கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் ரசிகர்கள் ஏங்கிய மெஸ்ஸி கடைசியாக பனாமாவுக்கு எதிராக களமிறங்கி 3 கோல்கள்- ஹாட்ரிக் சாதனை புரிய பனாமா அணியை அர்ஜெண்டினா 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
19 நிமிடங்களில் மெஸ்ஸி மேஜிக்கை கண்டு ரசிகர்கள் மகிழ்ந்தனர். 19 நிமிடங்களில் மெஸ்ஸி அடுத்தடுத்து 3 கோல்கள்-ஹேட்ரிக். மேலும் கடைசி கோலை உருவாக்கிய கற்பனைவளம் மிகுந்த லாங் பாஸ் என்று மெஸ்ஸி கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் நேற்று தீபங்கள் சிலவற்றை ஏற்றினார்.
கீழ்முதுகு காயம் காரணமாக விளையாடுவது சந்தேகம் என்று அறியப்பட்ட லயோனல் மெஸ்ஸியை பனமாவுக்கு எதிராக பதிலி வீரர்கள் பட்டியலில் பயிற்சியாளர் ஜெரார்டோ மார்டினோ அறிவித்தார்.
ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணி 1-0 என்று முன்னிலை பெற்று 9 வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பனாமா அணிக்கு எதிராக 2-வது கோலை அடிக்கத் திணறிய போது மெஸ்ஸி அகஸ்டோ பெர்னாண்டஸுக்குப் பதிலியாக களமிறக்கப்பட்டார். ரசிகர்கள் மெஸ்ஸி... மெஸ்ஸி என்று கதறியபடியே இருந்தனர், கடைசியில் அவர் இறங்கியவுடன் ரசிகர்களின் மகிழ்ச்சி ஆவேசமாக மாற ‘ஜீனியஸ்’-இன் ஒவ்வொரு நகர்வும் பெரிய எதிர்பார்ப்புடனான பேரொலியாக மைதானத்தில் எழுந்தவண்ணம் இருந்தன.
68-வது நிமிடத்தில் கொன்சாலோ ஹிகுவெயினின் ஷாட் ஒன்று பனாமா தடுப்பு வீரர் ஹென்ரிக்ஸிடமிருந்து திரும்பி வர மெஸ்ஸி சரியான இடத்தில் நின்று கொண்டிருந்தார். சும்மா பனாமா கோல் கீப்பர் பெனிடோவைத் தாண்டி மெஸ்ஸி கோலுக்குள் தள்ளி விட்டார். ஆனால் பந்து ஹிகுவெயினின் கையில் பட்டு வந்தது போல் தெரிந்தது, இந்த வகையில் ஏற்கெனவே துரதிர்ஷ்டம் கண்ட் பனாமா அணிக்கு மேலும் ஒரு அதிர்ஷ்டங்கெட்ட தருணம்.
ஆனால் அடுத்த கோல் மெஸ்ஸி ஸ்பெஷல், ரசிகர்கள் எதற்காகக் காத்திருந்தனரோ அந்த தரிசன கோல் கிடைத்தது. ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் தொடர்ந்து ஃபவுல் ஆட்டம் ஆடி வந்த பனாமா அணி தவறு செய்ய மெஸ்ஸிக்கு 25 அடி ஃப்ரீ கிக் அளிக்கப்பட்டது. இது மெஸ்ஸியின் வலுவான இடம், அவர் மிக அருமையாக அந்த ஃப்ரீகிக்கை நேராக கோலுக்குள் அடித்தார். பெனிடோ முழு டைவ் அடித்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை, தனித்துவமான மெஸ்ஸி ரக ஃப்ரீ கிக், இதற்குத்தானே ரசிகர்கள் காத்திருந்தனர்!
87-வது நிமிடத்தில் பனாமா தங்களது ஆட்டத்தை கைவிட மெஸ்ஸியிடம் வந்த பந்து 15-வது யார்டிலிருந்து அவரது ஹேட்ரிக் கோல் ஆனது. மெஸ்ஸியின் முதல் கோல் போன்றதே இதுவும், இடையில் பனாமா வீரர் பெலாயின் தடுப்பு உத்தியை மெஸ்ஸி கையாண்ட விதம் அபரிமிதமானது. மெஸ்ஸி ஹாட்ரிக்! அர்ஜெண்டினா 4-0 என்று முன்னிலை.
கடைசியில் 89-வது நிமிடத்தில் மெஸ்ஸி மிக அருமையான நம்பமுடியாத, அவருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒரு நீண்ட தூர பாஸ் ஒன்றை செய்ய அது ரோஜோவிடம் வர அவர் அதனை தலையால் அகிரோவிடம் தள்ள நெருக்கமான இடத்திலிருந்து அகிரோ அதனை கோலாக மாற்றினார். இது அகிரோவின் 33-வது சர்வதேச கோல் அர்ஜெண்டினா 5-0 என்று வெற்றி பெற்றது.
68-வது நிமிடம் வரை 9 வீரர்களை வைத்துக் கொண்டு 0-1 என்று பின் தங்கியிருந்த பனாமா மெஸ்ஸி வந்த பிறகு தங்களது கால்பந்தாட்டத்தை மறந்து பார்வையாளர்களாக மாற வேண்டியிருந்தது.
முன்னதாக ஆட்டம் தொடங்கி ஆறரை நிமிடம் என்று கூறலாம் டி மரியாவின் ஃப்ரீ கிக் ஒன்றை நிகலஸ் ஒட்டாமெண்டி தலையால் முட்டி முதல் கோலை அடித்தார்.
அதன் பிறகு இடைவேளை வரை பனாமா நன்றாகவே ஆடினர். ஆனால் அந்த அணி ஒரு மாதிரியான ஆவலாதி கால்பந்தாட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் அரைமணியில் 4-5 மஞ்சள் அட்டை இருதரப்பினருக்கும் காண்பிக்கப்பட்டது, ஆட்டத்தின் 17-19-வது நிமிடங்களில் பனாமா தனது ஆக்ரோஷத்தை உடல் ரீதியாக அர்ஜெண்டின வீரர்களை அச்சுறுத்துவதில்தான் காட்டினர். பந்து எங்கோ ஆடப்பட்டிருக்கும் போது கூட இங்கு அர்ஜெண்டின வீரரைக் கையால் தள்ளி விடுவது என்ற ரீதியில் ஆட்டம் செல்ல ஒரு நேரத்தில் இரு அணியினருக்கும் கைகலப்பு ஏற்படும் போல் ஆனது. அதில் பெரஸுக்கும் மஸ்கரணாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, பிறகு பலேயோ என்ற பனாமா வீரர் அர்ஜெண்டினாவின் மஸ்கரணாவை முட்டித் தள்ளினார், இருவருக்கும் மஞ்சள் அட்டை.
30வது நிமிடத்தில் இந்த வகையான வகைதொகையற்ற ஆக்ரோஷத்தினால் பனாமா வீரர் கோடாய் சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அது முதலே 10 வீரர்களுடன் ஆடியது பனாமா. மெஸ்ஸி இறங்கும் போது அந்த அணி கிட்டத்தட்ட செத்த பாம்பாகிவிட்டது, ஆனாலும் மெஸ்ஸி கோல்களை அடித்த விதம் அவர் ஒரு ஜீனியஸ் என்பதை அறிவுறுத்தியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago