சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் தெற்கு ரயில்வே-இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அணிகளுக்கு இடையி லான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஆர்பிஐயின் ஸ்டிரைக்கர்கள் கொஞ்சம் நன்றாக விளையாடி யிருந்தால் வெற்றி அவர்களின் வசமாகியிருக்க வாய்ப்புள்ளது.
செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் தெற்கு ரயில்வேயும், ஆர்பிஐயும் மோதின.
ரயில்வே அணியில் வழக்கம் போல் ஸ்டிரைக்கர்கள் ரிஜு, இளமுருகன், நடுகள வீரர்கள் சார்லஸ் ஆனந்த்ராஜ், சிராஜுதீன், ஸ்வராஜ் உள்ளிட்டோரும், பின்களத்தில் சந்தோஷ் குமாரும் அசத்தலாக ஆடினர். அதேநேரத் தில் ஆர்பிஐ அணியின் பின்களம் மற்றும் நடுகள வீரர்கள் ரயில்வே அணிக்கு பெரும் சவாலாக இருந்தனர்.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆர்பிஐ லெப்ட் விங்கர் ஹரிகிருஷ்ணன், ஸ்டிரைக்கர் லால்ரின்புயாவுக்கு பந்தை பாஸ் செய்ய, அவர் அதை துல்லியமாக கோல் கம்பத்தை நோக்கி திருப்பினார். அது கோலாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரயில்வே கோல் கீப்பர் பாரதிதாசன் அற்புதமாக தகர்க்க, அது ஏமாற்றத்தில் முடிந்தது.
தொடர்ந்து வேகம் காட்டிய ஆர்பிஐ அணியில் இடது பின்கள வீரர் பிரேம் குமார், ஸ்டிரைக்கர் லால்ரின்புயாவுக்கு பந்தை பாஸ் செய்ய, அவர் கோல் கம்பத்தின் அருகில் வரை பந்தை எடுத்துச் சென்று நழுவவிட்டார்.
இதன்பிறகு ரயில்வேயின் சிராஜுதீன் பந்தை எடுத்துக் கொண்டு வேகமாக முன்னேற, அவரை ஆர்பிஐ வீரர்கள் மறித்தபோது உடனடியாக அங்கிருந்தபடியே பந்தை கோல் கம்பத்தை நோக்கி உதைத்தார். ஆனால் கோல் கம்பத்தின் மேற்புறத்தில் பட்ட பந்து அப்படியே வெளியில் சென்றதால் நூலிழையில் கோல் வாய்ப்பு நழுவியது. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே (அதாவது 47-வது நிமிடம்) ரயில்வே அணி கோலடித்தது. வலது மிட்பீல்டில் இருந்த சிராஜுதீன் வசம் பந்து செல்ல, அவர் கோல் கம்பத்தின் வலது பகுதியில் இருந்த ரிஜுவுக்கு பாஸ் செய்தார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரிஜு, துல்லியமாக “கிராஸ்” செய்ய, இடதுபுறத்தில் இருந்து முன்னோக்கி வந்த இளமுருகன் அசத்தலாக கோலடித்தார்.
ஆர்பிஐ பதிலடி
இதன்பிறகு ஆர்பிஐ பயிற்சியாளர் விஜய், சில வீரர்களை மாற்றிவிட்டு அவர் களுக்குப் பதிலாக மாற்று ஆட்டக் காரர்களை களமிறக்க, அந்த அணி கோலடிப்பதில் தீவிரம் காட்டியது. அதற்கு 71-வது நிமிடத்தில் பலனும் கிடைத்தது.
பிரேம் குமார் பாஸ் செய்த பந்தை, கோல் கம்பத்தின் வலது புறத்தில் இருந்த பின்கள வீரர் முனிவேல் தலையால் முட்டி கோல் கம்பத்தை நோக்கி திருப்பினார். அப்போது அதை வெளியில் திருப்பி விடுவதற்காக ரயில்வே பின்கள வீரர் சந்தோஷ் குமார் காலால் உதைக்க, அது நேராக கோல் கம்பத் துக்குள் விழுந்து கோலானாது. இதனால் ஸ்கோர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.
ஆர்பிஐ ஆதிக்கம்
இந்த கோல் ஆர்பிஐயின் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதன்பிறகு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஆர்பிஐ அணி, சுமார் 4 கோல் வாய்ப்புகளை உருவாக்கியபோதும் அதை கோலாக்க முடியாமல் கோட்டை விட்டது.
ஆர்பிஐக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பில் அந்த அணியின் முகேஷ்வரன் பந்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல, ரயில்வேயின் கோல் கீப்பர் உள்ளிட்ட 4 வீரர்கள் அவரை இடைமறித்தபோதும், அவர்களை பின்னுக்குத்தள்ளி முன்னேறினார்.
ஆனால் கோல் கம்பத்தின் அருகில் யாருமே இல்லாத நிலையில், இடதுபுறத்தில் இருந்த முகேஷ்வரன், பந்தை மெதுவாக வலது புறத்தை நோக்கி திருப்ப, மயிரிழையில் கோல் வாய்ப்பு நழுவிப்போனது.
வீணான பெனால்டி
கடைசிக் கட்டத்தில் ரயில்வே அணிக்கு ஒரு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. வலது புறத்தில் இருந்து சிராஜுதீன் வீசிய “த்ரோ இன்” வாய்ப்பில் பந்தைக் கைப்பற்றிய ரிஜு, அதை கோல் கம்பத்தை நோக்கி திருப்பினார். அப்போது ஆர்பிஐ வீரர் சிவபிரியன் பந்தை கையால் தொட்டதாகக் கூறி, இந்த பெனால்டி வாய்ப்பை வழங்கினார் நடுவர். அதில் ரயில்வே மிட்பீல்டர் சார்லஸ் ஆனந்தராஜ் பந்தை உதைக்க, ஆர்பிஐ கோல் கீப்பர் முகமது அற்புதமாக இடது புறம் “டைவ்” அடித்து “சேவ்” செய்தார். இதனால் இந்தப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
பலவீனமான ஸ்டிரைக்கர்கள்
ரயில்வே அணியோடு ஒப்பிடுகையில் ஆர்பிஐ அணி நிறைய கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், அதை அந்த அணியின் ஸ்டிரைக்கர்கள் கோல் அடிக்கத் தவறிவிட்டனர். அந்த அணிக்கு கிடைத்த ஒரு கோல் வாய்ப்பும் பின்கள வீரர் முனிவேலால்தான் கிடைத்தது. ஆர்பிஐயின் முன்களம் பலமாக இருந்திருக்குமானால் போட்டியின் முடிவு ஆர்பிஐக்கு சாதமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த அணியின் ஸ்டிரைக்கர்கள் பந்தை கோல் கம்பத்துக்குள் திருப்புவதில் தாமதம் செய்தனர். அதை சரியாகப் பயன்படுத்திய ரயில்வே வீரர்கள் எளிதாக ஆர்பிஐயின் கோல் வாய்ப்புகளை முறியடித்தனர்.
ரயில்வே அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றியையும், ஒரு டிராவையும் பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில் ஆர்பிஐ அணி 3-ல் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவைப் பதிவு செய்துள்ளது.
முதல் டிவிசன் டிரா
முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் போட்டியில் ஸ்டெட்ஸ் எப்.சி.-சேலஞ்சர் யூனியன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
59 mins ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago