சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் கொடி கட்டிப்பறந்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் விளையாடவுள்ள கடைசி டெஸ்ட் தொடர் என்பதால் உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்தத் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்தத் தொடர் சச்சினுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் விளையாட்டுக்கே உணர்ச்சிபூர்வமான தருணமாக பார்க்கப்படுகிறது. சச்சினை பாராட்டி மைதானம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்களால் ஈடன் கார்டன் விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிவிட்டு, டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய வீரர்கள் அனைவரும் சச்சினை வெற்றியோடு வழியனுப்பும் முனைப்பில் உள்ளனர். எனவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள்.
இந்திய அணி பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய ஷிகர் தவண், இந்தத் தொடரிலும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் முரளி விஜய் தொடக்க வீரராக களமிறங்குவார் என தெரிகிறது. மிடில் ஆர்டரில் சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், கேப்டன் தோனி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
இரட்டைச் சதமடித்த கையோடு கொல்கத்தா வந்துள்ள ரோஹித் சர்மா தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாட காத்திருக்கிறார். அவர் மிடில் ஆர்டரில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிக்கிறது. கேப்டன் தோனி 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும்பட்சத்தில் உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் அணியில் இடம்பெறுவர். இரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினால் முகமது சமி நீக்கப்படலாம். அதனால் அவர் தனது அறிமுகப் போட்டியில் விளையாட மேலும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இடம்பெறாத நிலையில் அஸ்வின், பிரக்யான் ஓஜாவுடன் இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் பட்சத்தில் அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சந்தர்பால், கிர்க் எட்வர்ட்ஸ், டியோநரைன் ஆகியோர் பேட்டிங்கில் முக்கியப் பங்கு வகிப்பார்கள். கிறிஸ் கெயில், டேரன் சமி, சாமுவேல்ஸ் ஆகியோரும் அந்த அணியின் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கின்றனர். இவர்களில் சந்தர்பால், கெயில், சாமுவேல்ஸ் ஆகியோர் இந்திய ஆடுகளங்களில் நல்ல அனுபவம் பெற்றவர்கள்.
வேகப்பந்து வீச்சில் கெமர் ரோச், டினோ பெஸ்ட், காட்ரெல் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சில் ஷில்லிங்ஃபோர்டு, வீராசாமி பெர்மாவ்ல் ஆகியோரையும் நம்பியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஈடன் கார்டனில் ஷில்லிங்ஃபோர்டு, வீராசாமி பெர்மாவ்ல் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள். இந்திய ஏ அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பெர்மாவ்ல் கணிசமான விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2011-ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை... 1948 முதல் 2011 வரை இரு அணிகளும் 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இந்தியா 14 போட்டிகளிலும், மேற்கிந்தியத் தீவுகள் 30 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளன. 44 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கொல்கத்தாவில் இந்திய அணி இதுவரை 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 10-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும் கண்டுள்ளது. 19 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இங்கு இந்தியாவும், மேற்கிந்தியத் தீவுகளும் 9 போட்டிகளில் மோதியுள்ளன. இந்தியா இரண்டிலும், மேற்கிந்தியத் தீவுகள் 3-லும் வெற்றி கண்டுள்ளன. 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கடைசியாக 2011-ல் இங்கு நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி கண்டுள்ளது.
மைதானம் எப்படி?
போட்டி நடைபெறவுள்ள ஈடன் கார்டன் மைதானம் மெதுவான ஆடுகளமாக இருக்கும் என்று தெரிகிறது. எனினும் இதை மறுத்துள்ள ஆடுகள தலைமைப் பராமரிப்பாளர் பிரபிர் முகர்ஜி, "பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடக்கூடிய ஆடுகளமாகவே இருக்கும். இது மிகச்சிறந்த ஆடுகளம். பந்து இங்கு பெரிய அளவில் எகிறாது. அதேநேரத்தில் பௌலர்களுக்கு எதிரானதாகவும் ஆடுகளம் இருக்காது" என்று குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் கடைசி இரு நாள்கள் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிகர் தவண், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது சமி, உமேஷ் யாதவ், அஜிங்க்ய ரஹானே, இஷாந்த் சர்மா, பிரக்யான் ஓஜா, அமித் மிஸ்ரா.
மேற்கிந்தியத் தீவுகள்: டேரன் சமி (கேப்டன்), கிறிஸ் கெயில், கிரண் பாவெல், டேரன் பிராவோ, மார்லான் சாமுவேல்ஸ், நர்சிங் டியோநரைன், சிவநாராயணன் சந்தர்பால், தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), டினோ பெஸ்ட், வீராசாமி பெர்மாவ்ல், ஷெல்டான் காட்ரெல், கிர்க் எட்வர்ட்ஸ், கெமர் ரோச், ஷேன் ஷில்லிங்போர்ட், சாத்விக் வால்டன்
சச்சின் சதமடிக்க விரும்பும் யோகேஷ்வர்
தனது கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் சச்சின் இரு டெஸ்ட் போட்டிகளிலும் சதமடிக்க வேண்டும் என லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் தெரிவித்துள்ளார். அவரின் ஓய்வு கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
சச்சினும் ஈடன் கார்டனும்...
1991 ஜனவரி 4-ம் தேதி நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியாவும், இலங்கையும் மோதின. அதுதான் ஈடன் கார்டனில் சச்சின் விளையாடிய முதல் போட்டி. 1993-ல் நடைபெற்ற ஹீரோ கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது கடைசி ஓவரை வீசிய சச்சின் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார்.
1996-ல் ஈடன் கார்டனில் நடைபெற்ற உலகக் கோப்பையில் சச்சின் 65 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு இந்திய அணி சரிவுக்குள்ளானது. இதனால் கோபமடைந்த ரசிகர்கள் பாட்டில்களை தூக்கி எறிந்ததோடு, மைதானத்தில் தீயை கொளுத்தினர். இங்கு 12 டெஸ்ட் மற்றும் 13 ஒருநாள் போட்டிகளில் சச்சின் விளையாடியுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன் மைதானம் சச்சினுக்கு ஏற்ற, இறக்கம் நிறைந்ததாகவே அமைந்திருக்கிறது.
தோனி அதிருபதி...
ஈடன் கார்டன் மைதானத்தில் சச்சினை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கட்அவுட்டில் அவருடைய பெயர் தவறாக அச்சிடப்பட்டிருப்பதற்கு இந்திய கேப்டன் தோனி கடும் அதிருப்தி தெரிவித்தார். அந்த கட்அவுட்டில் சச்சினின் பெயர் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது. அவர் பெயரின் கடைசியில் தேவையில்லாமல் 'இ' என்ற ஆங்கில எழுத்து இருந்தது. இதைப் பார்த்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த தோனி, 'சச்சினின் பெயரை தவறாக அச்சிட்டது யார் என்று முதலில் சொல்லுங்கள். இது மிகப்பெரிய தவறு' என்று குறிப்பிட்டார். தனக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வரவேற்புகளுக்காக சச்சின் ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்த நிலையில், தோனி இப்போது புதிய பிரச்சினையை கிளப்பியுள்ளார்.