சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் சென்னை சுங்க வரித்துறை அணி 4-1 என்ற கோல் கணக்கில் தமிழக காவல் துறை அணியைத் தோற்கடித்தது.
சுங்கத் துறை அணி வீரர்கள் ஏ.மனோ, டி.பாரதிராஜா, எம்.ராமு ஆகியோரின் அட்டகாசமான ஆட்டத்துக்கு முன்னால் தமிழக காவல் அணியால் ஈடுகொடுக்க முடியாமல் போனது.
செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. திங்கள்கிழமை நடைபெற்ற சீனியர் டிவிசன் லீக் போட்டியில் சென்னை சுங்க வரித்துறை அணியும், தமிழக காவல் துறை அணியும் மோதின.
மனோ, ராமு அபாரம்
இரு அணிகளுமே 4-4-2 என்ற பார்மட்டில் விளையாடின. சுங்கத் துறை அணியின் ஸ்டிரைக்கர்கள் மனோ, ராமு இருவரும் ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் இறங்கினர். அந்த அணியின் நடுகளமும் வலுவாக இருந்தது ஸ்டிரைக்கர்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. குறிப்பாக ஸ்டிரைக்கர் மனோ படுவேகமாக பந்தை கோல் கம்பத்தை நோக்கி நகர்த்த, தமிழக காவல் அணியின் பலவீனமான பின்கள வீரர்களால் அதை சமாளிக்க முடியவில்லை.
முதல் 20 நிமிடங்களில் 2-0
இதனால் 5-வது நிமிடத்திலேயே சுங்கத் துறை கோல் அடித்தது. அந்த அணியின் பாரதி ராஜா வலது பகுதியில் இருந்து இந்த கோலை அடித்தார். இதன்பிறகு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சுங்கத் துறை அணிக்கு 20-வது நிமிடத்தில் அடுத்த கோல் கிடைத்தது. மிட்பீல்டில் இருந்து பந்தை எடுத்துச் சென்ற ராமு கோலடித்தார். இதனால் முதல் 20 நிமிடங்களில் சுங்கத் துறை 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பிறகு தமிழக காவல் அணிக்கு கோல் வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் இடது மிட்பீல்டரான விவேக் கோல் கம்பத்தின் அருகே பந்தை அடித்தபோதும், மற்ற வீரர்கள் அதை கோட்டைவிட்டனர். கோலடிக்க தொடர்ந்து போராடிய தமிழக காவல் அணிக்கு 38-வது நிமிடத்தில் பட்சிராஜன் கோலடித்தார்.
இடது எல்லையில் இருந்த தமிழக காவல் அணியின் வீரர் பிரபு கோல் கம்பத்தை நோக்கி பந்தை “பாஸ்” செய்தார். அப்போது வலது முனையில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி வந்த பட்சிராஜன், பந்து தரையில் விழுவதற்கு முன்னதாகவே அதை அற்புதமாக வலைக்குள் திருப்பி கோலாக்கினார். பட்சிராஜன் கடந்த சென்னை லீக் போட்டியில் சுங்கத் துறை அணிக்கு அதிக கோல் அடித்தவர் (6 கோல்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.
பிரெட்டி அபாரம்
இதன்பிறகு தமிழக காவல் அணியின் பிரபு கோலடிக்க முயற்சித்தார். வலது எல்லைக்கு பந்தை கொண்டு சென்ற அவர், எதிரணி வீரர்களுடன் தனிநபராகப் போராடினார். மற்ற வீரர்கள் முன்னேறி செல்லாததால் நல்ல வாய்ப்பு நழுவிப் போனது. சுங்கத் துறையின் வலது பின்கள ஆட்டக்காரரான பிரெட்டி வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் ஆடினார். அவர், தமிழக காவல் அணியின் ஸ்டிரைக்கர்களையும், மிட்பீல்டர்களையும் முன்னேற விடாமல் திணறடித்தார்.
ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் வலது எல்லையில் இருந்த பாரதிராஜாவின் கைக்கு பந்து செல்ல, அவர் அதை மனோவுக்கு “பாஸ்” செய்தார். இதை சரியாகப் பயன்படுத்தி மனோ கோலடிக்க, சுங்கத் துறை 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு சுங்கத் துறை அணிக்கு கிடைத்த ப்ரீகிக் வாய்ப்பை தமிழக காவல் அணியின் கோல் கீப்பர் மனோஜ் தகர்த்தார்.
தொடர்ந்து அபாரமாக ஆடிய சுங்கத் துறை ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் 4-வது கோலை அடித்தது. மனோ “பாஸ்” செய்த பந்தை நடுகளத்தில் இருந்து எடுத்துச் சென்று கோலடித்தார் மாற்று ஆட்டக்காரர் மோசஸ் ஹியூபர்ட் சிங். இறுதியில் சுங்கத் துறை அணி 4-1 கோல் கணக்கில் வெற்றி கண்டது.
எல்லா அணிகளும் தங்கள் அணிக்கு புதிய வீரர்களை சேர்த்துள்ள நிலையில், சுங்கத் துறை அணி புதிய வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் அபாரமாக ஆடியது. கடந்த முறை சுங்கத்துறைக்காக ஆடிய சுதாகர், ஜெயக்குமார் போன்ற வீரர்கள் இந்த முறை வேறு அணிக்கு மாறிவிட்ட நிலையில், அவர்கள் இல்லாத குறையை மனோ, ராமு, பாரதிராஜா ஆகியோர் போக்கிவிட்டனர்.
முதல் டிவிசன் ஆட்டம் டிரா
முன்னதாக நடைபெற்ற மத்திய உற்பத்தி வரித்துறை-ஸ்போர்ட்டிங் ஸ்டார் அணிகளுக்கு இடையிலான முதல் டிவிசன் லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago