ஆஷஸ் 4-வது டெஸ்ட்: ஆஸி.க்கு இங்கிலாந்து பதிலடி

ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. முன்னிலை பெற இன்னும் 91 ரன்கள் வேண்டிய நிலையில் ஆஸி அணி சிக்கலில் உள்ளது.

மெல்போர்னில் நடைபெற்று வரும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி களைகட்டியுள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 226 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி, இன்று மேலும் 29 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

அந்த அணியின் பீட்டர்சன் 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து அணி.

தொடர்ந்து ஆடிய ஆஸிக்கு துவக்க ஆட்டக்காரர் ராஜர்ஸ் நம்பிக்கையளித்தாலும், இங்கிலாந்தின் பவுலர்களின் வேகத்திற்கு அடுத்தடுத்து களமிறங்கியவர்கள் ஈடு கொடுக்க முடியாமல் திணறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆஸி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 164 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் ராஜர்ஸ் 61 ரன்கள் எடுத்தார். ஹாடின் 43 ரன்களுடன் களத்தில் உள்ளார். மற்ற எந்த வீரரும் 20 ரன்களைக் கூட எட்டவில்லை. இங்கிலாந்தின் ப்ராட் மற்றும் ப்ரெஸ்னன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளைப் போன்றே, இதிலும் இங்கிலாந்தால் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சின் முன் சோபிக்க முடியாமல் போனது. ஆனால் இம்முறை இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பதிலடியால் 200 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கும் நிலையில் ஆஸி உள்ளது.

நாளைய மூன்றாம் நாள் ஆட்டமே இப்போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் அனுமானம். இன்றைய நாள் ஆட்டத்தை பயன்படுத்திக் கொண்டு இரண்டாவது இன்னிங்க்ஸில் சிறப்பாக ஆடி, ஆஸிக்கு கடினமான வெற்றி இலக்கு நிர்ணயித்தால், இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE