அதிரடி விரட்டலுக்குப் பின் அதிர்ச்சி சரிவு: ஆஸி.யிடம் மீண்டும் அடங்கிய இந்திய அணி

By இரா.முத்துக்குமார்

கான்பெராவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் எளிதாக வெற்றி பெற வேண்டிய நிலையிலிருந்து மடமடவென சரிந்து இந்திய அணி அதிர்ச்சித் தோல்வி தழுவியது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 4-0 என்று முன்னிலை பெற்றது.

277/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 46 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தது இந்தியா. விராட் கோலி, ஷிகர் தவண் ஆடிய விதம் ஆஸ்திரேலிய பந்துவீச்சை கேலிக்குரியதாக்கிய போதும் அவர்களில் ஒருவர் கூட இறுதி வரை நிற்காமல் கடைசியில் தோல்வியைச் சந்தித்தது இந்திய அணி. ஷிகர் தவண், கோலி பேட் செய்த போது ஸ்மித் கூறியது போல், “15-16 பீல்டர்கள் தேவை” என்ற அளவில் ஆட்டம் அதிரடியாக இருந்தது. இருவரும் இணைந்து 29 ஓவர்களில் 2-வது விக்கெட்டுக்காக 212 ரன்களைச் சேர்த்தனர்.

கடைசியில் விக்கெட்டுகள் சரிவடையும் போது ரவீந்திர ஜடேஜா ஆடியதுதான் புரியாத புதிராக இருந்தது, தான் ஸ்ட்ரைக்கை எடுத்துக் கொண்டு ஆடுவதற்குப் பதிலாக புவனேஷ் குமார், ரிஷி தவண், உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா என்று அனைவருக்கும் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக் கொடுத்த விசித்திரத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை தோனி ஆட்டம் முடிந்த பிறகு தனது விசித்திர விளக்கங்களால் அதற்கு நியாயம் கற்பிக்கலாம். 27 பந்துகளைச் சந்தித்து 24 ரன்களை எடுத்து ஜடேஜா நாட் அவுட்டாக முடிந்து போனார்.

டாஸ் வென்ற ஸ்மித் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய வழக்கம் போல் இந்திய பவுலர்களுக்கு நல்ல பந்துவீச்சு என்றால் என்ன என்பது மறந்து போக ஆஸ்திரேலியா 348 ரன்கள் குவித்தது. ஏரோன் பிஞ்ச் சதம் எடுக்க, வார்னர் 93 ரன்கள் எடுத்தார். இசாந்த் சர்மா கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் விளாசலுடன் சேர்த்து 10 ஓவர்களில் 77 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேக்ஸ்வெல் கடைசியில் இறக்கப்பட்டார், மிட்செல் மார்ஷ் டவுனில் மேக்ஸ்வெல் இறங்கியிருந்தால் ஸ்கோர் எங்கு சென்றிருக்கும் என்று கணித்திருக்க முடியாது. அதேபோல் ஸ்மித்தும் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 348 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்ற ஸ்கோரை எட்டியது

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 38-வது ஓவரில் முடிந்த பிறகு 277/1 என்று இருந்தது. வெற்றி பெற தேவை ஓவருக்கு 5.76 ரன்களே. அதன் பிறகு கேப்டன் தோனி (0) உட்பட அனைவரும் பெவிலியன் நோக்கி அணிவகுக்க 323 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாப தோல்வி அடைந்தது.

ரோஹித், தவண், கோலி அதிரடி:

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதல் ஓவரில் ஸ்பின்னர் நேதன் லயனை வீசச் செய்தார், மறு முனையில் ரிச்சர்ட்சன். இதில் லயனை ரோஹித் மிட்விக்கெட்டில் பெரிய சிக்ஸ் ஒன்றை அடிக்க ஷிகர் தவண் கவர் திசையில் கேட்ச் போன்று ஒரு பவுண்டரி அடித்தார். தவண் ரிச்சர்ட்ஸனை ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் அடித்து பிறகு கவரில் மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார்.

8-வது ஓவரில் ரோஹித் ஆவேசம் பூண்டார். ரிச்சர்ட்ஸனை 2 பெரிய சிக்சர்களை அடித்தார். ஸ்கொயர் லெக்கில் ஒன்று, மிட்விக்கெட்டில் ஒன்று, பிறகு ஒரு சாதாரண லெக் திசை பந்து பவுண்டரிக்குப் பறந்தது. 25 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 41 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா கேன் ரிச்சர்ட்ஸன் வீசிய லெக் திசை பந்தை தொட்டு சாதாரண பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் ஸ்கோர் 8 ஓவர்களில் 65/1 என்று அபாரத் தொடக்கம் கண்டது இந்தியா.

அப்போது முதல் விராட் கோலி, ஷிகர் தவண் ரன் விகிதத்தை சற்றும் தளரவிடாமல் ஓவருக்கு 7 ரன்களுக்கும் மேல் ரன் விகிதம் இருக்குமாறு பராமரித்து ஆடினர். விராட் கோலி, ஜேம்ஸ் பாக்னரை இரண்டு பவுண்டரிகள் அடித்து பவுண்டரி கணக்கைத் தொடங்கினார். அதன் பிறகு அவர் கிரீசில் நின்று ஆடிய பந்துகள் குறைவுதான். ஷிகர் தவண் ஹேஸ்டிங்ஸ் பந்தை பாயிண்டில் அடித்த சிக்ஸ் நம்பமுடியாத ஒரு ஷாட்டாகும். மேலேறி வந்து ஷார்ட் பிட்ச் பந்தை எகிறி இருகால்களும் காற்றில் இருக்க சுழற்றிய சுழற்றில் பந்து பாயிண்டில் சிக்ஸ் ஆனது.

மீண்டும் பாக்னரை கோலி பதம் பார்த்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். தவண் 49 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுக்க கோலி 36 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்தார்.

இந்தியா 20 ஓவர்களில் 155/1 என்று நன்றாகச் சென்று கொண்டிருந்தது. கோலி தனது முதல் சிக்சரையும் பாக்னர் பந்தில்தான் அடித்தார். மேலேறி வந்து லாங் ஆனில் மிகப்பெரிய சிக்ஸ் ஆகும் அது, சுமார் 103மீ சிக்சாக அது அமைந்தது. 26-வது ஓவரில் ஸ்கோர் 200 ரன்களை எட்டியது. 26 ஓவர்கள் முடிவில் 204/1 என்று வெற்றிக்கான உறுதியுடன் சென்றனர் இருவரும். ரன் விகிதம் 7.5 என்று சென்று கொண்டிருந்தது. ஆஸ்திரேலிய பந்து வீச்சு நாலாபக்கமும் சிதறடிக்கப்பட்டது, ஸ்மித் செய்வதறியாது திகைத்தார். ஷிகர் தவண், நேதன் லயனை இரண்டு பவுண்டரிகள் அடித்து 92 பந்துகளில் சதம் கண்டார். இது மிகவும் அபாரமான இன்னிங்ஸ்.

விராட் கோலி 84-வது பந்தில் தனது 25-வது ஒருநாள் சதத்தை எட்டினார். ஸ்கோர் 37-வது ஓவரில் 274 ரன்களுக்கு ஒரு விக்கெட், வெற்றிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 5.76.

கேப்டன் தோனி டக் அவுட்: அதிர்ச்சிச் சரிவு

38-வது ஓவரின் 2-வது பந்தில் தவண் அடித்த ஷாட்டை ஸ்மித் மிஸ் பீல்ட் செய்ய 2 ரன்கள் எடுத்தார். அதுதான் அவரது விக்கெட்டுக்குக் காரணமானது அடுத்த பந்து ஸ்லோயர் ஒன்னாக அவர் பாயிண்டில் கட் செய்து கேட்ச் கொடுத்து 113 பந்துகளில் 14 பவுண்டரி 2 சிக்சருடன் 126 ரன்களுக்கு வெளியேறினார். ஸ்மித் பீல்ட் செய்திருந்தால் ஒரு ரன்னாகியிருக்கும் கோலி ஸ்ட்ரைக்கிற்கு வந்திருப்பார் ஒருவேளை இதுதான் திருப்பு முனையோ என்று நினைத்த வேளையில் ஆமாம் என்றனர் அடுத்து களமிறங்கிய நமது கேப்டனும் சக வீரர்களும்.

அதன் பிறகு நடந்தது சுத்த குழப்படியே. ரஹானே காயமடைந்த பின்னடைவு ஒரு புறம் இருக்க, அடுத்து களமிறங்கிய தோனி, ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்றாலும் புல்டாஸை லாங் ஆனில் தட்டிவிட்டு உயிரை வெறுத்து சிங்கிள் ஓடும் அவர், ஓவருக்கு 5.76 ரன்களே தேவைப்படும் நிலையில் அதே ஹேஸ்டிங்ஸ் ஓவரில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான லெக் கட்டர் பந்தை தட்டி விட்டு ஒரு ரன் எடுப்பதை விடுத்து சற்றே மேலேறி வந்து ஏதோ ஷாட்டை ஆட முயன்று பந்து மட்டையின் விளிம்பில் பட்டு வேடிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இவர் ஆட்டமிழந்த சில பந்துகள் கழித்து கோலி, 92 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 106 ரன்கள் எடுத்த நிலையில் ரிச்சர்ட்ஸன் வீசிய பந்து ஸ்லோ என்று அவராகவே நினைத்து மிட் ஆபில் தூக்கி அடிக்க வேண்டிய பந்தை செக் செய்தார் மிட் ஆஃபின் கையில் பந்து சரணடைந்தது. தோனி அவுட் ஆன பிறகாவது சற்று நிதானித்திருக்கலாம் கோலி, உடனடியாக அப்படியொரு ஷாட்டை தேர்வு செய்தது பல கேள்விகளை எழுப்புகிறது.

அதே போல் புதுமுக வீரர் குர்கீரத், லயன் பந்தை லாங் ஆஃபில் பவுண்டரி அடித்து அடுத்த பந்தே ஒரு பெரிய ஸ்வீப் ஆடப்போய் கேட்ச் கொடுத்தார். இதுவும் பொறுப்பற்ற ஷாட் என்பதை விட கேள்விகளை எழுப்பும் ஷாட் என்றே தோன்றுகிறது.

வலது கையில் 4 தையலுடன் இறங்க நிர்பந்திக்கப்பட்ட ரஹானே 2 ரன்களில் ஸ்லிப்பில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ரிச்சர்ட்சன் பந்தில் அவுட் ஆனார். ரிஷி தவணும் அந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் வந்த நிலையில் ரிச்சர்ட்சன் பந்தை கவர் திசையில் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து பொறுப்பற்ற முறையில் வெளியேறினார்.

புவனேஷ் குமார் பவுலிங்கில் கொடுத்த ரன்கள் பற்றிய குற்றவுணர்வின்றி 2 ரன்களில் வெளியேறினார். உமேஷ் யாதவ், இசாந்த் சர்மாவுக்குத்தான் ஜடேஜா ஸ்ட்ரைக் கொடுத்துக் கொண்டேயிருந்தாரே. இருவரும் அவுட் ஆக, ஜடேஜா மட்டும் 24 நாட் அவுட். இந்தியா 49.2 ஓவர்களில் 323 ரன்களுக்குச் சுருண்டது.

கேன் ரிச்சர்ட்சன் 6 ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தவர் கடைசியில் 10 ஓவர்கள் 1 மெய்டனுடன் 68 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்