கையால் தள்ளி கோல்: பெரு அணியிடம் தோற்று பிரேசில் அதிர்ச்சி வெளியேற்றம்

By ஆர்.முத்துக்குமார்

கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் சர்ச்சைக்குரிய கோல் மூலம் பெரு அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து பிரேசில் அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் அதிர்ச்சி வெளியேற்றம் கண்டது.

குருப் பி-யில் பெரு அணி 7 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க, ஈக்வடார் அணி 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடிக்க இந்த இரண்டு அணிகளும் காலிறுதிக்கு முன்னேறின. பிரேசில் 4 புள்ளிகளுடன் 3-ம் இடம் பிடித்து வெளியேறியது.

முதல் போட்டியில் ஈக்வடார் அணிக்கு எதிராக கோல் இல்லாமல் டிரா ஆக பிரேசில் சொத்தையான ஹைட்டி அணியை 7 கோல்கள் அடித்து வென்றது. இந்த கோல் வித்தியாசத்தினால் நேற்று பெரு அணிக்கு எதிராக ஒரு புள்ளி பெற்றிருந்தாலே போதும். ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக சர்ச்சை கோலில் பிரேசில் 1-0 என்று தோல்வி தழுவி அதிர்ச்சி வெளியேற்றம் கண்டது.

காலிறுதியில் பெரு-கொலம்பியா அணிகளும் அமெரிக்கா-ஈக்வடார் அணிகளும் மோதவுள்ளன. 5 முறை உலக சாம்பியன் பிரேசில் அணி வெளியேறியது. கடந்த 31 ஆண்டுகளில் பிரேசில் அணிக்கு எதிராக பெரு பெறும் முதல் வெற்றியாகும் இது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பா அமெரிக்காவில் பிரேசிலை, பெரு வீழ்த்திய நாக் அவுட் தருணமாகும்.

முதல் போட்டியிலேயே பிரேசில் அணி ஈக்வடாரிடம் தோல்வி கண்டிருக்க வேண்டியதுதான், அன்று நடுவரின் தவறான தீர்ப்பினால் ஈக்வடாரின் கோல் மறுக்கப்பட்டது. இன்று காலத்தின் முரணாக கோல் இல்லாதது கோல் என்று தீர்ப்பளிக்கப்பட்டு பிரேசில் வெளியேறியது. இதைத்தான் 'பொயட்டிக் ஜஸ்டிஸ்' என்று கூறுகிறார்களோ?

1-0 என்று பெருவிடம் பிரேசில் தோற்க இதே குரூப் பி-யில் ஈக்வடார் அணி ஹைட்டி அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றதால் பிரேசில் அணி வெளியேற்றம் கண்டது. இந்தப் போட்டியில் பிரேசில் அணிக்குத் தேவை ஒரேயொரு புள்ளி. ஆனால் பெரு அணியின் கோல் கீப்பர் பெட்ரோ கேலஸின் அபாரமான கோல்கீப்பிங்கும் பிரேசில் துன்பத்தை இரட்டிப்பாக்கியது. ஒன்று பிரேசில் அணியில் நெய்மர் இல்லை. இதனால் பினிஷிங் செய்ய ஆள் இல்லை. ஆட்டத்தில் தொய்வு நிலை சீராக இருந்தது.

இந்நிலையில் இடைவேளைக்கு முன்னதாக கேப்ரியல் பார்போசா எடுத்த இரண்டு கோல் முயற்சிகளையும் பெட்ரோ கேலஸ் முறியடித்தார், பெரு அணி கோல் அடித்த பிறகு ‘சாகற காலத்தில் சங்கரா.. சங்கரா’ என்பது போல் பிரேசில் அணி சில அதிரடி முயற்சிகளைச் செய்த போதும் ஒரு நேர் கோல் வாய்ப்பை பிரேசில் தவறவிட்டது. ஷாட்டில் வலுவில்லை. பெரு கோல் கீப்பர் கேலஸும் நன்றாகக் கணித்து விட்டார்.

கையால் தள்ளிய கோல்:

ஜீனியஸ் மரடோனா தனது சாம்பியன்ஷிப் கோலை ‘ஹேண்ட் ஆஃப் காட்’ என்றார். இந்தப் போட்டியில் பெரு அணிக்காக கடவுள் தன் கையைக் கொடுத்தது ரால் ருடியாஸ் என்ற வீரருக்கு, ஆட்டம் முடிய 15 நிமிடங்கள் இருக்கும் தறுவாயில் பெரு அணி அபாரமான கூட்டு முயற்சியில் பந்தை பிரேசில் எல்லைக்குள் கொண்டு செல்ல பெரு வீரர் ஆண்டி போலோ அருமையான ஒரு கிராஸைச் செய்ய கோலுக்கு நேராக நின்று கொண்டிருந்த ரால் ருடியாஸின் கையில் பட்டு கோலுக்குள் சென்றது. அதாவது அவர் கையால் தள்ளினார் என்பதே ரீப்ளேக்கள் காட்டிய நிஜம். உடனேயே பிரேசில் கோல் கீப்பர் கை, கை என்று கதறினார்.

முதலில் கோல் என்று அறிவிக்கப்பட்டது, ஸ்கோர் போர்ட் 1-0 என்று பெருவுக்குச் சாதகம் காட்டியது. ஆனால் நடுவர் அதனை நிறுத்தி வைக்க மீண்டும் ஸ்கோர் லைன் 0-0 என்று காட்டியது, பிறகு நடுவர் ஆண்ட்ரேஸ் குன்ஹா லைன்ஸ் ரெஃப்ரீக்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார், இடையே பெரு அணி போர்க்கொடி உயர்த்தியது, கடைசியில் நடுவர் கோல் என்று அறிவிக்க பிரேசில் அணி போர்க்கொடி தூக்கியது, ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஏனெனில் அது ‘ஹேண்ட் ஆஃப் காட்’ அல்லவா?

ஆட்டத்தின் தொடக்க தருணங்களில் பிலிப் கோர்ட்டின்ஹோ மற்றும் வில்லியன் பிரேசிலின் தடுப்பு வியூகத்தை கவனித்துக்கொள்ள தொடக்கத்தில் சில நல்ல நகர்வுகளுடன் வலுவாகவே பிரேசில் தொடங்கியது. பிலிப் லூயிசின் அபார முயற்சியை பெரு கோல் கீப்பர் கேலஸ் முறியடிக்க பிறகு கேப்ரியல் ஷாட்டையும் கோலுக்குப் போகாமல் தடுத்து கேலஸ் பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்தார்.

ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் பெரு கோல் பகுதியில் அந்த அணியின் கிரிஸ்டியன் ரேமோஸ், லுகாஸ் லிமோவுடன் மோத பிரேசில் அணி பெனால்டி கேட்டு முறையீடு செய்ததை நடுவர் குன்ஹா ஏற்கவில்லை. மறு முனையில் பிரேசில் வீரர் ரெனேட்டோ அகுஸ்டோவின் சவாலில் கீழே விழுந்த பெரு வீரர் எடிசன் புளோரேஸ் பெனால்டி கேட்டார், அதுவும் அளிக்கப்படவில்லை. இடைவேளைக்கு முன்னதாக கேப்ரியலின் இன்னொரு முயற்சியையும் ஆட்ட நாயகன் கோல் கீப்பர் கேலஸ் முறியடித்தார்.

இடைவேளைக்குப் பிறகும் பிரேசில் ஆட்டத்தில் வேகம் மந்தமானது முயற்சிகளில் உத்வேகம் இல்லை, இலக்கை நோக்கிய வெறி இல்லை. 75-வது நிமிடத்தில் கையால் தள்ளிய பெரு வீரர் ருடியாஸின் கோல் ஏற்படுத்திய அதிர்ச்சியில் பெரு அணிக்கு சில நெருக்கடிகளைக் கொடுத்தாலும் பிரேசிலின் முயற்சிகள் மிகவும் தாமதமாகவே நடந்தேறியது, ஆனால் ஆட்ட நாயகன் பெரு கோல் கீப்பர் கேலஸ் பிரேசிலின் தடுப்புச் சுவராக நின்றார்.

கடந்த ஆண்டு கோப்பா அமெரிக்காவில் காலிறுதியில் தோற்றது, 2014 உலகக்கோப்பையில் ஜெர்மனி அணி கோல் மழையில் மூழ்கடித்தது தற்போது குருப் மட்டத்திலேயே வெளியேறியிருப்பது என்பது பிரேசில் அணியின் கால்பந்து வரலாற்றில் வைக்கப்பட்ட கரும்புள்ளிகளே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்