மேக்ஸ்வெல் 65 பந்துகளில் 145 ரன்கள்: 263 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா டி20 உலக சாதனை

By இரா.முத்துக்குமார்

பல்லகிலேயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்கள் குவித்து அதிகபட்ச டி20 ஸ்கோருக்கான உலக சாதனை படைத்தது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சந்திமால் முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தது ‘உலக சாதனை செய்து கொள்ளுங்கள்’ என்பது போல் அமைந்தது.

தொடக்க வீரராக வார்னருடன் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அபாரமான தனது சிறந்த டி20 இன்னிங்சில் 65 பந்துகளைச் சந்தித்து 14 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 145 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இது அவரது முதல் சதமாகும், அதிக பட்ச டி20 ஸ்கோராக இலங்கை எடுத்திருந்த 260 ரன்கள் என்ற சாதனையை ஆஸ்திரேலியா முறியடித்தது. கென்யாவுக்கு எதிராக இலங்கை 260/6 எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது. இதனை இலங்கைக்கு எதிராகவே ஆஸ்திரேலியா இன்று கிளென் மேக்ஸ்வெல்லின் காட்டடி சதம் மூலம் சாதனையை முறியடித்தது.

மேக்ஸ்வெல் வார்னருடன் தொடக்கத்தில் களமிறங்கி சதம் அடித்தது, டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மேலும் அபாயகரமாகத் திகழ எடுக்கப்பட்ட முடிவாகும்.

3-வது விக்கெட்டுக்காக டிராவிஸ் ஹெட் (45 ரன்கள், 18 பந்துகள் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள்) மேக்ஸ்வெல் இணைந்து 6.4 ஓவர்களில் 109 ரன்களை விளாசினர்.

இலங்கை தன் பங்கிற்கு ஏதாவது சாதனையாக இருந்தால் ஒரு டி20 போட்டியில் எவ்வளவு புல்டாஸ்கள் வீசமுடியும் என்பதில் சாதனை படைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஒன்று ஹை புல்டாஸ், இல்லை லோ புல்டாஸ், இல்லையெனில் அல்வா ரக ஹாஃப் வாலி பந்துகள், இதனுடன் மோசமான பீல்டிங், ஓவர் த்ரோக்கள், நழுவ விட்ட கேட்ச்கள் என்று பரவலாக பல தவறுகளை இழைத்தது.

3-வது ஓவரை ரஜிதா வீச வார்னர் 4 பவுண்டரிகளை விளாசினார். இந்த ஓவரில் 19 ரன்கள் வந்தது. 5-வது ஓவரில் ஸ்பின்னர் சேனநாயகவை ரிவர்ஸ் ஸ்வீப்பில் பாயிண்டில் அடித்த அபார முதல் சிக்சருக்குப் பிறகு மேக்ஸ்வெல் திரும்பிப் பார்க்கவில்லை. திசர பெரேராவை அதன் பிறகு ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள். இடையில் வார்னர் 16 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து சேனநாயக பந்தில் ஸ்வீப் ஆட முயன்று பந்து சிக்காமல் பவுல்டு ஆகி வெளியேறினார். 6-வது ஓவரில் ஸ்கோர் 73 ரன்கள்!

9வது ஓவரை ரஜிதா வீச தனது 27-வது பந்தில் ஸ்லோ பந்தை லாங் ஆனில் சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்தார், அதன் மகிழ்ச்சியில் அடுத்த பந்து மிடில் லெக் புல்டாசை டீப் ஸ்கொடர்லெக்கில் சிக்ஸ் அடித்துக் கொண்டாடினார்.

முதல் 6 ஒவர்களில் 73 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 9.3 ஓவர்களில் 100 ரன்களையும், 13 ஓவர்களில் 150 ரன்களையும் எட்டியது. 27 பந்துகளில் அரைசதம் கண்ட மேக்ஸ்வெல் அடுத்த 22 பந்துகளில் சதம் கண்டார், அதாவது 49 பந்துகளில் 11 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் அவர் சதம் கடந்தார். 16.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா 200 ரன்களைக் கடந்தது, 19.3 ஓவர்களில் 250 ரன்களைக் கடந்து கடைசியில் 263 ரன்கள் என்று உலக சாதனை நிகழ்த்தியது.

இடையில் உஸ்மான் கவாஜா 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் டிராவிஸ் ஹெட் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். கிளென் மேக்ஸ்வெல் அபாரமான தனது இன்னிங்சை கடைசியில் ரன்னர் முனையிலிருந்து முடிக்க வேண்டியதாயிற்று. ஆரோன் பிஞ்சின் சாதனை டி20 தனிப்பட்ட ரன்களான 156 ரன்களை முறியடிக்கும் வாய்ப்பு இருந்தது, ஆனால் கடைசியில் அவருக்கு போதிய ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை.

இலங்கை தரப்பில் சாத்துமுறை நடந்தது திசர பெரேராவுக்கே, அவர் 4 ஓவர்களில் 58 ரன்கள், லக்மல் 4 ஓவர்களில் 51 ரன்கள். ரஜிதா அதிகபட்சமாக சாத்து வாங்கி 3 ஓவர்களில் 46 ரன்களை வாரி வழங்கினார்.

உலக சாதனை இலக்கை துரத்தும் இலங்கை அணி தில்ஷன், பெரேரா, டிசில்வா ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

53 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்