ஸ்பான்சர் இல்லாமல் தவிக்கும் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி

By ஏ.வி.பெருமாள்

உலகக் கோப்பை வாள்வீச்சு போட்டிக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஸ்பான்சர் கிடைக்காமல் தவித்து வருகிறார் தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாடு திரும்பியிருக்கும் பவானி தேவி, ஸ்பான்சர் கிடைத்தால் மட்டுமே உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறார்.

இந்தியாவின் முன்னணி வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவி, சமீபத்தில் பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் ஆசிய அளவிலான வாள்வீச்சு போட்டியின் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்தியாவில் இருந்து வாள்வீச்சு அணியை அனுப்ப மத்திய விளையாட்டு அமைச்சகம் மறுத்துவிட்ட நிலையில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பவானி தேவி வெள்ளிப் பதக்கம் வென்று வந்திருக்கிறார்.

ஒலிம்பிக் இலக்கு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வாய்ப்பு கிடைக்காதது பவானி தேவிக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தாலும், பெற்றோர் மற்றும் பயிற்சியாளரின் ஊக்கத்தால் அதைத் தாண்டி வந்து இப்போது சாதித்திருக்கிறார். அவருடைய அடுத்த இலக்கு 2016-ல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிதான்.

ஸ்பான்சர் இல்லாததால் 2013-ல் எந்தப் போட்டியிலும் பங்கேற்காத பவானி தேவி, அமரண்டா என்டர்டெயின்மென்ட் போன்றவற்றின் உதவியால் 2014 சீசனில் உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட 4 போட்டிகளில் பங்கேற்றார். அந்தப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் சர்வதேச தரவரிசையில் 315-வது இடத்தில் இருந்து 77-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.

தரவரிசையில் முதல் 32 இடங்களுக்குள் முன்னேறும்பட்சத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்துவிடலாம். இந்த சீசனில் நடைபெறும் முக்கிய போட்டிகளில் பங்கேற்கும்பட்சத்தில் தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் முன்னேறிவிட முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பவானி தேவியின் இப்போதைய தேவை ஸ்பான்சர்தான்.

உடனடி தேவை ஸ்பான்சர்

வெனிசுலாவில் வரும் 27-ம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் பவானி தேவி, ஸ்பான்சர் கிடைத்தால் மட்டுமே வெனிசுலாவுக்கு செல்ல முடியும்.

இது தொடர்பாக பவானி தேவி கூறுகையில், “கடந்த சீசனில் 4 போட்டிகளின் மூலம் தரவரிசையில் வேகமாக முன்னேறியிருக்கிறேன். வரும் சீசனில் 15 போட்டிகள் வரை நடைபெறவிருக்கின்றன. இதில் முக்கியமான போட்டிகளில் பங்கேற்றாலே ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுவிடுவேன். வரும் 27-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை வெனிசுலாவில் உள்ள ஒரு தீவில் நடைபெறுகிறது.

அதனால் விமானக் கட்டணத்துக்கே ரூ.2 லட்சம் தேவைப்படுகிறது. இதுதவிர தங்குமிடம், உணவு என குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் இல்லாமல் உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாது. நான் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆசிய வாள்வீச்சு போட்டிக்கே எனது தந்தை ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்துவிட்டார். அதனால் இனிவரும் போட்டிகளுக்கு ஸ்பான்சர் கிடைத்தால் மட்டும்தான் பங்கேற்க முடியும். யாராவது உதவுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் உலகக் கோப்பை போட்டிக்காக முழு வீச்சில் தயாராகி வருகிறேன்.

ஆனால் போட்டிக்கு இன்னும் 9 நாட்கள்தான் உள்ளன. அடுத்த 5 நாட்களுக்குள் யாராவது நிதியுதவி அளித்தால்தான் உலகக் கோப்பையில் பங்கேற்பதை உறுதி செய்ய முடியும். எஸ்டிஏடியின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் (எலைட் ஸ்போர்ட்ஸ் பெர்சன்ஸ்) தி்ட்டத்தில் எனக்கும் வாய்ப்பளித்தால் இந்த சீசனில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகளில் நான் பங்கேற்க முடியும். உலகக் கோப்பையைத் தொடர்ந்து வரும் நவம்பரில் ஸ்காட்லாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன்” என்றார்.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டி போன்றவை நிறைவடையும் போதெல்லாம் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் மோசமான நிலையைப் பார்த்து வருத்தமடையும் நாம், பவானி தேவி போன்ற வளர்ந்து வரும் வீராங்கனைகளை ஊக்குவிப்பது அவசியம். சொந்த முயற்சியால் வாள்வீச்சில் சாதித்து வரும் பவானி தேவிக்கு விளையாட்டு ஆர்வலர்களும், ஸ்பான்சர்களும் தோள் கொடுக்க வேண்டிய தருணம் இது. தொடர்புக்கு: 99627 42561

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்