ரிவர்ஸ் ஸ்விங்கில் கிளார்க் பவுல்டு: 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறல்

அபுதாபி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான இன்று ஆஸ்திரேலியா தங்கள் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்து தோல்வியைத் தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது.

மிட்செல் மார்ஷ் 58 ரன்களுடன் ஒரு முனையில் நிலைத்து ஆடி வருகிறார்.

3ஆம் நிலையில் கிளென் மேக்ஸ்வெல் களமிறக்கப்பட்டார். அது நல்ல பயனைத் தந்து கொண்டிருந்தது. 28 பந்துகளில் அவர் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்திருந்த போது சுழற்பந்து வீச்சாளர் சுல்பிகர் பாபரிடம் பவுல்டு ஆனார்.

காலையில் டேவிட் வார்னர் சரிவைத் தொடங்கி வைத்தார். வேகப்பந்து வீச்சாளர் ரஹத் அலி இருபுறமும் நன்றாக ஸ்விங் செய்து வரும் நிலையில் அவரது பந்து ஒன்றை பொறுப்பற்ற முறையில் ஆடி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நேதன் லயன் 85 பந்துகளை சந்தித்துப் போராடி 15 ரன்கள் எடுத்து ரஹத் அலி பந்தில் பவுல்டு ஆனார். மட்டைக்கும், பேடிற்கும் இடையே புகுந்து பந்து ஸ்டம்ப்களை பதம் பார்த்தது.

ஸ்டீவ் ஸ்மித், சுல்பிகர் பாபர் வீசிய அருமையான பந்தை ஆட முயன்று தோல்வியடைந்தார், பந்து பின்னங்காலைத் தாக்கியது எல்.பி. என்று தீர்ப்பளிக்கப்பட்டார். ஆஸ்திரேலியா உணவு இடைவேளைக்கு முன்னரே 100/5 என்று சரிவை நோக்கித் தள்ளப்பட்டது.

அதன் பிறகு கிளார்க், மிட்செல் மார்ஷ் இணைந்து 64 ரன்கள் சேர்த்தனர். கிளார்க் 62 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்து விளையாடி வந்தார். அப்போது வேகப்பந்து வீச்சாளர் இம்ரான் கானை அழைத்தார் மிஸ்பா. அவர் வந்ததிலிருந்தே தனது அபார ரிவர்ஸ் ஸ்விங்கின் மூலம் கிளார்க்கை பாடாய்ப் படுத்தினார். ஒரு ஓவரில் 5 பந்துகள் மட்டையின் உள் விளிம்பில் பட்டு அபாயகரமாகச் சென்றது.

கடைசியில் ஒரு பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியேயிருந்து தரையில் படுவதற்கு முன்பே ஸ்டம்பை நோக்கி பயங்கரமாக இன்ஸ்விங் ஆனது. கிளார்க் அதனை தடுக்க நினைத்தார் பந்து கால்காப்பிற்கும் மட்டைக்கும் இடையே சென்று மிடில் ஸ்டம்பைத் தாக்கியது.

பிராட் ஹேடின் 10 ரன்கள் எடுத்து யாசீர் ஷாவின் அபாரமான பந்தில் பவுல்டு ஆனார். பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 169 ரன்கள் இருக்கிறது.

பாகிஸ்தான் தரப்பில் இம்ரான் கான், சுல்பிகர் பாபர், ரஹத் அலி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, யாசிர் ஷா ஒரு விகெட்டைக் கைப்பற்றியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE