேர்வதற்கு தமிழக வீரர்கள் தயங்குகிறார்கள். எனவே அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்துதான் எங்கள் அணிக்கு வீரர்களைக் கொண்டு வருகிறோம்” என வருத்தத்தோடு தெரிவித்தார்.

சந்தோஷ் டிராபி பயிற்சியாளர்

“அடுத்த ஆண்டு முதல் சென்னை லீக்கிற்கு முன்னதாகவே சந்தோஷ் டிராபி அணிக்கான பயிற்சியாளரையும், உதவிப் பயிற்சியாளரையும் நியமிக்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் அவர்கள் சென்னை லீக் போட்டியை பார்த்து தகுதியான வீரர்களை தமிழக அணிக்கு தேர்வு செய்ய முடியும்.

சென்னை லீக்கை அடிப்படை யாக வைத்து தமிழக அணியை உருவாக்கும்போது பலமான அணி கிடைக்கும்” என தியாகராஜன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

விளையாட்டு

41 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்