இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நல்ல பார்மில் இருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேசன் ராய், பீல்டிங்குக்கு இடையூறு செய்ததாக குற்றம் சாட்டி வெளியேற்றப்பட்டதால் (ரன் அவுட்) அந்த அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
கவுன்டி கிரிக்கெட் மைதானமான டான்டனில் நேற்று முன்தினம் நடந்த 2-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.
அதிக பட்சமாக டி வில்லியர்ஸ் 20 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், ஸ்மட்ஸ் 35 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் எடுத்தனர். பெகார்தின் 32, மோஸ்லே 15, கிறிஸ் மோரிஸ் 12, டேவிட் மில்லர் 8 ஹென்ட்ரிக்ஸ் 7 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிர்ரன் 3, பிளெங்கட் 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
175 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சேம் பில்லிங்ஸ் 3 ரன்களில் கிறிஸ் மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராயுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. பேர்ஸ்டோவ் 37 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் மோரிஸ் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். 33 பந்துகளில் அரை சதம் அடித்த ஜேசன் ராய் 16-வது ஓவரில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார்.
கிறிஸ் மோரிஸ் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் லிவிங்ஸ்டன் தடுப்பாட்டம் மேற்கொண்டார். பந்து பாயின்ட் திசையில் சென்ற நிலையில் நான் ஸ்டிரைக்கர் திசையில் இருந்த ஜேசன் ராய் ரன் ஓட முயற்சி செய்தார். ஆனால் லிவிங் ஸ்டோன் மறுப்பு தெரிவித்ததால் ஆடுகளத்தின் பாதி வரை சென்ற நிலையில் மீண்டும் தனது பகுதிக்கு ஜேசன் ராய் வேகமாக திரும்பினார்.
இதற்கிடையே பந்தை கையில் எடுத்த தென் ஆப்ரிக்க வீரர் பெலுக்வயோ நொடிப் பொழுதில் ஸ்டெம்பை நோக்கி எறிந்தார். ஆனால் பந்து ஜேசன் ராயின் பாதத்தின் மீது பட்டது. இதையடுத்து ஜேசன் ராய் பீல்டிங்குக்கு இடையூறு செய்ததாக நடுவரிடம் முறையிட்டு தென் ஆப்ரிக்க வீரர்கள் அவுட் கேட்டனர்.
ஆனால் கள நடுவர் பந்தை 'டெட்பால்' என அறிவித்து அவுட் கொடுக்க மறுத்தார். இதையடுத்து தென் ஆப்ரிக்க அணி மேல்முறையீடு செய்தது. நீண்ட நேர ரீப்ளேவுக்கு பின்னர் 3-வது நடுவரான டிம் ராபின்சன், ஜேசன் ராய் அவுட் என தீர்ப்பு வழங்கினார்.
ஜேசன் ராய் 45 பந்துகளில், 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்த நிலையில் வெளி யேறினார். டி 20 சர்வதேச போட்டி களில் பீல்டிங்குக்கு இடையூறு செய்ததாக ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற மோசமான சாதனைக்கு ஜேசன் ராய் சொந்தக்காரர் ஆனார்.
அவர் ஆட்டமிழந்த போது அணியின் ஸ்கோர் 15.1 ஓவர்களில் 133 ஆக இருந்தது. வெற்றிக்கு 29 பந்துகளில் 42 ரன்களே தேவையாக இருந்தது. ஆனால் அடுத்து களமிறங்கிய ஜாஸ் பட்லர் 10, கேப்டன் மோர்கன் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற 19 ஓவர்களில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.
பெலுக்வயோ வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில் லயிம் டாவ்சன், லிவிங்ஸ்டன் களத்தில் இருந்தனர். முதல் 3 பந்துகளில் தலா ஒரு ரன்கள் சேர்க்கப்பட்ட நிலை யில் 4-வது பந்தில் லிவ்விங்ஸ்டன் 2-வது ரன்னுக்கு ஓடமுயன்ற போது ரன் அவுட் ஆனார்.
5-வது பந்தில் டாவ்சன் பவுண்டரி அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலையில் டாவ்சன் பந்தை வீணடித்தார். முடிவில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
டாவ்சன் 7 ரன்களுடனும், பிளெங்கெட் ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் களத்தில் இருந்தனர். 4 ஓவர்கள் வீசி 18 ரன்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்திய தென் ஆப்ரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்தது. கடைசி டி 20 ஆட்டம் இன்று கார்டிப் நகரில் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago