ஆஸ்திரேலிய ஓபன் இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் நடப்பு சாம்பியனும், உலகின் 2-ம் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளார். 2008-ல் முதல்முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், அதன்பிறகு 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக பட்டம் வென்றுள்ளார்.

உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஜோகோவிச்சுக்கு இந்த முறை கடும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்திலிருந்து மீண்டபிறகு தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்த நடால், தனது 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதில் தீவிரமாக உள்ளார். கடந்த சீசனில் பிரெஞ்சு ஓபன் மற்றும் அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற நடால், இந்த சீசனில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தக் காத்திருக்கிறார்.

நடாலுக்கு சவாலான டிரா

டிராவைப் பொறுத்தவரையில் ஜோகோவிச்சுக்கு அரையிறுதி வரை எவ்வித சிக்கலும் இல்லை. அவர் அரையிறுதியில் உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் அல்லது 8-ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை சந்திக்க வாய்ப்புள்ளது. அவரை வீழ்த்தும் பட்சத்தில் ஜோகோவிச் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிடுவார். ஆனால் நடாலுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. அவர் தனது காலிறுதியில் உலகின் 5-ம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டினையும், அரையிறுதியில் உலகின் 4-ம் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே அல்லது 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை சந்திக்க வாய்ப்புள்ளது.

நடாலும், ஜோகோவிச்சும் 2012 ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் மோதினர். 5 செட்கள் வரை சென்ற இந்த ஆட்டம் 5 மணி 53 நிமிடங்கள் நீடித்தது. கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக நேரம் நடைபெற்ற இறுதிப் போட்டியான இதில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

காயம் காரணமாக கடந்த ஆஸ்திரேலிய ஓபனில் விளை யாடாத நடால், அதன்பிறகு நடைபெற்ற பிரெஞ்சு ஓபனில் அரையிறுதியிலும், அமெரிக்க ஓபனில் இறுதிச்சுற்றிலும் ஜோகோ விச்சை வீழ்த்தி உலகின் முதல் நிலை வீரராக மீண்டும் உரு வெடுத்தார். ஆனால் அமெரிக்க ஓபனுக்குப் பிறகு நடைபெற்ற உலக டூர் பைனல்ஸ் உள்ளிட்ட இரு போட்டிகளில் நடாலை வீழ்த்தியிருக்கிறார் ஜோகோவிச்.

ஜிம் கூரியர் நம்பிக்கை

முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீரரான அமெரிக்காவின் ஜிம் கூரியர் கூறுகையில், “ஜோகோவிச்சைத் தவிர வேறு யாரிடமும் ரஃபேல் நடால் தோற்கமாட்டார். ஆன்டி முர்ரேவும், நடாலை தோற்கடிக்க வாய்ப்புள்ளது. ஜோகோவிச், நடாலிடம் சில கடினமான தோல்விகளை சந்தித்திருந்தாலும், அதன்பிறகு நடைபெற்ற இரு போட்டிகளில் நடாலை வீழ்த்தியிருக்கிறார். எனவே அந்தத் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடால் விளையாடுவார்” என்றார்.

ஜோகோவிச் மீது எதிர்பார்ப்பு

“ஓபன் எரா”வுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் ராய் எமர்சன் தொடர்ச்சியாக 5 முறை ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றுள்ளார். அவருக்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ந்து அதிகமுறை (3 முறை) பட்டம் வென்றவர் ஜோகோவிச்தான். “ஓபன் எரா”வில் தொடர்ந்து 3 பட்டங்களை வென்றவரான ஜோகோவிச், போட்டி குறித்துப் பேசுகையில், “கடுமையான வெப்பத்தில் விளையாட வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கிறேன். நீங்களும் அப்படி எதிர்பார்க்கலாம். ஆனாலும் மெல்போர்ன் காலநிலையை யாரும் சரியாக கணிக்க முடியாது. அது திடீரென மாற்றமடையும். 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் கடுமையான வெப்பத்தில் விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது. அது எவ்வளவு கடினமானது என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

ஜோகோவிச், போரீஸ் பெக்கர் பயிற்சியின்கீழ் இந்த முறை களமிறங்குவதால் அவர் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாக உள்ளது. நடால் தனது முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் பெர்னாட் டாமிக்கையும், ஜோகோவிச் தனது முதல் சுற்றில் ஸ்லேவேகியாவின் லூகாஸ் லேக்கோவையும் சந்திக்கின்றனர்.

செரீனாவின் 18-வது பட்டம்

உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், இந்த முறை பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வைல்ட்கார்ட் வீராங்கனையான ஆஷ்லே பேர்டியை சந்திக்கும் செரீனா, 4-வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் அல்லது செர்பியாவின் அனா இவானோ விச்சை சந்திக்க வாய்ப் புள்ளது. இதேபோல் காலிறுதியில் இத்தாலி வீராங்கனை சாரா எர்ரானியும், அரையிறுதியில் சீனாவின் லீ நாவும் செரீனாவுடன் மோத வாய்ப்புள்ளது. இந்த முறை செரீனா பட்டம் வெல்லும்பட்சத்தில் இது அவருடைய 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும். மேலும் “ஓபன் எரா”வில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீராங் கனைகள் வரிசையில் சகநாட்டு வீராங் கனைகளான கிறிஸ் எவர்ட், மார்ட்டினா நவரத்தி லோவா ஆகியோருடன் 2-வது இடத்தைப் பகிர்ந்து கொள்வார் செரீனா. கடந்த சீசனில் 5 ஆட்டங்களில் மட்டுமே செரீனா தோல்வி கண்டார். அதனால் இந்தப் போட்டியில் அவர் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

நடப்பு சாம்பியன் அசரென்கா

நடப்புச் சாம்பியனும், உலகின் 2-ம் நிலை வீராங்கனையுமான பெலாரஸின் விக்டோரியா அசரென்கா, தனது முதல் சுற்றில் ஸ்வீடனின் ஜோஹன்னா லார்சனை சந்திக்கிறார். செரீனாவுக்கு அடுத்தபடியாக பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள வீராங்கனையாக கருதப்படும் அசரென்காவும், உலகின் 3-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் மரியா ஷரபோவாவும் அரையிறுதியில் மோத வாய்ப்புள்ளது. அசரென்கா தனது காலிறுதியில் 5-ம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டையர் பிரிவில் ராஃப்டர்

ஆடவர் இரட்டையர் பிரிவில் சகநாட்டவரான லெய்டன் ஹெவிட்டுடன் இணைந்து களமிறங்குகிறார் முன்னாள் முதல்நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் பேட்ரிக் ராஃப்டர்.

41 வயதாகும் ராஃப்டர் 13 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச டென்னிஸிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் திடீரென இப்போது இரட்டையர் பிரிவில் விளையாடுவதாக அறிவித்துள்ளார்.

டேவிஸ் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி யின் விளையாடாத கேப்டனான ராஃப்டர், இது தொடர்பாக மேலும் கூறுகையில், “ஹெவிட் தன்னுடன் இரட்டையர் பிரிவில் விளையாடுமாறு என்னை கேட்டுக்கொண்டார். எனினும் ஒற்றையர் பிரிவில் அவர் எந்த நிலையை எட்டுகிறார் என்பதைப் பொறுத்தே எங் களின் இரட்டையர் பிரிவு ஆட்டம் அமையும். இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ஹெவிட்டுடன் இணைந்து விளையாடுவது வேடிக் கையாக இருக்கும்” என்றார். 2001-ல் மெல்போர்னில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் ஆஸ்திரேலியா தோற்றபிறகு ராஃப்டர் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை.

இவர் 1997, 1998-ம் ஆண்டுகளில் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஃப்டர்-ஹெவிட் ஜோடி தங்களுடைய முதல் சுற்றில் அமெரிக்காவின் எரிக் புட்டோரேக்-தென் ஆப்பிரிக்காவின் ரேவன் கிளாசன் ஜோடியைச் சந்திக்கிறது. ராஃப்டர்-ஹெவிட் ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் அதில் உலகின் முதல்நிலை ஜோடியான அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் ஜோடியை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்