சச்சினுக்கு 200, எனக்கு 150 - சந்தர்பால் நெகிழ்ச்சி
இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 2-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மும்பையில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இது சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் 200 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையுடன் சச்சின் விடைபெற இருக்கிறார். இப்போட்டி சந்தர்பாலின் 150-வது டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.
இது தொடர்பாக மும்பையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சந்தர்பால் கூறியது: சாதாரணமாக ஒரு கிரிக்கெட் வீரர் 150 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சற்று கடினமான விஷயம். எனவே என்னைப் பொறுத்த அளவு 150 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது ஒரு மைல் கல்தான். ஆனால் அதே போட்டியில் சச்சின் தனது 200-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் என்பது நெகிழ்ச்சியான விஷயம்.
சச்சினிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. முக்கியமாக அவர் பேட்டிங் செய்யும்போது மைதானத்தில் இருந்தால் கிரிக்கெட் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
1994-ம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது நானும் அணியில் இடம்பெற்றிருந்தேன். சச்சினுக்கு பந்து வீசுவது என்பது எங்கள் அணி வீரர்களுக்கு மிகவும் சவாலான விஷயமாக இருந்தது. எப்படி பந்து வீசினாலும், அதனை அடித்து விளையாடி எங்களை மிரட்டினார் என்றார் சந்தர்பால்.