புனே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்துள்ளது. உமேஷ் யாதவ் அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா தரப்பில் ரென்ஷா 68 ரன்களையும், மிட்செல் ஸ்டார்க் அதிரடி 57 ரன்களையும் எடுத்தனர், இதில் ஸ்டார்க் 57 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார், இவருடன் ஹேசில்வுட் 1 ரன்னுடன் ஆடி வருகிறார். ஸ்டார்க், ஹேசில்வுட் இணைந்து கடைசி விக்கெட்டுக்காக 51 ரன்களைச் சேர்த்ததில் ஸ்டார்க் மட்டுமே 49 ரன்களைச் சேர்த்தார்.
முதல் பந்தே திரும்பும் ஒரு பிட்சைப் பார்த்ததில்லை என்று ஸ்மித் கூறியதும் இந்தப் பிட்ச் பற்றிய உண்மைதான், விராட் கோலி, உமேஷ் யாதவின் திறமைகளை மிகவும் தாமதமாகப் பயன்படுத்தியதும் உண்மைதான். உமேஷ் யாதவ் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்தே சரியான லெந்த், வேகம் என்று நல்ல ஒரு வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். அவரை தொடக்கத்திலேயே கொடுத்திருந்தால் ஆஸ்திரேலியா இன்னும் முன்னமேயே ஆல் அவுட் ஆகியிருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அஸ்வின் தான் விக்கெட்டுகள் வீழ்த்த தகுதியானவர் என்பது ஊடகரீதியிலான நிறுவல் ஆன பிறகு அவருக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
தொடக்க வீரர்கள் 82 ரன்களைச் சேர்த்த பிறகு இரண்டாவது செஷனில் ஸ்மித், ஓரளவுக்கு ஷான் மார்ஷ், பிறகு ஹேண்ட்ஸ்கம்ப் ஆகியோர் தாக்குப் பிடித்தனர்.
ஆனால் ஷான் மார்ஷ் 3 பவுண்டரிகளுடன் வலுவான தடுப்பாட்டத்துடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் லெக் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்த பிறகே ஆட்டம் திருப்பு முனை கண்டது. ஹேண்ட்ஸ்கம்ப் 22 ரன்களில் ஜடேஜாவின் வழக்கமான ஒரு பந்துக்கு எல்.பி.ஆக, அஸ்வின் மிக முக்கியமான விக்கெட்டாக 27 ரன்கள் எடுத்திருந்த அபாய ஸ்மித்தை வீழ்த்தினார், மிட்விக்கெட்டில் கோலி கேட்சைப் பிடித்தார். ரென்ஷா மீண்டும் களமிறங்கி தன்னுடைய அபாரத் தடுப்பாட்டத்துடன் தளர்வான பந்துகளை பவுண்டரிகளையும் அடித்தார்.
மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் ஜடேஜாவிடம் எல்.பி.ஆக, மேத்யூ வேட் உமேஷ் யாதவ்வின் அருமையான ரவுண்ட் த விக்கெட் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார், இது உண்மையில் கூற வேண்டுமெனில் நாட் அவுட்தான், ஆனால் நடுவர் கையை உயர்த்தியதால் 3-ம் நடுவரும் செவிசாய்த்தார். ரிவியூவைப் பொறுத்தவரை கள நடுவர் அவுட் கொடுத்தாலும், நாட் அவுட் கொடுத்தாலும் ரிவியூவில் பேட்ஸ்மெனுக்கு எதிராகத்தான் தீர்ப்பு வருகிறது. இந்த விதத்தில் மேத்யூ வேட் துரதிர்ஷ்டசாலிதான்.
ரென்ஷா 156 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 68 ரன்கள் எடுத்து அஸ்வினின் அருமையான ஸ்லிப் கேட்சுக்குக் காலியானார். ஆனால் ரென்ஷா இங்கு ஆடும் ஆட்டம் அவர் இந்தத் தொடரில் மேலும் சாதிக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது, உடலை விட்டு விலகுமாறு அவர் ஸ்பின் பந்துகளுக்கு மட்டையைக் கொண்டு செல்லவில்லை, உள்ளே வரும் பந்தைத்தான் அவர் தடுத்தாடினார், வெளியே செல்லும் பந்தை ஆடாமல் விட்டு விடுகிறார். ஒருமுறை ஜடேஜாவை மேலேறி வந்து சிக்ஸ் அடித்ததும் அவரது தன்னம்பிக்கைக்கு உதாரணம்.
ரென்ஷாவுக்குப் பிறகு உமேஷ் யாதவ் அடுத்தடுத்த பந்துகளில் ஓகீஃப் மற்றும் லயனை வீழ்த்தினார். இதில் ஓகீஃபுக்கு சஹா பிடித்த கேட்ச் அதி அற்புதமானது. ஒருகையில் டைவ் அடித்து பிடித்தார் சஹா. நேதன் லயன் எல்.பி.ஆனார்.
205/9 என்ற நிலையில்தான் ஸ்டார்க் அதிரடி ஆட்டம் ஆடத் தொடங்கினார், ஜடேஜாவை ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என்று 15 ரன்கள் விளாசினார், இதில் ஒரு பவுண்டரி இன்சைடு எட்ஜ். இசாந்த் சர்மாவை இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அவர் 58 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 57 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். 205/9 என்ற நிலையிலிருந்து ஆல் அவுட் ஆகாமல் ஆஸ்திரேலியா 256/9 என்ற ஸ்கோரை எட்டிய போது இன்றைய ஆட்டம் நிறைவுற்றது.
இன்று வீசப்பட்ட 94 ஓவர்களில் அஸ்வின் மூன்றில் ஒருபங்காக 34 ஓவர்களை வீசி 10 மெய்டன்களுடன் 59 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உண்மையில் பிட்சில் இருந்த திருப்பத்துக்கு இவர் ஆஸ்திரேலியாவை சுருட்டி இந்த 39 ஓவர்களில் குறைந்தது 5 விக்கெட்டுகளையாவது கைப்பற்றியிருக்க வேண்டும், அதுவும் கோலி இவருக்கு அமைத்த பீல்டிங்கும் குறை கூற முடியாததே. இன்றைய ஆட்டத்தின் பந்து வீச்சு நாயகன் உமேஷ் யாதவ்தான், இவர் 12 ஓவர்கள் 3 மெய்டன், 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள். ஆஸ்திரேலியா அடித்த 30 பவுண்டரிகள் 4 சிக்சர்களில் அஸ்வின், ஜெயந்த் யாதவ், ஜடேஜா 22 பவுண்டரிகளையும் 4 சிக்சர்களையும் விட்டுக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் ஏற்கெனவே முதல் செஷனிலேயே உடையத் தொடங்கிய பிட்சை சேதம் செய்ததற்காக இருமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டார். இதெல்லாம் இல்லாமலேயே நேர்மையாக வெற்றி பெற வேண்டும், ஏனெனில் இத்தகைய செயல்கள் இந்திய பேட்ஸ்மென்களுக்குமே அபாயமானதுதான், காரணம் அங்கு நேதன் லயன், ஓகீஃப் ஆகிய ஸ்பின்னர்கள் உள்ளனர், இந்திய அணி இவர்களை குறைவாக எடைபோட முடியாது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago