கோப்பா அமெரிக்கா கால்பந்து: அமெரிக்க கனவை தகர்த்தது கொலம்பியா

By ஆர்.முத்துக்குமார்

அமெரிக்காவில் நடைபெறும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரின் பிரிவு ஏ முதல் போட்டியில் கொலம்பியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றித் தொடக்கம் கண்டது.

1994-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடைபெறும் பெரிய கால்பந்து தொடராகும் இது. 1994-ம் ஆண்டு கொலம்பியாவை அமெரிக்கா வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. ஆனால் இம்முறை அந்த எதிர்பார்ப்பு தகர்ந்தது. சாண்டா கிளாராவில் நடைபெற்ற முதல் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் கொலம்பிய அணி வெற்றி பெற்றது.

கொலம்பிய அணியின் நட்சத்திர வீரரும், அபாயகரமான வீரருமான ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், மற்றும் ஏ.சி.மிலன் அணியின் நட்சத்திரம் கிரிஸ்டியன் ஸபாட்டா ஆகியோர் முதல் பாதியிலேயே இரு கோல்களை அடித்தனர்.

இந்தத் தோல்வியை அடுத்து இதே பிரிவில் கோஸ்டாரிகா, பராகுவே போன்ற கடினமான அணிகளை அமெரிக்கா வீழ்த்த கடுமையாகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் பாதியிலேயே கொலம்பிய ஆதிக்கம்:

கொலம்பிய வீரர்கள் 8-வது நிமிடத்திலேயே முன்னிலை பெற்றனர். இதில் கொலம்பிய வீரரை அமெரிக்கா சரியாக ‘மார்க்’ செய்யத் தவறியது.

அதாவது கொலம்பிய வீரர் ஸபட்டாவை சரியாக அமெரிக்க வீரர்கள் மார்க் செய்யவில்லை. இதனால் எட்வின் கார்டனாவின் கார்னர் ஷாட் அருமையாக சுழன்று உள்நோக்கி வரும் போது மார்க் செய்யப்படாத ஸபட்டா முன்னால் ஊடுருவி முதல் கோலை அடித்தார். அமெரிக்க தடுப்பாட்ட வீரர் ஜெஃப் கேமரூன் பந்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகே அமெரிக்க வீரர்கள் தடுமாறத் தொடங்கினர். கொலம்பிய அணி நடுக்களத்தில் குவிய, அமெரிக்காவுக்கு தொடர் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

கொலம்பியா அணி அமெரிக்காவின் கோல் பகுதி முழுதும் ஆதிக்கம் செலுத்தியது, பந்தை தங்கள் வசத்திலிருந்து விட்டுவிடவில்லை. 16-வது நிமிடத்திலேயே செபஸ்டியன் பெரெஸ் அபாரமான ஒரு ஷாட்டை ஆட அமெரிக்காவின் பிராட் குஸான் டைவ் அடித்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அமெரிக்காவுக்கு கிடைத்த உண்மையான கோல் வாய்ப்பு 36-வது நிமிடத்தில்தான் ஏற்பட்டது. கிளிண்ட் டெம்ப்சே ஓடியபடியே அடித்த ஷாட் கொலம்பிய கோல் கீப்பர் டேவிட் ஓஸ்பினாவைத் தாண்டி வெளியே சென்றது.

இது நடந்து சில நிமிடங்களுக்கெல்லாம் கொலம்பிய வீரர் ஃபாரித் டையஸ் அடித்த கிராஸை அமெரிக்க வீரர் யெட்லின் கையால் தடுத்ததாக நடுவர் தீர்ப்பளித்தார். இது கோல் வாயில் நடந்ததால் பெனால்டி கிக் அல்லது ஸ்பாட் கிக் கொலம்பியாவுக்கு வழங்கப்பட்டது. இதனை ரோட்ரிக்ஸ் முறையாக 2-வது கோலாக மாற்றினார். அமெரிக்க வீரர்கள் இந்த பெனால்டி வழங்குதலை கடுமையாக எதிர்த்தனர் ஆனால் மெக்சிகோ நடுவர் ரொபர்டோ கார்சியா உறுதியாக இருந்தார். காரணம் பந்துக்கு பின்புறத்தைக் காட்டிக் கொண்டிருந்த யெட்லின் கையை மட்டும் உயர்த்தி தடுக்க எத்தனித்தார் என்பது தெள்ளத் தெளிவானது.

கொலம்பிய வீரர் எட்வின் கார்டோனாவின் திறமை அமெரிக்க வீரர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அமெரிக்க வீரர்கள் வசம் பந்து வந்த போது அதனை கோலாக மாற்றும் எந்தவித உத்திகளும் அந்த அணியிடத்தில் இல்லை. ஒரு ஷாட் கூட இலக்கை நோக்கி அமையவில்லை.

இடைவேளைக்குப் பிறகும் கொலம்பிய வீரர் கார்டோனா அமெரிக்க தடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். ஒரு பந்தை அவர் தோட்டா வேகத்தில் அடிக்க அமெரிக்க கோல் கீப்பர் குஸானால் சரியாகத் தடுக்க முடியவில்லை பந்தை தவற விட்டார். பந்து பாக்கா காலருகே வந்த போது கேமரான் அவரை வீழ்த்தினார், இதனால் கொலம்பிய வீரர்கள் ஸ்பாட் கிக் வேண்டும் என்று கோரினர். ஆனால் இம்முறை நடுவர் செவிசாய்க்கவில்லை.

கொலம்பியா தொடர்ந்து நெருக்கடி கொடுக்க, பந்தை தங்கள் கால்களிலேயே வைத்துக் கொண்டு தங்களுக்குள்ளேயே ஆடிக் கொண்டிருக்க அமெரிக்க வீரர்களுக்கு கோபம் ஏற்பட்டிருக்க வேண்டும், அதுதான் நடந்தது. 59-வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பு கிட்ட டெம்ப்சே எழும்பி தலையால் முட்ட பந்து கோல் லைனுக்கு வெளியே சென்றது. சில நிமிடங்களுக்குப் பிறகு டெம்ப்சேயின் ஃப்ரீ கிக் கோலாக மாறியிருக்க வாய்ப்பிருந்த போது கொலம்பிய கோல் கீப்பர் டேவிட் ஆஸ்பினா அருமையாக தடுத்தார்.

அதன் பிறகே அமெரிக்கா இரண்டு இளம் திறமைகளை உள்ளிறக்கியும், கொலம்பிய தடுப்பாட்டம் இறுக்கப்பட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மொத்தத்தில் பார்த்தால் இரண்டு அல்லது மூன்று சந்தர்ப்பங்கள் தவிர கொலம்பிய அணி பிரச்சினை அதிகமில்லாமல் வெற்றி பெற்றதாகவே தோன்றுகிறது.

கொலம்பிய அணிக்கும் தங்கள் பிரிவில் உள்ள கோஸ்டா ரிகா மற்றும் பராகுவே அணிகள் கடும் சவாலே, எனவே இந்த பிரிவிலும் உறுதியான வெற்றியாளர்களை நிர்ணயம் செய்து விடுவது கடினமே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்