விளையாட்டில் வருமா வெளிப்படைத்தன்மை?

By ஏ.வி.பெருமாள்

ஊழல் மற்றும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட இந்திய விளையாட்டுத் துறையை உருவாக்க நாட்டில் உள்ள அனைத்து தேசிய விளையாட்டு சம்மேளனங்களும் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் சோனோவால், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் தேசிய விளையாட்டு அமைப்புகள் ஆகியவை சர்வதேச போட்டிகள், அதில் பங்கேற்கும் வீரர்கள், அணி தேர்வு, பயிற்சி முகாம்கள், போட்டி நடைபெறும் இடம், தேதி, பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், அணி தேர்வுக்கான விதிமுறைகள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தியாவில் விளையாட்டை மேம்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டிருக்கிறார்.

சாத்தியமாகுமா?

அமைச்சர் கூறியதெல்லாம் நடந்துவிட்டால் இந்திய விளையாட்டுத் துறைக்கு பொற்காலம்தான். ஆனால் அதெல்லாம் சாத்தியமா? இந்திய விளையாட்டுத் துறையில் இருக்கும் கறுப்பு ஆடுகள் அதை நடக்கத்தான் விட்டுவிடுவார்களா என்பதுதான் இங்கே எழும் கேள்வி.

இந்தியாவில் விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகளும், ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளும் சோனோவாலின் வேண்டுகோளை அப்படியே ஏற்றுக்கொள்வார்களா? இல்லை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பரிசுத்தவான்களா? இந்திய விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகளாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல்வாதிகள், செல்வாக்கு படைத்த தொழில்அதிபர்கள், அதிகாரம் படைத்த முன்னாள், இந்நாள் அரசு அதிகாரிகள்.

இவர்களில் ஊழல் கறை படியாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்திய அரசை மட்டுமல்ல, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலையே ஏமாற்ற முயன்று மூக்குடைபட்டவர்கள் நம்முடைய விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள்.

மசோதாவை மாற்றியவர்கள்

2011-ல் விளையாட்டு அமைப்பு நிர்வாகிகளின் பதவிக்காலம் மற்றும் வயது தொடர்பான மசோதாவை அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் கொண்டு வர முயன்றபோது சகஅமைச்சர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் நெருக்கடிக்கு பணிந்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சில திருத்தங்களை செய்யுமாறு அஜய் மக்கானுக்கு உத்தரவிட்டார். அப்போதே முடிவுக்கு வந்துவிட்டது மக்கானின் முயற்சிகள் அனைத்தும்.

உதவாத இணையதளம்

அஜய் மக்கானுக்குப் பிறகு விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஜிதேந்திர சிங்கும் போராடிப் பார்த்தார். இப்போது அந்த வரிசையில் சோனோவால் இணைந்திருக்கிறார். அவர் எடுத்திருப்பது நல்ல முயற்சிதான்.

ஆனால் இந்தியாவில் உள்ள விளையாட்டு சம்மேளனங்களில் சிலவற்றுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமே இல்லை. அப்படியே அதிகாரப்பூர்வ இணையதளங்கள் இருந்தாலும் அமைச்சர் குறிப்பிட்டதைப் போன்று முழுமையான விவரங்கள் எதுவும் அங்கு இல்லை. முற்றிலும் செயலிழந்த எதற்கும் உதவாத ஒன்றாகத்தான் இருக்கிறது.

மறுப்பது ஏன்?

இணையதளத்தில் எல்லா விவரங்களையும் வெளியிட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளால் முறைகேடுகளை நிகழ்த்த முடியாது. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியாது. வீரர்கள் தேர்வில் முறைகேடு செய்ய முடியாது. எல்லாவீரர்களுக்கும் முழு விவரமும் தெரிந்துவிடும். அதனால் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க நேரிடும். பணத்தைப் பெற்றுக்கொண்டு போலிச் சான்றிதழ் வழங்க முடியாது.

இணையதளத்தில் இருக்கும் விவரத்தை வைத்துக்கொண்டு ஏராளமான வீரர்கள் நியாயம் கேட்டு நீதிமன்றப்படி ஏறுவார்கள். அப்போது சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்கு ஆபத்து ஏற்படும். இப்படி ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதாலேயே இந்தியாவில் உள்ள விளையாட்டு அமைப்புகள் வெளிப்படைத் தன்மையோடு செயல்படவும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரவும் மறுக்கின்றன.

நடவடிக்கை தேவை

அமைச்சர் சோனோவால் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைத்தாலொழிய பலன் கிடைக்காது. முந்தைய அமைச்சர்களைப் போலவே சோனோவாலும் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதேநேரத்தில் சோனோவாலுக்கு ஒத்துழைத்து மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்பட்சத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். வெளிப்படைத் தன்மையில்லாத மற்றும் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராத விளையாட்டு அமைப்புகளுக்கு நிதியதவி வழங்குவதை நிறுத்துவது, முறைகேடுகள் நடைபெற்றதை உறுதி செய்தால் சம்பந்தப்பட்ட சம்மேளனங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டாலே பாதிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். ஆனாலும் இது எளிதல்ல.

அமைச்சர் பதவி, எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள், அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் மூலம் நிறையசாதிக்கலாம் என்ற அடிப்படையிலேயே பல்வேறு விளையாட்டு அமைப்புகள் செல்வாக்கு படைத்தவர்களை தலைவர், செயலாளர்களாக நியமிக்கின்றன. எனவே அமைச்சர், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் விளையாட்டு சம்மேளனங்களில் பதவி வகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

ஒவ்வொரு விளையாட்டு அமைப்புக்கும் அதிகாரப்பூர்வ இணையதளம் உருவாக்க வேண்டும். அதில் அனைத்து விவரங்களும் இடம்பெற வேண்டும். உதாரணமாக ஒரு வீரர் இருக்கிறார் என்றால் அவருடைய குடும்பப் பின்னணி, வயது, எப்போது பங்கேற்றார். எந்தெந்த பிரிவுகளில் பதக்கம் வென்றார் உள்ளிட்ட எல்லா விஷயங்களும் இணையதளத்தில் இடம்பெற வேண்டும். அப்படி இடம்பெறும்பட்சத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் போலிச் சான்றிதழ் மூலம் இடஒதுக்கீடு பெறுபவர்களையும் தடுக்க முடியும்.

இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் விளையாட்டு அமைப்புகள் வெளிப்படைத் தன்மையோடு செயல்படும் நிலை ஏற்படும். அப்போது ஊழலுக்கு இடமில்லாமல் போகும். ஊழல் இல்லாத நிலையை ஏற்படுத்தும்போது இந்திய விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் ஏற்படும். திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கங்களைக் குவிக்க வேண்டும் என்று நாம் காணுகிற கனவும் நனவாகும். அப்படியொரு நாள் வருமானால் அதுதான் இந்திய விளையாட்டுத் துறைக்கு பொற்காலம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்