மீண்டும் டிவிலியர்ஸ் அபாரம்: நியூசி.யை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் டிவிலியர்ஸ் தனது அபாரமான ஆட்டத்தை மீண்டும் ஆட, தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்தின், மவுண்ட் மான்கானுயில் உள்ள 'பே ஓவல்' மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா நியுசீலாந்தை முதலில் பேட் செய்ய அழைக்க அந்த அணி 45.1 ஓவர்களில் 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

நியுசீலாந்து அணியினரே இதுவரை ஆடாத இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெய்ன், பிலாண்டர், மோர்கெல், இம்ரான் தாஹிர், மெக்லாரன் ஆகியோர் மிகத் துல்லியமாகவும் சிறப்பாகவும் வீசினர். 35வது ஓவரில் நியுசீலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்து முடிவு நிலையில் இருந்தது.

ஆனால் அப்போது விக்கெட் கீப்பர் லூக் ரோன்ச்சி (99 ரன்கள்- 83 பந்துகள், 11 பவுண்டரி, 3 சிக்சர்கள்) மற்றும் டிரெண்ட் போல்ட் (21 நாட் அவுட்) இணைந்து கடைசி விக்கெட்டுக்காக 74 ரன்களைச் சேர்த்தது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி விக்கெட்டுக்காக சேர்க்கப்பட்ட 4-வது அதிகபட்ச ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நியுசீலாந்து அணியில் ஜூலை, 2013-ற்குப் பிறகு டேனியல் வெட்டோரி முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடினார். முக்கிய வீரர்களான கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் காயம் காரணமாக ஆடவில்லை.

பிட்சில் பேட்டிங் கடினம், பந்துகள் மட்டைக்கு அடிக்க ஏதுவாக வேகமாக வரவில்லை, மந்தமான இந்தப் பிட்சில் டேல் ஸ்டெய்ன், மற்றும் வெர்னன் பிலாண்டர் தொடக்க ஓவர்களை தங்களது அனுபவத்தின் வாயிலாக துல்லியமாக வீசி நியுசி. பேட்ஸ்மெனை திணறடித்தனர்.

ஆல்ரவுண்கர் ஜேம்ஸ் நீஷம் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்டார் அவர் 15 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்து பிலாண்டரின் பந்தில் விக்கெட் கீப்பர் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். குவிண்டன் டீ காக்கிற்கு இன்று அருமையான தினமாக அமைந்தது. அவர் 5 கேட்ச்கள் ஒரு ஸ்டம்பிங் செய்து 6 பேர் அவுட் ஆக காரணமாக அமைந்தார். இதன் மூலம் ஆடம் கில்கிறிஸ்ட், ரிட்லி ஜேகப்ஸ், அலெக்ஸ் ஸ்டூவர்ட், மார்க் பவுச்சர், தோனி ஆகியோரடங்கிய சாதனை விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் டீகாக் இணைந்தார்.

பிறகு மார்டின் கப்தில், பிலாண்டர் பந்தை பெரிய டிரைவ் ஆட முயன்று காலியானார். ஆனால் அதன் பிறகு நியுசீலாந்து பேட்ஸ்மென்களான பிரவுன்லீ மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் அடித்து ஆடத் தொடங்கினர். பிரவுன்லீ, மோர்னி மோர்கெல் ஃப்ரீ ஹிட் பந்தை புல் ஆடி சிக்சருக்கு விரட்ட, மெக்கல்லம், ஜெண்டில் பேஸ் போட்ட பிலாண்டரைப் பதம் பார்த்தார். பிலாண்டரின் பந்துகளில் ஒன்றை நேராகவும் மற்றொன்றை மிட்விக்கெட்டிலும் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசினார்.

ஆனால் இது நீடிக்கவில்லை பிரவுன்லீ 24 ரன்களில் இம்ரான் தாஹிர் பந்தில் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, 16-வது ஓவரில் மோர்னி மோர்கெல் அடுத்தடுத்து மெக்கல்லம் (16) மற்றும் கோரி ஆண்டர்சன் (0) ஆகியோரை வீழ்த்தினார். நியுசீலாந்து 68/5 என்று ஆனது. பிறகு ரோன்ச்சி, லாத்தம் (29) இணைந்து ஸ்கோரை 133 ரன்களுக்கு உயர்த்தினர். லாத்தம் டுமினி பந்தில் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார். பிறகு தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய நியுசீலாந்து 156/9 என்று ஆனது.

டிரெண்ட் போல்ட் இறங்க ரான்ச்சி இதுதான் நேரம் என அடித்து ஆடத் தொடங்கினார். மெக்லாரனை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார். 57 பந்துகளில் அரைசதம் கண்டார். டிரெண்ட் போல்ட்டை வைத்துக் கொண்டு ஸ்கோரை 230 ரன்களுக்கு உயர்த்தினார் ரோன்ச்சி. அவர் 99 ரன்கள் எடுத்து தனது அபாரமான முதல் சதத்தை எடுப்பார் என்று நினைத்த போது, ஸ்டெய்ன் பந்தை எட்ஜ் செய்து ஆட்டமிழந்தார்.

231 ரன்கள் இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா போல்ட்டின் மூலம் ஒரு அருமையான் பந்து வீச்சைச் சந்தித்தது. டீ காக், டுபிளேசிஸ் ஆகியோரை வீழ்த்தினார். ஆம்லா மந்தமாக 38 ரன்களை 74 பந்துகளில் 1 பவுண்டரியுடன் எடுத்து மில்ஸ் பந்தில் பவுல்டு ஆக தெ.ஆ. அணி 73/3 என்று ஆனது. பிறகு ரூசோ 26 ரன்களில் கோரி ஆண்டர்சனிடம் ஆட்டமிழக்க 97/4 என்று ஆனது.

நேதன் மெக்கல்லம், டேனியல் வெட்டோரி சிக்கனமாக வீச நியுசீலாந்தின் பீல்டிங் அபாரமாக அமைந்தது. பல பவுண்டரிகளைத் தடுத்து விட்டனர். பவுண்டரிகளே தென் ஆப்பிரிக்காவுக்கு அரிதான சூழ்நிலையில் டிவிலியர்ஸ், டுமினி ஆடினர். அதன் பிறகு வெட்டோரியை 2 பவுண்டரிகள் விளாசி அதிரடியைத் தொடங்கினார் டிவிலியர்ஸ்,

85 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுக்க, டுமினி தொடக்கத்தில் திணறி பிறகு 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 72 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருவரும் வெற்றிக் கூட்டணி படைத்தனர். ஆட்ட நாயகனாக டிவிலியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE