ஹேண்ட்ஸ்கம்ப், ஷான் மார்ஷ் அபாரத் தடுப்பாட்டம்: தோல்வியிலிருந்து தப்பியது ஆஸ்திரேலியா

By ஆர்.முத்துக்குமார்

ராஞ்சி டெஸ்ட் போட்டியின் 5-ம் நாளான இன்று கோலி தலைமையினால் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்ட நிலையிலும் ஆஸ்திரேலிய அணி அபாரமாக தடுப்பாட்டம் ஆடி போட்டியை டிரா செய்து தோல்வியிலிருந்து தப்பித்தது.

2-வது இன்னிங்சில் 100 ஓவர்கள் ஆடிய ஆஸ்திரேலியா கடைசியில் 204/6 என்று இருந்த போது இனி இந்த டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து ஆடிப்பயனில்லை என்று இரு கேப்டன்களும் வெற்றி தோல்வி இல்லாத முடிவை ஏற்றனர். 3 டெஸ்ட்கள் முடிவுற்ற நிலையில் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது, இதனால் அடுத்த தரம்சலா போட்டிக்கான மதிப்பு அதிகரித்துள்ளது.

2010-11-க்குப் பிறகு முதல் இன்னிங்சில் பின்னடைவு கண்ட ஒரு அணி டெஸ்ட்டை டிரா செய்வது இதுவே முதல் முறையாகும். பிட்சின் இரு முனைகளிலும் பக்கவாட்டுப்பகுதியில் கொதகொதவென்று காணப்பட்டதே தவிர, நடுபிட்சில் குழி உருவாகவில்லை, இதனால் அஸ்வின் விக்கெட் வீழ்த்த திணறினார். அவர் பல்வேறு விதமான பந்து வீச்சு முறைகளைக் கையாண்ட போதிலும் பலன் அளிக்கவில்லை. பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 200 பந்துகளை எதிர்கொண்டு 72 ரன்கள் எடுத்து சுவாரய் நின்று டிராவை உறுதி செய்தார். ஷான் மார்ஷ் 197 பந்துகளைச் சந்தித்து 7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் அருமையான பந்துக்கு விஜய்யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய பிட்ச் ஒன்றில் கடைசி நாளில் 4 எதிரணி விக்கெட்டுகளைத்தான் கைப்பற்ற முடிந்துள்ளது என்பது உண்மையில் ஆச்சரியமிக்க ஒன்றாகும்.

பிட்சைப் பொறுத்தவரையில் இந்தத் தொடரில் சிறந்த பிட்ச் என்றே கூறவேண்டும் டெக்னிக்கே தேவையில்லை ரன்களைக் குவிக்கலாம் என்பது போன்ற பிட்சும் இல்லை, அதே போல் சும்மா குழியில் போட்டால் விக்கெட் என்ற கண்மூடித்தனமான பவுலிங் சாதக பிட்சும் இல்லை, பிட்ச் தயாரிப்பில் பங்களிப்பு செய்த தோனி, ராஞ்சியின் மானம் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது தெரிகிறது, அவர் இன்று மைதானத்துக்கு வந்திருந்தார், இரு அணிகளுமே திறமையைப் பயன்படுத்தி கூடுதல் முயற்சியில்தான் ஆட்டத்தை வெற்றிக்கு நகர்த்த முடியும் என்ற வகையான பிட்சில் ஆஸ்திரேலியா கடினமாக ஆடி டிரா செய்தது நல்ல டெஸ்ட் போட்டியின் நல்ல முடிவு என்பதாகவே பார்க்கப்பட வேண்டும்.

5-வது விக்கெட்டுக்காக ஹேண்ட்ஸ்கம்ப், மார்ஷ் இணைந்து 62 ஓவர்களைக் கடத்தி 124 ரன்களைச் சேர்த்தனர், இந்தக் கூட்டணிதான் டெஸ்ட் போட்டியை டிராவை நோக்கி உறுதியாக நகர்த்தியது, மார்ஷ் ஆட்டமிழந்த பிறகு கூட மேக்ஸ்வெலும் நீடிக்கவில்லை அவர் அஸ்வினின் கேரம் பந்துக்கு விஜய்யிடம் கேட்ச் கொடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார், ஆனால் அப்போதே ஆட்டம் வெற்றி தோல்வியற்ற நிலைக்குச் சென்று விட்டது.

இன்று காலை 23/2 என்று தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, நேற்றைய ரஃபில் பட்டு ஜடேஜா பந்து தெறித்த அச்சத்துடனேயே களமிறங்கினர். ஸ்மித்திற்கு இந்தத் தொடரில் ஸ்டம்பை நோக்கி வீசி நெருக்கடி கொடுத்தனர், ஆனால் இந்தப் பிட்சில் அவர் முதல் இன்னிங்சில் சுவர் போல் நின்று ஆட்டமிழக்காமல் 178 ரன்களைச் சேர்த்ததால் இந்த இன்னிங்சில் அவருக்கு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி வெறுப்பேற்றி வீழ்த்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது, உமேஷ் யாதவ் அருமையாக அந்த லைனில் வீசினார் அவ்வப்போது திடீரென பந்துகளை உள்ளே ஸ்விங் செய்தும் அச்சுறுத்தினார்.

மேட் ரென்ஷா ஸ்பின்னர்களை அருமையாக காலைதூக்கிப் போட்டு ஆடினார், ஒன்றும் செய்ய முடியவில்லை, இந்நிலையில் கோலி, இசாந்த் சர்மாவை கொண்டு வந்தார், அவர் ரென்ஷாவை கொஞ்சம் படுத்தினார். ஷார்ட் ஆஃப் லெந்த், புல் லெந்த் என்று மாறி மாறி வீசி அவரை சற்றே குழப்பினார் இதனால் அவுட் ஆவதற்கு மூன்று பந்துகள் முன்னதாக ஷார்ட் ஆஃப் லெந்த் பந்தை ஆடி பந்து ஸ்லிப்புக்கு முன்னால் பிட்ச் ஆகிச் சென்றது. அடுத்த பந்து சற்றே உயரம் குறைவாக வந்து தொடைக்காப்பைத் தாக்கியது. அடுத்த பந்தும் ஷார்ட் பிட்ச் பந்து. அடுத்ததாக அனுபவ வீரர் என்றால் புல் லெந்த் பந்தை எதிர்பார்த்திருப்பார் ஆனால் ரென்ஷா எதிர்பார்க்கவில்லை, இசாந்த் வீசிய ஃபுல் பந்து காப்பைத் தாக்க எல்.பி.ஆனது. 84 பந்துகள் ஆடி 15 ரன்களில் ரென்ஷா வெளியேறினார், ஆனால் இது ஒரு நல்ல ‘வொர்க் அவுட்’ முறை விக்கெட் வீழ்த்தலாகும்.

கேப்டன் ஸ்மித் 68 பந்துகளைச் சந்தித்து 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பொதுவாக கோலி கடுமையாக களவியூகத்தை நெருக்கியும் மாற்றியும் நெருக்கடி கொடுத்தாலும் இவர் பிரச்சினையின்றியே ஆடினார்.

ஆனால் ஜடேஜா வீசிய பந்து ஒன்று ரஃபில் பட்டுத் திரும்பியது, இந்தப் பந்தை ஆட வேண்டாம் என்று அவர் முடிவெடுத்து விட்டார், நன்றாகத் திரும்பிய பந்து ஆஃப் ஸ்டம்பைச் சாய்த்தது. பந்தின் திசையை முற்றிலும் தவறாக வாசித்தார் ஸ்மித். இப்போது 63/4 என்ற நிலையில் ஆஸ்திரேலியா காலி என்றே பலரும் கருதினர்.

ஆனால் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், ஷான் மார்ஷ் விட்டுக் கொடுக்காத மன உறுதி, வலுவான உத்தி, மலையளவு பொறுமை ஆகியவற்றுடன் இந்திய வெற்றியைத் தடுத்தனர்.

இருமுறை நடுவர் நாட் அவுட் கொடுத்தார் இருவருக்குமே. ஆனால் அதை ரிவியூ செய்தாலும் நடுவர் தீர்ப்பு ஏற்கப்பட்டிருக்கும், மற்றபடி அவர்களது ஆட்டம் இந்தியாவில் ஆடப்பட்ட மிகச்சிறந்த டிராவுக்கான தடுப்பாட்டம் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.

உணவு இடைவேளையின் போது 83/4 என்று இருந்த ஆஸ்திரேலியா தேநீர் இடைவேளையின் போது 149/4 என்று இருந்தது. அதன் பிறகு 187 ரன்களில்தான் ஷான் மார்ஷ் ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது 92-வது ஓவர் நடந்து கொண்டிருந்தது.

கிளென் மேக்ஸ்வெல் களமிறங்கியவுடன் கோலி அவரைச் சீண்டிக் கொண்டேயிருந்தார், இருவரும் ஓரிருவார்த்தைகளையும் பரிமாறிக் கொண்டனர். கடைசியில் அஸ்வினின் கேரம் பந்துக்கு அவர் ஆட்டமிழந்த போது ‘சீண்டல் வழியனுப்புதல்’ நல்ல வேளையாக இடம்பெறவில்லை.

’அருமையான டெஸ்ட் போட்டியாகும் இது’ என்று இரு கேப்டன்களுமே கருத்து தெரிவித்தனர். ஸ்மித்தின் அருமையான சதம், புஜாரா, சஹா ஆகியோரது வெற்றி பெறச் செய்வதற்கான இரட்டை மற்றும் சதம், ஜடேஜாவின் சற்றும் மனம் தளராத, அயராத நீண்ட ஸ்பெல்கள், அதுவும் அபாயகரமான ஒரு பவுலராகத் திகழ்ந்தது, மார்ஷ், ஹேண்ட்ஸ்கம்ப் ஆகியோரின் உறுதி என்று நல்ல ஆரோக்கியமான டெஸ்ட் போட்டியாக இது டிரா ஆகியுள்ளது.

ஜடேஜா 44 ஓவர்கள் வீசி 18 மெய்டன்களுடன் 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வின் 30 ஓவர்கள் 10 மெய்டன் 71 ரன் ஒரு விக்கெட். அஸ்வின் இந்த டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

இத்தகைய பிட்ச்களில் அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்த கடும் சிரமப்படுவதே இந்திய வெற்றி வாய்ப்பை தடுத்துள்ளது. புஜாரா மொத்தம் 525 பந்துகளைச் சந்தித்தது சாதனையாக இருக்கலாம், ஆனால் ஒரு இன்னிங்ஸ் போகப் போக பந்து ஃபுட்பால் போல் தெரிந்தால் ஸ்கோரிங் வேகம் பிடிக்க வேண்டும், 450 பந்துகளில் அவர் இரட்டைச் சதம் எடுத்திருக்க வேண்டும், கொஞ்சம் டிக்ளேரை துரிதப்படுத்தியிருந்தால் ஒருவேளை வெற்றி நோக்கி இன்னும் கூடுதல் நெருக்கடி கொடுத்திருக்கலாம்.

ஆட்ட நாயகனாக புஜாரா தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்