68-வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இன்று நடைபெறுகிறது. 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் ரயில்வேயும், முதல்முறையாக கோப்பையை வெல்லும் கனவில் மிசோரமும் களம் காண்கின்றன.
சந்தோஷ் டிராபியில் மூன்று முறை வாகை சூடிய ரயில்வே அணி, தனது 3-வது கோப்பையை 1966-ல் வென்றது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி முதல்முறையாக உலக சாம்பியன் ஆகியிருந்த நேரம் அது. அதன்பிறகு கடந்த 48 ஆண்டுகளில் ரயில்வே அணி சந்தோஷ் டிராபியை வெல்லவில்லை. 1971, 1973, 1980, 1981, 1987 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறியபோதும் ரயில்வே அணியால் சாம்பியன் ஆகமுடியவில்லை.
1987-க்குப் பிறகு கடந்த 27 ஆண்டுகளாக ரயில்வே அணியால் இறுதிச்சுற்றுக்குகூட முன்னேற முடியாமல் போனது. ஆனால் இந்த முறை கோவாவை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்த ரயில்வே, அதில் 4-2 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றிருக்கிறது.
4-வது முறையாக சந்தோஷ் டிராபியை வெல்வதற்காக 48 ஆண்டுகாலமாக காத்திருக்கும் ரயில்வே அணி, இறுதிச்சுற்றில் பலம் வாய்ந்த மிசோரமை சந்திக்கிறது.
1980-களின் மத்தியில் கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய மிசோரம், இந்த சந்தோஷ் டிராபி போட்டியின் தகுதிச்சுற்று, காலிறுதி லீக், அரையிறுதி என அனைத்து போட்டிகளிலும் (மொத்தம் 8 போட்டிகள்) வெற்றி கண்டு இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. இந்த முறை பங்கேற்ற அணிகளில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் மிசோரம், சந்தோஷ் டிராபி சாம்பியன்கள் வரலாற்றில் இடம்பிடிக்கக் காத்திருக்கிறது.
இந்தப் போட்டி தொடர்பாக ரயில்வே அணியின் தலைமைப் பயிற்சியாளர் சௌரன் தத்தா கூறுகையில், “ரயில்வே அணி சந்தோஷ் டிராபியை வென்று 48 ஆண்டுகளும், இறுதிச்சுற்றுக்கு முன்னேறி 27 ஆண்டுகளும் கடந்துவிட்டன. எனவே இறுதிப் போட்டி எங்களுக்கு மிக முக்கியமானது. அதில் வெற்றி பெறும் பட்சத்தில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.
சந்தோஷ் டிராபி சாம்பியன்கள் பட்டியலில் இடம்பெற மிசோரம் அணிக்கும் இது நல்ல வாய்ப்பாகும். இந்த சந்தோஷ் டிராபியில் இதுவரை அந்த அணிதான் சிறந்த அணியாக உள்ளது. அந்த அணியுடனான இறுதி ஆட்டம் சவால் நிறைந்ததாகும்” என்றார். 1966-ல் ரயில்வே அணி சந்தோஷ் டிராபியை வென்றபோது தற்போதைய பயிற்சியாளரான தத் ஒரு வயது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே அணியின் மத்திய பின்கள வீரர்களான விமல் குமார், ராஜீவ் போரோ ஆகியோர் இரு மஞ்சள் கார்டுகளைப் பெற்றதால் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் இறுதிப் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக பேசிய தத்தா,“வழக்கமான தடுப்பாட்டக்காரர்கள் இல்லாமல் விளையாடுவது மிகப்பெரிய இழப்புதான். ஆனால் அதற்காக ஆட்டத்தில் சமரசம் செய்ய முடியாது. முன்னோக்கி அடியெடுத்து வைக்க சரியான தருணம் இது” என்றார். விமல், ராஜீவ் ஆகியோருக்குப் பதிலாக அகில் ராஜ்பன்ஷி, தீபன்கர் தாஸ் அல்லது முகமது சயீத் அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிசோரமுடனான இறுதி ஆட்டம் குறித்துப் பேசிய தத்தா, “நடுகளத்தில் அவர்களை மறித்து ஆடுவோம். அவர்களை தாக்குதல் ஆட்டத்தில் இறங்கவிட்டு பின்னர் திருப்பியடிப்போம்” என்றார்.
மிசோரம் அணியைப் பொறுத்தவரையில் எவ்வித காயப் பிரச்சினையும் கிடையாது. அந்த அணியின் பயிற்சியாளர் வனலால் தலங்கா கூறுகையில், “நாங்கள் எங்களின் இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். ரயில்வே அணி வேகமாக ஆடக்கூடிய அணியாகும். அவர்கள் போட்டிக்குப் போட்டி முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். அரையிறுதியில் மகாராஷ்டிரத்தை வீழ்த்திய பிறகு ரயில்வே அணி மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. எனவே இறுதி ஆட்டம் மிகச்சிறந்த ஆட்டமாக அமையும். எங்களுக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இதுவரை…
சந்தோஷ் டிராபி போட்டியில் ரயில்வேயும், மிசோரமும் இதுவரை 4 முறை மோதியிருக்கின்றன. அதில் இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி கண்டுள்ளன. இரு ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. ரயில்வே 7 கோல்களையும், மிசோரம் 4 கோல்களையும் அடித்துள்ளன.
9-வது முறையாக…
1961, 1964, 1966 ஆகிய ஆண்டுகளில் சந்தோஷ் டிராபியை வென்ற ரயில்வே, 1971, 1973, 1980, 1981, 1987 என 5 முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்த நிலையில் இப்போது 9-வது முறையாக இறுதிச்சுற்றில் விளையாடுகிறது.
போட்டி நேரம் : மாலை 6 மணி நேரடி ஒளிபரப்பு : தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago