ஐஎஸ்எல்: சென்னையை பந்தாடியது டெல்லி

டெல்லி இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி. அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியைத் தோற்கடித்தது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே ராய்மேக்கர்ஸ் கோலடித்து டெல்லிக்கு அசத்தலான தொடக்கம் ஏற்படுத்தினார். தொடர்ந்து 21-வது நிமிடத்தில் அந்த அணியின் ஜங்கர் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் டெல்லி 2-0 என முன்னிலை பெற்றது.

2-வது பாதி ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் சென்னைக்கு முதல் கோலை பெற்று தந்தார் இலனோ. இதன்பிறகு 79-வது நிமிடத்தில் டெல்லி 3-வது கோலை அடித்தது. பெனால்டி வாய்ப்பின் மூலம் ஹெரேரோ இந்த கோலை அடித்தார்.

90-வது நிமிடத்தில் டெல்லியின் சாண்டோஸ் கோலடிக்க அந்த அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது.

கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தாவும், கேரளாவும் மோதுகின்றன. பயிற்சியாளர் சஸ்பெண்ட் ஐஎஸ்எல் போட்டியில் ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகளை மீறியதாக அட்லெடிகோ டி கொல்கத்தா பயிற்சியாளர் அந்தோணியோ லோபஸுக்கு 4 போட்டிகளுக்கும், கோவா வீரர் ராபர்ட் பயர்ஸ், அட்லெடிகோ வீரர் பிக்ரு லெமெஸா ஆகியோருக்கு 2 போட்டிகளுக்கும் தடை விதித்துள்ளது அகில இந்திய கால்பந்து சம்மேளனம்.

இதுதவிர இவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அட்லெடிகோ கோல் கீப்பிங் பயிற்சியாளர் பிரதீப் குமாருக்கு ஒரு போட்டிக்கு தடையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.







VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE