மே.இ.தீவுகளில் ஹாட்ரிக் டெஸ்ட் தொடர் வெற்றியைச் சாதிப்பாரா கோலி?

By இரா.முத்துக்குமார்

2006-ல் ராகுல் திராவிட், 2011-ல் தோனி ஆகியோர் தலைமையில் மே.இ.தீவுகளில் டெஸ்ட் தொடர்களை வென்றதையடுத்து கோலி தற்போது வென்று ஹாட்ரிக் வெற்றியை இந்திய அணிகாக சாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுவரை இந்தியா-மே.இ.தீவுகள் இடையே 90 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் மே.இ.தீவுகள் 30-ல் வெல்ல, இந்திய அணி 16-ல் மட்டுமே வென்றுள்ளது. மற்ற போட்டிகள் டிரா ஆகியுள்ளன. இந்தியா பெற்ற 16 டெஸ்ட் வெற்றிகளில் பெரும்பாலும் உள்நாட்டிலும், சரிவு கண்ட மே.இ.தீவுகள் அணிக்கு எதிராகவும் பெற்ற வெற்றிகளே.

இலங்கை, தென் ஆப்பிரிக்காவை டெஸ்ட் தொடர்களில் கோலி தலைமையில் இந்திய அணி வீழ்த்தியதால் தற்போது கோலி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் அனில் கும்ப்ளேவை பயிற்சியாளராக நியமித்ததும், இந்த அணியை பற்றி இவரும் ரவி சாஸ்திரியும் அளித்த ‘பில்ட்-அப்’ ஆகியவையும் சேர்ந்து எதிர்பார்ப்புகளைக் கூட்டியுள்ளது.

முரளி விஜய் உத்திரீதியாக மிகச்சிறந்த தொடக்க வீரராக விளையாடி வருகிறார், கவாஸ்கர் வாயால் சிறந்த உத்தி பட்டம் பெற்ற ‘பிரம்ம ரிஷி’ தற்போது முரளி விஜய்.

விராட் கோலி தனது சிறந்த ஃபார்மின் உச்சத்தில் இருக்கிறார். அவர் டி20, ஒருநாள், டெஸ்ட் என்று வித்தியாசம் பார்க்காமல் தனது பாணி ஆட்டத்தை ஆடினால் நல்லது. இல்லையெனில் இன்னொரு ஜேம்ஸ் ஆண்டர்சன் நிகழ்வு நடந்து விடும்.

அஜிங்கிய ரஹானே சிறந்த பேட்ஸ்மென் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, லார்ட்ஸில் கிரீன் டாப் பிட்சில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்டோருக்கு எதிராக முதல் நாள் பிட்சில், விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்திய அணிக்காக, அடித்த சதம் உலகத்தரம் வாய்ந்தது. இதனால் அந்த டெஸ்ட் போட்டியில் நாம் வென்றோம். நன்றி: இசாந்த் சர்மாவின் பவுன்சர்கள் வீழ்த்திய விக்கெட்டுகள்.

ஸ்பின் பிட்ச் போட்டால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெறவே வாய்ப்பு, ஆனால் அதே வேளையில் மே.இ.தீவுகளில் சுனில் நரைன் சேர்க்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும் மே.இ.தீவுகளில் தற்போது வேகப்பந்து வீச்சை விட ஸ்பின் நன்றாக உள்ளது.

வேகபந்து வீச்சுக்குச் சாதக பிட்ச் போட்டாலும் இந்தியாவில் மொகமது ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் உள்ளனர், மேலும் புவனேஷ் குமார், மும்பை இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் உள்ளனர்.

எனவே மே.இ.தீவுகளுக்குத்தான் நெருக்கடி அதிகம். மே.இ.தீவுகள் இந்தத் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் டிராவுடன் எஸ்கேப் ஆனால் அது அந்த அணிக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும்.

மே.இ.தீவுகளில் இந்தியா: ஒரு பார்வை

1948-ம் ஆண்டு இந்தியாவும் மே.இ.தீவுகளும் முதல் டெஸ்ட் போட்டியில் மோதி்ன. 1970-71-ல் இந்தியா முதன் முதலில் மே.இ.தீவுகளில் டெஸ்ட் தொடரை வென்றது, அப்போதைய வலுவான அணிக்கு எதிராக இதனைச் சாதித்த இந்திய கேப்டன் அஜித் வடேகர். இந்த தொடரில் அறிமுகமான சுனில் கவாஸ்கர் இரு இன்னிங்ஸ் சதங்கள் சாதனையுடன் ஒரே தொடரில் 774 ரன்கள் விளாசி கிரிக்கெட் உலகில் பரவலாக பேசவைக்கப்பட்டார். திலிப் சர்தேசாயும் இந்தத் தொடரில் 612 ரன்களை எடுத்தார். பொதுவாக கவாஸ்கரை குறிப்பிடுபவர்கள் இந்தத் தொடரில் திலிப் சர்தேசாயின் சாதனைகளை குறிப்பிட மறந்து விடுவது வழக்கம்.

இதற்கு முன்னதாக 1952-53-ல் 1-0 என்று இந்திய அணி தோற்றது, பிறகு 1961-62 தொடரில் 0-5 என்று உதை வாங்கியது. 1975-76 டெஸ்ட் தொடரில் பிஷன் பேடி தலைமையில் போர்ட் ஆஃப் ஸ்பெயின் டெஸ்டில் 4-வது இன்னிங்சில் 406 ரன்களை எடுத்து இந்தியா மாரத்தன் வெற்றியை பெற்றது, கவாஸ்கர், விஸ்வநாத் இருவரும் அபாரமான சதம் எடுத்தனர், ஆனால் தொடரை இந்தியா 1-2 என்று இழந்தது. இந்த சாதனை டெஸ்ட் விரட்டல் 2013-ம் ஆண்டு மே.இ.தீவுகளாலேயே முறியடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 418 ரன்கள் இலக்கை விரட்டி மே.இ.தீவுகள் வென்றது. இப்போது இந்தியாவின் அந்த விரட்டல் 3-வது இடத்தில் உள்ளது.

1982-83-ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி மே.இ.தீவுகளுக்குச் சென்றபோது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்று தோற்றாலும் கபிலின் பந்து வீச்சும் பேட்டிங்கும் உலகிற்கு அறிவிப்பதாக அமைந்தது இந்தத்தொடரில் நடைபெற்ற ஒருநாள் போட்டி ஒன்றில் மே.இ.தீவுகளை இந்தியா வீழ்த்தியதே பிற்பாடு 1983 உலகக்கோப்பை வெற்றிக்கான முன்னோடியாக அமைந்தது.

இன்று விவரம் புரியாமல் சுனில் கவாஸ்கரை கேலி பேசுபவர்கள் இந்தப் போட்டியை பார்த்திருந்தால் கருத்தை மாற்றிக் கொள்வார்கள், கவாஸ்கர் 90 ரன்களை எடுக்க கபில்தேவ் 36 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 72 ரன்களை விளாச 47 ஓவர்களில் இந்தியா 282 ரன்கள் விளாசியது. லாய்ட் கேப்டன்சியில் எந்த ஒரு அணியும் ஓவருக்கு 6 ரன்கள் விகிதத்தில் குவித்ததில்லை. இந்த ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் 255 ரன்களை எடுத்து தோல்வி தழுவியது. மொஹீந்தர் அமர்நாத் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் சிறந்த பேட்ஸ்மென் என்ற பெயர் பெற்றார். இவர் இதற்கு முந்தைய பாகிஸ்தான் தொடரில் 583 ரன்களையும் இந்தத் தொடரில் 598 ரன்களையும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு 1988-89 தொடரில் திலிப் வெங்சர்க்கார் தலைமையில் இந்திய அணி இங்கு 0-3 என்று உதை வாங்கியது, இதிலும் கபில், ரவிசாஸ்திரி, வெங்சர்க்கார் சோபித்தனர்.

1996-97 சச்சின் தலைமையிலான தொடரில் இந்தியா 1-0 என்று தோல்வி தழுவியது. ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி இலக்கான 119 ரன்களை எடுக்க முடியாமல் பிஷப், ஆம்ப்ரோஸ், பிராங்க்ளின் ரோஸ் பந்து வீச்சில் இந்திய அணி 81 ரன்களுக்குச் சுருண்டது சச்சின் மனதில் தீராத வேதனையை அளித்தது.

2002-ல் சவுரவ் கங்குலி தலைமையில் இந்திய அணி மீண்டும் 1-2 என்று தோல்வியே தழுவியது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரிடம் சச்சின் பவுல்டு ஆகிக் கொண்டேயிருந்தார்.

பிறகு 2006-ல்தான் ராகுல் திராவிட் தலைமையில் மே.இ.தீவுகளில் இந்தியா 1-0 என்று டெஸ்ட் தொடரை வென்றது, இதன் பிறகு தோனி தலைமையில் டெஸ்ட் தொடரை வென்றோம்.

எனவே இம்முறை கோலி தலைமையில் தொடரை வென்றால் ஹேட்ரிக் வெற்றியாகும். ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஆடுவதில்லை எனவே அவருக்குப் பதிலாக ராகுல் மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட வேண்டும்.

அணி இப்படியிருந்தால் நன்றாக இருக்கும்: விஜய், தவண், புஜாரா, கோலி, ரஹானே, ராகுல், சஹா, ஜடேஜா, அஸ்வின், இசாந்த், மொகமது ஷமி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்