தமிழ்நாடு பிரிமியர் லீக் டி 20 தொடர் சேப்பாக்கத்தில் இன்று தொடங்குகிறது. மாலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-தூத்துக்குடி அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லாத குறையை போக்கும் வகையில் டிஎன்பிஎல் தொடரை ஆரம்பித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். 25 நாட்கள் நடக்கும் இந்தத் தொடர் இன்று தொடங்குகிறது. தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு, தேசிய அளவிலான டி 20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவும், கிராமங்களில் உள்ள வீரர்களுக்கு டி 20 அளவிலான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் இந்த தொடர் நடத்தப்படுகிறது.
இந்த தொடரை ஒரு மாதத்துக்கு முன்பே பிரபலப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மேற்கொண்டது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஹைடன் மதுரை, நெல்லை பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
மதுரை அணியின் லோகோ அறிமுக விழாவில் சேவாக் கலந்து கொண்டு அசத்தினார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விழாவில் ஆஷிஸ் நெஹ்ரா, இர்பான் பதான், முன்னாள் கேப்டன் அசாருதீன் ஆகியோர் கலந்து கொண்டு உற்சாகம் அளித்தனர்.
தமிழகத்தின் இளம் வீரர்களுக்கான தேடலாக இந்த தொடர் அமையும் என கருதப்படுகிறது. இந்த தொடரில் ரவிச் சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பத்ரிநாத் என சீனியர்கள் இருப்பது இளம் வீரர்களுக்கு பலம்.
‘சீனியர் வீரர்களுக்கு ஐபிஎல் அளவுக்கு பணம் கிடைக்காது. இருந்தாலும், அவர்கள் கிரிக்கெட்டுக்கு திருப்பிச் செலுத்தும் நேரமிது. முடிந்தவரை இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு சீனியர்கள் பொறுப்பேற்க வேண்டும்’ என கோப்பையை அறிமுகப்படுத்தி விட்டு தோனி சொன்ன வார்த்தைகள்தான் இது.
மதுரை அணியின் லோகோவை அறிமுகப்படுத்தி விட்டு ‘மாவட்ட அளவிலான வீரர்கள் மாநில அணிக்கு தேர்வாக இந்த தொடர் நல்ல வாய்ப்பு’என கூறினார் சேவாக். இதே கருத்தை தான் நெஹ்ரா, ஜாகீர்கான், இர்பான் பதான், அசாருதீன் ஆகியோர் உதிர்த்தனர்.
இவர்கள் சொல்வதை போன்று புதிதாக இளம் வீரர்கள் உருவெடுக்க மட்டுமல்ல, ஏற்கெனவே ஐபிஎல் அணிகளில் இடம்பெற்று விளையாடும் லெவனில் இடம் கிடைக்காமல் தவிக்கும் வீரர்களுக்கும், தங்களை நிரூபிக்க இது நல்ல வாய்ப்பு.
ஐபிஎல் பாணியிலான இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், தூத்துக்குடி டூட்டி பேட்ரியாட்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்காக மொத்தம் 152 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரவிசந்திரன் அஸ்வின் திண்டுக்கல் அணியிலும், தினேஷ் கார்த்திக் தூத்துக்குடி அணியிலும், முரளி விஜய் கோவை அணியிலும் இடம் பெற்றுள்ளனர்.
போட்டிகள் சென்னை, நத்தம், திருநெல்வேலி ஆகிய 3 இடங்களில் நடைபெறுகிறது. இந்த தொடர் செப்டம்பர் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. பகல் இரவு ஆட்டமாக மொத்தம் 31 போட்டிகள் நடைபெறும். போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. தமிழ் வர்ணணையுடன் விஜய் சூப்பர் சானலில் நேரடி ஒளிபரப்பை காணலாம்.
ரூ.1 கோடி பரிசு
இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சம், 3 மற்றும் 4-வது இடங் களுக்கு தலா ரூ.40 லட்சம், அடுத்த நிலை யில் உள்ள 4 அணிகளுக்கு தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.3.40 கோடிக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
தொடக்க நாளான இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-தூத்துக்குடி டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. சேப்பாக் அணிக்கு பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹேமங் பதானியும், கேப்டனாக சதீஷூம் உள்ளனர்.
தூத்துக்குடி அணி அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் தலைமையில் களம் காண்கிறது.
தொடக்க விழா நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளும் தொடக்க விழாவில் இடம் பெறுகிறது. நடிகர்கள் தனுஷ், மாதவன், நடிகைகள் எமி ஜாக்சன், ஆன்ட்ரியா, தன்ஷிகா, பாடகர் கார்த்தி, இசை அமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் ஆடல், பாடல் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். தொடக்க விழா நிகழ்ச்சி 30 நிமிட நேரம் நடைபெறும்.
அணி விவரம்:
தூத்துக்குடி:
தினேஷ்கார்த்திக் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் கிறிஸ்ட், அபிநவ் முகுந்த், அவுசிக் சீனிவாஸ், கவுசிக் காந்தி, பாலாஜி, ஆனந்த் சுப்பிரமணியன், ஆகாஷ் சும்ரா, சத்யநாரயணன், சுஷில், கணேஷ் மூர்த்தி, அதிசயராஜ் டேவிட்சன், மாருதி ராகவ், விஷால், சித்தார்த் அகுஜா, லட்சுமண், நாதன், நிகுல் ஆனந்த்.
சென்னை:
சதீஷ்(கேப்டன்), யோம கேஷ், தலைவன் சற்குணம், அந்தோணி தாஸ், கோபிநாத், சாய் கிஷோர், சசிதேவ், ஜோயல் ஜோசப், தமிழ் குமரன், அலெக்ஸாண்டர், வசந்த் சரவணன், ராகுல், அஸ்வத் முகுந்தன், கார்த்திக், ரஜில் அப்துல் ரகுமான், கவுஜித் சுமாஷ், வாசு தேவன், ஆதித்யா பாரூக், சிபி ஜவஹர்.
நேரம்:6.30
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, விஜய் சூப்பர்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago