யூனிஸ் கான் தனது 14 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், விமர்சனங்கள், சர்ச்சைகள் ஏராளம். தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் தந்தை மற்றும் இரு சகோதரர்களின் மரணம் என நிறைய இழப்புகளைச் சந்தித்தவர். ஆனால் அவை எதுவும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக்கொண்டவர் யூனிஸ் கான். அதுதான் இன்று அவரை பாகிஸ்தானின் தலைசிறந்த டெஸ்ட் வீரராக உருவாக்கியதோடு, உலக டெஸ்ட் அரங்கில் அவருக்கென்று தனியொரு இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.
தேர்வாளர்களுக்கு பதிலடி
சில நேரங்களில் அவர் சர்ச்சையில் சிக்கியபோது அவரை நீக்கிய பாகிஸ் தான் கிரிக்கெட் வாரியம், பின்னர் அவர் இல்லாமல் பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து அடுத்த சில மாதங்களிலேயே திரும்ப அழைத்த சம்பவங்களும் நடந்தி ருக்கின்றன.
சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் யூனிஸ்கான் சேர்க்கப்படாததால் அவர் அடைந்த வேதனைக்கு அளவில்லை. பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்தது. ஆனால் டெஸ்ட் தொடரில் யூனிஸ் கானின் வருகையால் பலம் பெற்ற பாகிஸ்தான் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு பலத்த அடி கொடுத்திருக்கிறது. இந்தப் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்ததன் மூலம் பாகிஸ்தான் தேர்வாளர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் யூனிஸ்.
சாதனை மன்னன்
டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதமடித்த ஒரே பாகிஸ்தானியர், சர்வதேச அளவில் 12-வது வீரர், 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த முதல் நபர், டெஸ்ட் போட்டியில் அதிக சதங்கள் அடித்த பாகிஸ்தானியர் என்பது உள்ளிட்ட சாதனைகளை ஆஸ்தி ரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் நிகழ்த்தியிருக்கிறார்.
இதுவரை 92 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கும் யூனிஸ் கான் 7,819 ரன்களைக் குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர்கள் வரிசையில் ஜாவித் மியான்தத் (124 போட்டிகளில் 8,832 ரன்கள்), இன்ஸமாம் உல் ஹக் (120 போட்டிகளில் 8,830 ரன்கள்) ஆகி யோருக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் இருக்கிறார் யூனிஸ் கான். இதே பார்மில் யூனிஸ் கான் விளையாடுவாரானால் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை எட்ட அவருக்கு இன்னும் 10 போட்டிகள் போதும். மியான்தத், இன்ஸமாம் போல யூனிஸ் கானும் 120 போட்டிகளுக்கு மேல் விளையாடுவாரானால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமை யைப் பெற்றுவிடுவார்.
2005 ஜனவரி முதல் தற்போது வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்ச சராசரியைக் கொண்டுள்ள பேட்ஸ்மேன்கள் வரிசையில் இலங்கை யின் குமார் சங்ககாரா, மேற்கிந்தியத் தீவுகளின் சந்தர்பாலுக்கு அடுத்தபடியாக 3-வது யூனிஸ்கான் இடத்தில் இருக்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் ஆகியோரைவிட சிறப்பாக ஆடியிருக்கிறார் யூனிஸ்.
4-வது இன்னிங்ஸ் நாயகன்
சர்வதேச டெஸ்ட் அரங்கில் 4-வது இன்னிங்ஸில் 50-க்கும் மேற்பட்ட சராசரி மற்றும் 4-க்கும் மேற்பட்ட சதங் களை விளாசிய 6 பேரில் யூனிஸும் ஒருவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதல் 5 இடங்களில் இருப்பவர்களில் சங்க காரா (128 போட்டி) தவிர எஞ்சிய அனை வருமே (சச்சின், பாண்டிங், திராவிட், காலிஸ்) 160 போட்டிகளுக்கு மேல் விளையாடியவர்கள்.
அந்த 5 பேரும் 92 போட்டிகளில் விளையாடியிருந்தபோது எடுத்திருந்த ரன்களையும், யூனிஸ்கான் 92 போட்டிகளில் எடுத்திருக்கும் ரன்களையும் ஒப்பிட்டால் சங்ககாரா (8,093), திராவிடுக்கு (7,894) அடுத்தபடியாக யூனிஸ்கான் 3-வது இடத்தில் இருக்கிறார். சச்சின் (7,752), பாண்டிங் (7,274), காலிஸ் (7,190) ஆகி யோர் முறையே 4, 5, 6-வது இடங்களில் உள்ளனர்.
மேட்ச் வின்னர்
வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்கள் குவித்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் சச்சின், திராவிட், காலிஸுக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் யூனிஸ் உள்ளார். சச்சின் 106 போட்டிகளில் 8,705 ரன்களையும், திராவிட் 94 போட்டி களில் 7,690 ரன்களையும், காலிஸ் 78 போட்டிகளில் 6,254 ரன்களையும், யூனிஸ் கான் 73 போட்டிகளில் 5,921 ரன்களையும் குவித்திருக்கின்றனர்.
அந்நிய மண்ணில் தங்களது அணி வெற்றி பெற்ற போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் பாண்டிங், ஸ்டீவ் வாக் ஆகியோருக்கு அடுத்த படியாக 3-வது இடத்தில இருக்கிறார் யூனிஸ் கான். இவர் பாகிஸ்தானுக்கு கிடைத்த தலைசிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, ஆகச் சிறந்த மேட்ச் வின்னரும்கூட.
3 உலகக் கோப்பை அனுபவம்
ஒருநாள் போட்டியைப் பொறுத்த வரையில் 254 போட்டிகளில் விளையாடி 7,017 ரன்கள் குவித்திருக்கிறார். இதுதவிர 2003, 2007, 2011 என 3 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர். 2013 மார்ச்சுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து கழற்றிவிடப்பட்ட யூனிஸ் கான், கடந்த மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அழைக்கப்பட்டார்.
ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியைக் கட்டமைக்கப்போவதாகக் கூறி அவரைக் கழற்றிவிட்டனர் பாகிஸ்தான் தேர்வாளர்கள். ஆனால் டெஸ்டில் சிறப்பாக ஆடிச் சாதித்திருக்கும் யூனிஸ் கான் தேர்வாளர்களின் முடிவைத் தவறு என நிரூபித்திருக்கிறார். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தனது சேவை பாகிஸ்தான் அணிக்குத் தேவை என்பதை தேர்வாளர்களுக்கு உணர்த் தியிருக்கிறார். உலகக் கோப்பை அணி யில் யூனிஸ் கானைச் சேர்ப்பது பற்றித் தேர்வாளர்கள் இப்போது சிந்திக்க ஆரம்பித்திருப்பார்கள் என
நம்பலாம்.
இந்த உலகக் கோப்பைப் போட்டி வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான ஆடுகளங்களைக் கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறுகிறது. அங்கே அனுபவமற்ற வீரர்களோடு களமிறங்கினால் பாகிஸ்தானுக்கு நிச்சயம் பலத்த அடி காத்திருக்கும். எனவே யூனிஸ் கான் போன்ற அனுபவ வீரர்கள் பாகிஸ்தானுக்கு அவசியம். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக யூனிஸ் கான் எப்போதுமே சிறப்பாக ஆடி வந்திருக்கிறார் என்பது கூடுதல் பலம்.
ஒருவேளை யூனிஸ் கான் போன்ற அனுபவம் கொண்ட வீரர்கள் இன்றி பாகிஸ்தான் களமிறங்குமானால் அது நிச்சயம் அந்த அணிக்குப் பின்னடை வாகத்தான் அமையும். பாகிஸ்தானை டெஸ்ட் அரங்கில் தலைநிமிர வைத்துவிட்ட யூனிஸ் கான் மேலும் பல சவால்களை எதிர்கொண்டு சாதனைபுரிய நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago