அதிரடியைத் தொடரும் முனைப்பில் இந்தியா

By செய்திப்பிரிவு

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிபஞ்சாப் மாநிலம் மொஹாலியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

7 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இரு போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில் 3-வது போட்டியில் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 360 ரன்கள் என்ற இலக்கையும் 43.3 ஓவர்களில் எளிதாக எட்டிப்பிடித்த இந்திய அணி, மொஹாலியில் நடைபெறும் 3-வது போட்டியிலும் வெற்றியைத் தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது.

பலம் வாய்ந்த பேட்டிங்

கடந்த போட்டியில் தூள் கிளப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி ஆகியோரின் அதிரடி இந்தப் போட்டியிலும் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த போட்டியில் அதிவேக சதமடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்த விராட் கோலி, இமாலய இலக்கையும் எட்ட முடியும் என்பதை தனது அதிரடியால் நிரூபித்தார். ஷிகர் தவணுக்கு மொஹாலி ராசியான மைதானம் ஆகும். கடந்த மார்ச்சில் இங்கு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷிகர் தவண், அதில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது.

எனவே ருத்ரதாண்டவம் ஆடிய இந்தியாவின் மூவர் கூட்டணியை (ரோஹித், தவண், கோலி) இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே வீழ்த்த ஆஸ்திரேலியர்கள் முயற்சிப்பார்கள்.

மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், கேப்டன் தோனி ஆகியோர் இந்திய அணியின் பெரிய பலமாகத் திகழ்கின்றனர். இந்திய அணியின் டாப் 7 பேட்ஸ்மேன்கள் மிக அற்புதமான பேட்ஸ்மேன்கள் என்பதை ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஜெய்ப்பூர் போட்டி முடிந்த பிறகு ஒப்புக்கொண்டார்.

பலவீனமான பௌலிங்

இந்திய அணியின் ஒரே பிரச்சினை பந்துவீச்சு மட்டும்தான். மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, இளம் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் ஆகியோரின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அசுர வேகத்தில் ஆடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை இந்தியாவின் எந்த பௌலராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலும், இஷாந்த், வினய் ஆகியோரின் பந்துவீச்சை பந்தாடிவிட்டனர். இருவரும் தலா 9 ஓவர்களை வீசி முறையே 70 மற்றும் 73 ரன்களை வாரி வழங்கினர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் இரு ஒருநாள் போட்டிகள் என மூன்று போட்டிகளிலும் இந்திய பௌலர்கள் 120 ஓவர்களை வீசி 864 ரன்களை வாரி வழங்கியுள்ளனர். அதாவது சராசரியாக ஒரு ஓவருக்கு 7.20 ரன்களை கொடுத்துள்ளனர்.

இந்திய கேப்டன் தோனி, எப்போதுமே வெற்றிக் கூட்டணியை மாற்ற விரும்பமாட்டார். அதனால் இந்தப் போட்டியிலும் அணியில் எந்த மாற்றமும் இருக்காது என நம்பலாம். ஒரு வேளை வேகப்பந்து வீச்சாளர்களில் வினய் குமார் நீக்கப்படும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக முகமது சமி அல்லது ஜெயதேவ் உனட்கட் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்ட வாய்ப்புள்ளது.

மிரட்டும் பிஞ்ச், பெய்லி

கடந்த இரு போட்டிகளிலும் 300 ரன்களுக்கு மேல் குவித்தபோதும், 2-வது போட்டியில் வெற்றியைக் கோட்டைவிட்ட ஆஸ்திரேலியா, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் எண்ணத்தோடு இந்தப் போட்டியில் இந்தியாவை சந்திக்கிறது.

கடந்த போட்டியில் ஆரோன் பிஞ்ச், பில் ஹியூஸ், ஷேன் வாட்சன், கேப்டன் ஜார்ஜ் பெய்லி, கிளன் மேக்ஸ்வெல் என முதல் 5 பேட்ஸ்மேன்களும் அரைசதமடித்து உலக சாதனை படைத்தனர். இவர்களில் ஆரோன் பிஞ்ச், ஜார்ஜ் பெய்லி, கிளன் மேக்ஸ்வெல் தொடர்ந்து விளாசலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த போட்டியிலும் அவர்களின் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 359 ரன்களைக் குவித்தபோதும், அவர்களின் பந்துவீச்சு எடுபடாததால் வெற்றி பெற முடியாமல் போனது. ஜான்சன், பாக்னர், வாட்சன், கிளின்ட் மெக்காய், மேக்ஸ்வெல் என அனைத்து பௌலர்களையும் இந்தியாவின் ரோஹித், தவண், கோலி ஆகியோர் அடங்கிய கூட்டணி பதம்பார்த்தது. எனவே இந்த போட்டியில் ஆஸ்திரேலியர்களின் பந்துவீச்சு எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்துதான் அவர்களின் வெற்றி வாய்ப்பு அமையும்.

மைதானம் எப்படி?

மொஹாலி மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானதாகும். அதனால் ஜெய்ப்பூர் போட்டியைப் போலவே இந்த போட்டியிலும் ரசிகர்கள் ரன் மழையை எதிர்பார்க்கலாம். இரு அணிகளுமே வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளதால் இந்தப் போட்டியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று நம்பலாம்.

மொஹாலி மைதானத்தில் இந்தியா மொத்தம் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 8-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி இங்கு 5 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது.

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இங்கு 3 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா இரு முறையும், இந்தியா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக இவ்விரு அணிகளும் இங்கு 2009-ல் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது.

அதன்பிறகு இங்கு நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், வினய் குமார், அமித் மிஸ்ரா, ஜெயதேவ் உனட்கட், முகமது சமி.

ஆஸ்திரேலியா: ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), நாதன் கோல்டர்-நீல், சேவியர் டோஹெர்ட்டி, ஜேம்ஸ் பாக்னர், கேலம் பெர்குசன், ஆரோன் பிஞ்ச், பிராட் ஹேடின், மோசஸ் ஹென்ரிக்ஸ், பில் ஹியூஸ், மிட்செல் ஜான்சன், கிளன் மேக்ஸ்வெல், கிளின்ட் மெக்காய், ஆடம் வோஜஸ், ஷேன் வாட்சன்.

இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்

எங்கள் பௌலர்கள் சரிவிலிருந்து மீண்டு 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பதிலடி கொடுப்பார்கள் என ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இந்திய அணி 43.3 ஓவர்களில் 362 ரன்கள் குவித்து வெற்றி கண்டது இப்போதும் வியப்பாகவே உள்ளது. எனினும் தனிப்பட்ட முறையில் எங்கள் வீரர்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன். வலுவான இந்திய பேட்ஸ்மேன்களை எதிர்கொள்ள எங்கள் பௌலர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறேன்” என்றார்.

ஜெய்ப்பூர் போட்டிக்குப் பிறகு உங்களுடைய பௌலர்களிடம் பேசினீர்களா என்று பெய்லியிடம் கேட்டபோது, “ஆமாம் பேசினோன். தோற்றாலும் ஜெயித்தாலும், ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் நாங்கள் கலந்தாலோசிப்போம். அந்தப் போட்டியில் என்ன தவறு செய்தோம் என்பதைக் கண்டறிந்து, அதை அடுத்தப் போட்டியில் செய்யாமல் பார்த்துக் கொள்வோம்” என்றார்.

கடந்த போட்டியில் தங்களின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதை வெகுவாகப் பாராட்டிய பெய்லி, “நாங்கள் மிகவும் சிறப்பாக பேட் செய்ததாக நினைக்கிறேன். பௌலர்கள் மீது எந்தக் குறையும் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அது பேட்டிங்குக்கு சாதகமான மைதானம். அதுபோன்ற மைதானங்கள் பௌலர்களுக்கு மிகவும் சவாலானவை” என்றார்.

மொஹாலி மைதானம் குறித்துப் பேசிய பெய்லி, “கடந்தப் போட்டியில் நாங்கள் விளையாடிய மைதானத்தைவிட இந்த மைதானம் நன்றாக உள்ளது. மைதானம் கொஞ்சம் பெரிதாக இருப்பது போன்று தெரிகிறது. கடந்த காலங்களில் இங்கு எடுக்கப்பட்ட ரன்கள் குறித்த விவரங்களை நான் பார்க்கவில்லை. எனவே இந்தப் போட்டியில் என்ன நடக்கும் என தெரியாது. எங்கள் வீரர்களில் பெரும்பாலானோர் ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ளனர். அவர்களில் யாரெல்லாம் மொஹாலியில் விளையாடியிருக்கிறார்களோ, அவர்களிடம் மைதானம் குறித்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்வோம்” என்றார்.

போட்டி நேரம்: மதியம் 1.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,

ஸ்டார் கிரிக்கெட், தூர்தர்ஷன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்