செப்.27-ல் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனுக்கு எதிரான மனு மீது உச்ச நீதிமன்றம் விசாரணை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவிக்கு, ஸ்ரீனிவாசன் மீண்டும் போட்டியிடுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.

பீகார் கிரிக்கெட் சங்கம் தொடர்ந்துள்ள இந்த வழக்கை வரும் வெள்ளிக் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி பட்னாயக் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல். சூதாட்டப் புகார் தொடர்பாக பிசிசிஐ அமைத்த விசாரணைக் குழு சட்டவிரோதமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி பிசிசிஐ விடுத்த வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், பிசிசிஐ தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதாக ஸ்ரீனிவாசன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஐ.பி.எல். சூதாட்டப் புகார் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், பிசிசிஐ தலைவர் பதவிக்கு ஸ்ரீனிவாசன் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பீகார் கிரிக்கெட் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.

பிசிசிஐ ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 29-ல் சென்னையில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பிசிசிஐ தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE