சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி யின் இறுதிச்சுற்றுக்கு பிரான்ஸின் எட்வர்ட் ரோஜர் வேஸ்லின் முன்னேறியுள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ரோஜர் வேஸலின் 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் மார்சல் கிரானோலர்ஸை தோற்கடித்தார்.
19-வது ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 6-வது நாளான சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் சர்வதே தரவரிசையில் 52-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் ரோஜர் வேஸ்லின், 38-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் மார்சல் கிரானோலர்ஸை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் வேஸ்லின் ஆதிக்கம்
முதல் செட்டின் முதல் கேமில் தனது சர்வீஸில் ஒன்றைக்கூட இழக்காமல் அந்த கேமை தன்வசமாக்கினார் வேஸ்லின். 5-வது கேம் வரை இருவரும் சிறப்பாக ஆடி தங்களின் சர்வீஸை இழக்காமல் பார்த்துக் கொண்டனர். 6-வது கேமில் அபாரமாக ஆடிய வேஸ்லின் கிரானோலர்ஸின் சர்வீஸை எளிதாக தகர்த்து 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய வேஸ்லின் 10-வது கேமில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். அவரின் ஷாட்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய கிரானோலர்ஸ் தனது சர்வீஸை மீண்டும் இழக்க, முதல் செட் 6-2 என்ற கணக்கில் வேஸ்லின் வசமானது. 28 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது இந்த செட்.
கிரானோலர்ஸ் வசமான 2-வது செட்
பின்னர் நடைபெற்ற 2-வது செட்டின் 3-வது கேமில் வேஸ்லினின் சர்வீஸை முறியடித்து 2-1 என்ற கணக்கில் கிரானோலர்ஸ் முன்னிலை பெற்றார். அடுத்த கேமில் கிரானோலர்ஸுக்குப் பதிலடி கொடுக்க வேஸ்லின் போராடினார். அந்த செட் டியூஸ் வரை சென்றபோதும் வேஸ்லினால் முறியடிக்க முடியவில்லை.
இதன்பிறகு 5-வது கேமில் 2-வது முறையாக தனது சர்வீஸை இழந்த வேஸ்லின், அடுத்த கேமில் கிரானோலர்ஸின் சர்வீஸை தகர்த்து அவருக்குப் பதிலடி கொடுத்தார். ஆனாலும் அதற்கு பலம் இல்லாமல் போனது. இதன்பிறகு நடைபெற்ற 7 மற்றும் 8-வது கேம்கள் டியூஸ் வரை சென்றபோதும் சர்வீஸ்கள் முறியடிக்கப்படவில்லை. இதனால் 43 நிமிடங்கள் நடைபெற்ற 2-வது செட் 6-4 என்ற கணக்கில் கிரானோலர்ஸ் வசமானது.
வேஸ்லின் வெற்றி
இதையடுத்து நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டின் முதல் கேமிலேயே வேஸ்லினின் சர்வீஸை பிரேக் செய்தார் கிரானோலர்ஸ். அடுத்த கேமில் தனது சர்வீஸை எளிதாக தன்வசமாக்கிய கிரானோலர்ஸுக்கு 4-வது கேமில் கடும் சவால் அளித்தார் வேஸ்லின். 5 முறை டியூஸ் வரை சென்ற இந்த கேம் சவ்வாக இழுத்தது. விடாப்பிடியாக போராடிய வேஸ்லின் தனது 4-வது அட்வான்டேஜின் மூலம் அந்த சர்வீஸை முறியடித்தார். இதனால் முதல் 4 கேம்களின் முடிவில் இருவரும் 2-2 என்ற சமநிலையை எட்டினர். இதுதான் வேஸ்லின் சரிவிலிருந்து மீள்வதற்கு திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடிய வேஸ்லின் 6-வது கேமில் மீண்டும் கிரானோலர்ஸின் சர்வீஸை முறியடித்தார். 9-வது கேமில் கிரானோலர்ஸ் கடுமையாகப் போராடினாலும், அதற்கு பலன் கிடைக்கவில்லை. 51 நிமிடங்கள் நடைபெற்ற இந்த செட் 6-3 என்ற கணக்கில் வேஸ்லின் வசமாக, போட்டி முடிவுக்கு வந்தது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு...
2 மணி நேரம் 2 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வேஸ்லின் 3 ஏஸ் சர்வீஸ்களையும், கிரானோலர்ஸ் 4 ஏஸ் சர்வீஸ்களையும் அடித்தனர். கிரானோலர்ஸ் 3 டபுள் பால்ட் தவறுகளை செய்தபோதிலும், வேஸ்லின் டபுள் பால்ட் தவறேதும் செய்யவில்லை. ஏடிபி போட்டியில் 2-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் வேஸ்லின், இந்த முறை பட்டம் வெல்லும் பட்சத்தில் தனது முதல் ஏடிபி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவார்.
சென்னை ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற 2-வது பிரான்ஸ் வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார். சென்னை ஓபனில் பட்டம் வென்ற முதல் பிரான்ஸ் வீரர் ஜெரோம் கோல்மார்ட் ஆவார். அவர் 2000-ல் பட்டம் வென்றார். அவர் பட்டம் வென்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேஸ்லின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
33 mins ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago