250 ரன்களுக்கு சுருண்டது மே.இ.தீவுகள்: நியூஸி. அரையிறுதிக்கு தகுதி

By செய்திப்பிரிவு

நியூஸிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை காலிறுதியில் நியூஸிலாந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியை நியூஸி. சந்திக்கிறது.

394 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் அணி 30.3 ஓவர்கள் வரை மட்டுமே தாக்குப் பிடித்தாலும் 250 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் வீரர்கள் அனைவருமே இன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனாலும் அந்த அதிரடியை தொடர முடியாமல் போக சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மே.இ.தீவுகள் ஆட ஆரம்பித்ததும், இரண்டாவது ஓவரில் துவக்க வீரர் சார்ல்ஸ் வீழ்ந்தார். 6-வது ஓவரில் சிம்மன்ஸ் வெளியேறினார். சிக்ஸர் அடித்த அடுத்த பந்தில் சிம்மன்ஸ் ஆட்டமிழந்தார். கிறிஸ் கெயிலும் தனது வழக்கமான அதிரடியோடு ஆடினார்.

கெயிலுக்கு துணை நின்ற சாமுவேல்ஸும் தனது அதிரடியில் 14 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸரோடு 27 ரன்கள் சேர்த்தார். ஆனால் 10-வது ஓவரின் முதல் பந்தை, சாமுவேல்ஸ், டீப் பாய்ண்ட் பகுதியில் சிக்ஸருக்கு விரட்ட, அங்கே நின்றுகொண்டிருந்த டேனியல் வெட்டோரி, பவுண்டரி கோட்டுக்கு அருகே நின்று, ஒற்றைக் கையில் பந்தை அற்புதமாக எகிறிப் பிடித்து சாமுவேல்ஸை ஆட்டமிழக்கச்செய்தார். அதே ஓவரில் ராம்தின் ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தார்.

ஒரு வேளை கிறிஸ் கெயிலுடன் சாமுவேல்ஸ் 10 ஓவர்கள் தாக்குப் பிடித்திருந்தால் கண்டிப்பாக மே.இ.தீவுகள் வெற்றியை நெருங்கியிருக்கக் கூடும் என்ற நிலையிலேயே அவர்களது ஆட்டம் இருந்தது. நியூஸி. பந்துவீச்சாளர்களில், போல்ட் நீங்கலாக, அனைவருமே ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக சவுத்தி மற்றும் மில்னே இருவரும் ஒவ்வொரு ஓவருக்கும் தலா 10 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்தனர்.

துவக்க வீரர் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 61 ரன்களும், அணித் தலைவர் ஹோல்டர் 42 ரன்களும் எடுத்தனர். நியூஸி. தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸி. அணி பேடிங்கை தேர்ந்தெடுத்தது. துவக்க வீரர்களாக மெக்கல்லம், கப்டில் களமிறங்கினர். அதிரடி வீரர் மெக்கல்லம் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தொடர்ந்து வந்த வில்லியம்சன் 15-வது ஓவர் வரை கப்டிலுடன் இணைந்து பார்டனர்ஷிப்பில் ரன்கள் சேர்த்தாலும் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து ஆட வந்த டெய்லர் களத்திலிருந்த கப்டிலுடன் இணைந்தார். இருவரும் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கப்டில் 64 பந்துகளில் அரை சதம் எட்டினார். இருவரும் பார்டனர்ஷிப்பில் இணைந்து 143 ரன்களை சேர்த்தனர். கப்டில் 111 பந்துகளில் சதத்தை எட்டினார். சதத்தைக் கடந்தவுடன் கப்டில் அதிரடியாக ஆடத் துவங்கினார்.

39-வது ஓவரில் டெய்லர் 42 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். 40 ஓவர்கள் இறுதியில் நியூஸிலாந்து 240 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன் பிறகு நியூஸி. வீரர்களின் ஆட்டம் ஏறக்குறைய பவுண்டரிகளைச் சார்ந்தே இருந்தது. குறிப்பாக கப்டில் அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கப்டில் இரட்டை சதம்

ஆண்டர்சன் 15 ரன்கள், எல்லியட் 27 ரன்கள், ரோஞ்சி 9 ரன்கள் என ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் கப்டில் தன் ஆட்டத்தை மாற்றாமல் விளாசிக்கொண்டிருந்தார். 152 பந்துகளில் கப்டில் இரட்டை சதத்தைக் கடந்தார். இதில் 21 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடக்கம். அந்த ஓவரிலேயே, இதே உலகக் கோப்பையில் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் அடித்த அதிகபட்ச ஸ்கோரான 215 ரன்களையும் கப்டில் கடந்தார். மே.இ.தீவுகளின் பந்துவீச்சு எங்குமே சோபிக்காமல் போனது. வீசிய அத்தனை வீரர்களுமே கப்டிலின் அதிரடிக்கு முன் வலுவிழந்தனர்.

50 ஓவர்கள் முடிவில் கப்டில் 163 பந்துகளைச் சந்தித்து 237 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மொத்தம் 24 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள். நியூஸி. அணி 393 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

பேட்டிங் விருந்தாக மாறிய காலிறுதிப் போட்டி

இன்றைய போட்டியில் முதலில் ஆடிய நியூஸி. அணி 50 ஓவர்களில் 393 ரன்களும், மே.இ.தீவுகள் அணி 30.3 ஓவர்களில் 250 ரன்களும் குவித்தன. மொத்தம் 643 ரன்கள். 80.3 ஓவர்கள். ஒரு ஓவருக்கு சராசரியாக 8 ரன்கள் வீதம் சேர்க்கப்பட்டுள்ளன.

நியூஸி. தரப்பில் கப்டில் இரட்டை சதம் அடித்தாலும் வேறு எந்த வீரரும் அரை சதம் கூடத் தொடவில்லை. அதே போல மே.இ.தீவுகள் தரப்பில் கிறிஸ் கெயில் மட்டுமே அதிகபட்சமாக அரை சதம் கடந்து 61 ரன்களை எடுத்தார்.

நியூஸி. தரப்பில் 39 பவுண்டரிகளும், 15 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டுள்ளன. மே.இ.தீவுகள் அணி 23 பவுண்டரிகளும், 16 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டுள்ளன. மொத்தம் இந்த ஆட்டத்தில் 62 பவுண்டரிகள் மற்றும் 31 சிக்ஸர்கள். நியூஸி.யை விட மே.இ.தீவுகள் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் ஓவரிலேயே கேட்ச் தந்த கப்டில்

இன்றைய ஆட்டத்தின் முதல் பந்தை கப்டில் பவுண்டரிக்கு விரட்டினார். இன்றைய அதிரடிக்கு அது ஒரு முன்னோட்டமாக அமைந்திருந்தாலும், முதல் ஓவரின் 3-வது பந்தை கப்டில் ஸ்கொயர் லெக் பகுதிக்கு அடிக்க அங்கு நின்று கொண்டிருந்த சாமுவேல்ஸ் அந்த கேட்சை கோட்டை விட்டார். ஒருவேளை அப்போதே கப்டில் ஆட்டமிழந்திருந்தால் இந்த போட்டியின் போக்கு மொத்தமாக மாறியிருக்கக் கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்