இந்திய அணிக்கு உரக்க ஒலிக்கும் எச்சரிக்கை மணி

By அரவிந்தன்

உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ் தானிடம் இதுவரை தோற்றதில்லை என்னும் பெருமையைத் தக்கவைத்துக் கொண்ட இந்தியா தொடக்க கட்டத் தடுமாற்றத்திலிருந்து மீண்டு சுதாரித்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானை 18 ஓவர்களில் 118 ரன்களுக்குள் முடக்கிய இந்தியா, அந்த இலக்கை எட்டும் முயற்சியிலும் தொடக்கத்தில் தடுமாறி, மீண்டு வந்திருக்கிறது. மீண்டும் விராட் கோலியின் அற்புதமான இன்னிங்ஸ் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

தோல்வி அடையும்போது ஒரு அணியின் பலவீனங்கள் அம்பலமாகும். வெற்றி பலவீனங்களை மூடி மறைக்கும். ஆனால், நியூஸிலாந்திடம் பெற்ற அதிர்ச்சித் தோல்வி, பாகிஸ்தானிடம் போராடிப் பெற்ற வெற்றி ஆகிய இரண்டுமே இந்தியாவின் சில பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இந்தியா கோலியை அளவுக்கதிகமாக நம்பியிருப்பதுதான் அதன் முதல் பலவீனம். இந்தப் போட்டியில் யுவராஜ் சிங்கின் ஒத்துழைப்பு இருந்தாலும், கோலியின் இன்னிங்ஸ்தான் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்பதில் சந்தேகமில்லை. கோலி ஒருவேளை ஆட்டமிழந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மகேந்திர சிங் தோனியை நம்பலாம் என்றாலும் அவருக்குத் துணையாக நிற்க யாரும் இல்லை. ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நெருக்கடியான கட்டத்தில், உயிர்ப்புள்ள ஆடுகளத்தில் தங்கள் திறமையை இன்னமும் நிரூபிக்க வில்லை.

நியூஸிலாந்துடனான ஆட்டமே இதற்குச் சிறந்த உதாரணம். அடுத்தடுத்து விக்கெட்கள் விழ, கோலியும் தோனியும் கவனமாக ஆடி இன்னிங்ஸை நிலைப்படுத்தினார்கள். கோலி ஆட்ட மிழந்ததும் தோனிக்குத் துணைக்கு ஆளில்லாமல்போனது. பாண்ட்யாவும் ஜடேஜாவும் சுழல் பந்தை முன்னே பின்னே பார்த்ததே இல்லை என்பதுபோல ஆடி ஆட்டமிழந்தார்கள். இந்திய மண்ணில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கிவரும் சுரேஷ் ரெய்னாவும் பரிதாபமாக ஆட்டமிழந்தார். பாகிஸ்தானுடனான போட்டியிலும் மட்டை வரிசை இதேபோலச் சரிந்தது. யுவராஜின் ஆட்டம் கைகொடுத்தாலும் கோலிதான் இன்னிங்ஸைத் தாங்கிப் பிடித்தார். கோலி ஆட்டமிழந்திருந்தால் இந்தியாவின் உலகக் கோப்பை கனவே ஆட்டம் கண்டிருக்கும்.

தொடர்கதையாகும் சரிவு

இதே நிலைமை ஆசியக் கோப்பைப் போட்டியிலும் இருந்தது. அப்போது பாகிஸ்தானுடன் நடந்த போட்டியிலும் கிட்டத்தட்ட இதே நிலை. அன்றும் யுவராஜின் துணையோடு கோலிதான் காப்பாற்றினார். நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் கை கொடுக்கும் மட்டையாளராக இருப்பது கோலிக்குப் பெருமை சேர்க்கலாம். ஆனால் கோலி மட்டுமே அப்படி இருப்பது மற்றவர் களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமல்ல. கடந்த இரண்டு போட்டிகளில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஆட்டமிழந்த விதம் அதிர்ச்சிகரமானது. குறிப்பாக நியூஸிலாந்து போட்டியில் இவர்கள் ஆட்டமிழந்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பெரிய இலக்கைத் துரத்தும்போது ரன் விகிதம் முக்கியம். எனவே கவனத்தைச் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு ஆட வேண்டியிருக்கும். ஆனால் குறைவான இலக்கைத் துரத்தும்போது இன்னிங்ஸை நிலை நிறுத்திக்கொள்வதற்கான அவகாசம் இருக்கும். இதைப் பயன்படுத்திக்கொண்டு கவனமாக ஆடி, அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதே முன்னணி மட்டையாளர்களின் கடமை. இந்த மூவரும் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். கோலி ஒவ்வொரு ஆட்டத்திலும் இதைச் செய்கிறார். அடுத்த ஆட்டங்களிலாவது இவர்கள் மூவரும் சுதாரித்துக்கொள்ள வேண்டும்.

உயர் நிலை மட்டை வரிசை மட்டு மின்றி, கீழ் நடு வரிசையும் தள்ளாடு கிறது. ஒவ்வொரு அணியிலும் விக்கெட் காப்பாளரையும் சேர்த்து 7 மட்டை யாளர்கள் இருப்பார்கள். இந்திய மட்டை வரிசையில் விக்கெட் காப்பாளர் தோனி 6-ம் ஆட்டக்காரராகக் களம் இறங்குகிறார். ஏழாவது மட்டையாளர் எங்கே என்று பார்த்தால் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் தான் தென்படுகிறார்கள். இவர்கள் இருவரும் இதுவரை ஆட்டத்தை முடித்துவைக்கும் தங்கள் திறனை நிரூபிக்கவில்லை. அதுவும் பெரிய அணி களுக்கெதிராக இவர்கள் இன்னமும் தங்களை நிரூபிக்கவில்லை. இதனால் முதல் ஆறு பேர் ஆடினால்தான் உண்டு என்ற நிலை உள்ளது. டி-20 ஆட்டத்தைப் பொறுத்தவரை பல சமயம் இரண்டு பேர் நன்கு ஆடினாலே போதும். ஆனால் கடைசி ஓவர்களில் ஆடக்கூடிய 7, 8-ம் நிலை ஆட்டக்காரர்களும் ரன் அடிக்கக்கூடியவர்களாக இருந்தால்தான் வெற்றி வசமாகும். பாண்ட்யாவும் ஜடேஜாவும் இந்தப் பணிக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் அணி நிர்வாகம் அவர்களைத் தாண்டி யோசித்தாக வேண்டும். அஜிங்க்ய ரஹானே, மனீஷ் பாண்டே முதலான பலர் காத்திருக்கிறார்கள். ஜடேஜாவின் சுழல் பந்துக்காக மட்டும் அவரை அணியில் சேர்க்கவில்லை. ஆல்ரவுண்டர் என்பதால்தான் பிற சுழலர்களைக் காட்டிலும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

சூழலுக்கேற்ற உத்தி

மட்டை வரிசை இப்படி இருக்க, பந்து வீச்சைப் பயன்படுத்தும் விதத்தில் தோனியின் முடிவுகள் கேள்விக்குரிய வையாக உள்ளன. பாகிஸ்தானுடனான போட்டியின்போது ரவிச்சந்திரன் அஸ்வினும் ரெய்னாவும் நன்றாக வீசினார்கள். அஸ்வினுக்கு மூன்று ஓவர்கள்தான் கொடுக்கப்பட்டன. ரெய்னா வுக்கு ஒரே ஒரு ஓவர். ஆடுகளத்தில் பந்து கூர்மையாகத் திரும்பும் நிலையில் இவர்கள் இருவருக்கும் குறைந்தது ஆளுக்கொரு ஓவர் கொடுத்திருக்கலாம். மாறாக, ஜஸ்ப்ரீத் பூம்ராவுக்கு 4 ஓவர்கள் கொடுக்கப்பட்டன.

பாண்டியா 2 ஓவர்கள் போட்டார். பூம்ராவின் மூன்றாவது ஓவரில் 13 ரன்கள் கொடுக்கப்பட்ட நிலையில் அவரைக் கடைசி ஓவர் போடச் செய்ததைத் தவிர்த்திருக்கலாம். சுழல் எடுபடக்கூடிய ஆடுகளத்தில், நன்கு வீசும் சுழலர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களை அதிக மாகப் பயன்படுத்துவதுதான் சரியான உத்தியாக இருக்க முடியும்.

கடைசியில் வெற்றி வசமாகிவிட்டதால் இந்தக் குறை தெரியவில்லை. இந்தியா தோல்வி அடைந்திருந்தால் பூம்ரா கொடுத்த 32 ரன்கள் எவ்வளவு விலை மதிப்பு வாய்ந்தவை என்பது தெரிந்திருக்கும். சூழலுக்கேற்ற உத்தி (Horses for the courses) என்பதைத் தன் உத்தியாகச் சொல்லிவரும் தோனி இந்த விஷயத்தில் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இன்னும் இரண்டு போட்டிகளிலும் வென்றால்தான் இந்தியா சிக்கலில்லாமல் அரை இறுதிக்குப் போக முடியும். ஒரு போட்டியில் தோற்றாலும் பிறரது தோல்விக்காகப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டியிருக்கும். முதல் இரு போட்டிகளும் எச்சரிக்கை மணியை வலு வாக எழுப்பியுள்ளன. இந்திய அணி அதைக் கேட்டுச் சுதாரித்துக்கொள்ள வேண்டும். தன் அணுகுமுறையில் தேவை யான மாற்றக்களைச் செய்துகொண்டால் இந்தியாவால் அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்