அயாக்ஸை பந்தாடியது பார்சிலோனா
அயாக்ஸுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் 4 முறை ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஆர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி பெற்றார்.
பாரீஸ்
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் அயாக்ஸ் அணியைத் தோற்கடித்தது. பார்சிலோனா வீரர் லயோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோலடித்தார்.
பார்சிலோ அணியின் “ஹோம் கிரவுண்ட்”டான கேம்ப் நெளவில் புதன்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் பார்சிலோனாவும், நெதர்லாந்தைச் சேர்ந்த அஜாக்ஸ் அணியும் மோதின. இதில் அபாரமாக ஆடிய லயோனல் மெஸ்ஸி, 22-வது நிமிடத்தில் கோலடிக்க, பார்சிலோனாவுக்கு முதல் கோல் கிடைத்தது. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பார்சிலோனா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் (55-வது நிமிடம்) மெஸ்ஸி தனது 2-வது கோலை அடிக்க, பார்சிலோனா 2-0 என்ற நிலையை எட்டியது. தொடர்ந்து வேகம் காட்டிய பார்சிலோனா 69-வது நிமிடத்தில் 3-வது கோலை அடித்தது. இந்த கோலை அந்த அணியின் ஜெரார்டு பிக்கியூ அடித்தார். அதைத் தொடர்ந்து 75-வது நிமிடத்தில் மெஸ்ஸி தனது ஹாட்ரிக் கோலைப் பதிவு செய்து உள்ளூர் ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தார். எனினும் அடுத்த 2-வது நிமிடத்தில் அயாக்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பில் அந்த அணியின் சிக்தார்ஸான் அடித்த பந்தை பார்சிலோனா கோல் கீப்பர் விக்டர் வால்டஸ் அற்புதமாக தடுக்க, அயாக்ஸ் அணியின் ஆறுதல் கோல் வாய்ப்பும் ஏமாற்றத்தில் முடிந்தது.
மெஸ்ஸி சாதனை
இந்தப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 4 முறை ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.
சாம்பியன்ஸ் லீக்கில் இதுவரை 80 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 62 கோல்கள் அடித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை மெஸ்ஸியிடம் இழந்த ரியல் மாட்ரிட் வீரர் ரொனால்டோ, சாம்பியன்ஸ் லீக்கில் 93 போட்டிகளில் விளையாடி 53 கோல்களை அடித்துள்ளார்.
செல்சியா அதிர்ச்சி தோல்வி
லண்டனில் நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் பேசல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் செல்சியா அணியைத் தோற்கடித்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் (45-வது நிமிடம்) செல்சியா அணியின் ஆஸ்கார் கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் 70-வது நிமிடம் வரை செல்சியாவின் கையே ஓங்கியிருந்தது.
ஆனால் 71-வது நிமிடத்தில் பேசலின் முகமது சலா கோலடிக்க, இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டின.
81-வது நிமிடத்தில் பேசலின் ஸ்டெரெல்லர் கோலடிக்க, அதுவே வெற்றிக் கோலாக அமைந்தது. கடைசி 9 நிமிடங்கள் செல்சியா கடுமையாகப் போராடியபோதும் தோல்வியில் இருந்து தப்ப முடியவில்லை. இதனால் பேசல் 2-1 என்ற கோல் கணக்கில் செல்சியாவுக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தது. இதன்மூலம் ஐரோப்பிய லீக் போட்டியின் அரையிறுதியில் செல்சியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது பேசல்.
செல்சியா அணி தனது “ஹோம் கிரவுண்ட்”டில் 30 சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடியுள்ளது. அதில் அந்த அணி கண்ட முதல் தோல்வி இதுதான். அது குறித்துப் பேசிய செல்சியா பயிற்சியாளர் மௌரின்கோ, “இந்தத் தோல்வியால் வருத்தமடைந்துள்ளேன்.
வெற்றி பெற்று முன்னோக்கி செல்வதற்குப் பதிலாக, தோல்வி கண்டு பின்னடைவைச் சந்தித்துள்ளோம். செல்சியா அணி முதிர்ச்சியான அணி அல்ல.
இக்கட்டான சூழலில் எங்கள் வீரர்கள் போதுமான அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை” என்றார்.
மற்ற லீக் போட்டிகளில் சால்கே அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்டூவா புகாரெஸ்டி அணியையும், மிலன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செல்டிக் அணியையும், அட்லெடிகோ டி மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஸெனித் அணியையும் தோற்கடித்தன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago