தோனியின் சாதனை தொடர்கிறது

விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு தலைமை வகித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 150 போட்டிகளுக்கு தலைமை வகித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்தார் தோனி.

அப்போட்டியில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தைக் காட்டிய தோனி 40 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இது அவரது 50-வது அரைசதமாகவும் அமைந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் டி20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனிக்கு உள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 174 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர் என்ற சாதனை முகமது அசாருதீனிடம் உள்ளது. மேலும் 25 போட்டிகளில் கேப்டனாக இருக்கும் பட்சத்தில் தோனி புதிய சாதனையைப் படைப்பார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 90 வெற்றி பெற்றுத் தந்த வீரர் என்ற சாதனை அசாரூதினிடம் உள்ளது. இப்போது வரை தோனி கேப்டனாக இருந்து இந்திய அணி 87 போட்டிகளில் வென்றுள்ளது. மேலும் 4 போட்டிகளில் தோனி தலைமையில் இந்தியா வெல்லும் போது அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த இந்திய கேப்டன் என்ற பெருமையைப் தோனி பெறுவார். 2007-ம் ஆண்டில் இந்திய அணிக்கு தோனி கேப்டன் ஆனார்.

சர்வதேச அளவில் அதிக ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக தலைமை வகித்த வீரர் என்ற சாதனை ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கிடம் உள்ளது. அவர் 230 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.

-பி.டி.ஐ.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE