ரெட்புல் டிரைவர் செபாஸ்டியன் வெட்டல் சாம்பியனாகும் வாய்ப்பை நெருங்கியுள்ளதால் கிரேட்டர் நொய்டாவில் வரும் ஞாயிற்றுக்கிழை நடைபெறவுள்ள 3-வது இந்திய கிராண்ட்ப்ரீ போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அதற்கான இரு பயிற்சி போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.
இந்த சீசனுக்கான ஃபார்முலா 1 கார் பந்தயம் மொத்தம் 19 சுற்றுகளைக் கொண்டது. இதுவரை 15 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், 16-வது சுற்று இந்திய கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்தா இண்டர்நேஷனல் சர்க்கியூட்டில் நடைபெறவுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான ஃபார்முலா 1 சீசன் அட்டவணையின்படி இந்தியாவில் ஃபார்முலா 1 போட்டி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், 2015-ல் இந்தியாவுக்கு மீண்டும் ஃபார்முலா 1 போட்டி வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுதவிர ஃபார்முலா 1 போட்டி ஏற்பட்டாளர்கள் கேளிக்கை வரி செலுத்தவில்லை. அதனால் இந்திய கிராண்ட்ப்ரீ போட்டியை நடத்த அனுமதிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
இதுபோன்ற பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தாலும், இந்தப் போட்டியின் முடிவில் ரெட்புல் டிரைவரான செபாஸ்டியன் வெட்டல், சாம்பியன் பட்டத்தை உறுதி செய்வார் என்பதால் இந்திய கிராண்ட்ப்ரீ போட்டி இந்திய ரசிகர்களிடம் மட்டுமின்றி, உலக முழுவதும் உள்ள கார் பந்தய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி கண்டுள்ள செபாஸ்டியன் வெட்டல், தற்போதைய நிலையில் 2-வது இடத்தில் இருக்கும் பெராரி டிரைவர் பெர்னண்டோ அலோன்ஸாவைவிட 90 புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அதனால் இந்திய கிராண்ட்ப்ரீ போட்டியில் செபாஸ்டியன் வெட்டல் முதல் 5 இடங்களுக்குள் வந்துவிட்டாலே, இந்த சீசனுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றுவிடுவார்.
இந்த முறை வெட்டல் சாம்பியனாகும்போது, ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் தொடர்ச்சியாக 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற 3-வது வீரர் மற்றும் முதல் இளம் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இதற்கு முன்பு ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மானுவேல் பங்கியோ மற்றும் ஜெர்மனியின் மைக்கேல் ஸூமாக்கர் ஆகிய இருவரும் தொடர்ந்து 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
26 வயதாகும் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல், கடந்த இரு இந்திய கிராண்ட்ப்ரீ போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்தார். மேலும் இந்த சீசனில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் செபாஸ்டியன் வெட்டலுக்கு, இந்திய கிராண்ட்ப்ரீ போட்டியில் பெரிய அளவில் சவால்கள் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தொடர்ந்து 3-வது முறையாக இந்திய கிராண்ட்ப்ரீ போட்டியில் வெட்டல் முதலிடத்தைப் பிடிப்பார் என தெரிகிறது.
இந்திய கிராண்ட்ப்ரீ குறித்துப் பேசிய வெட்டல், “போட்டி நடைபெறவுள்ள புத்தா சர்க்கியூட் எளிதான மைதானமல்ல. இங்கு சிக்கலான வளைவுகள் உள்ளன. அதிலும் குறிப்பாக 3-வது வளைவு அபாயகரமானது. எனவே இங்கு திட்டமிட்டு காரை செலுத்துவது முக்கியமானது. இந்தியாவில் இதுவரை எங்களுக்கு எல்லா விஷயங்களுமே சரியாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்தப் போட்டியின் முடிவில் சிறப்பான டிராபி ஒன்று வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. இந்த ஆண்டும் அந்த டிராபியை வெல்லும் பட்சத்தில் அது மிகச்சிறப்பானதாக இருக்கும். புத்தா சர்க்கியூட் எனக்குப் பிடித்த மைதானம் ஆகும். நாங்கள் ஒவ்வொரு முறை இந்தியாவுக்கு வரும்போது இங்குள்ள சூழல்கள் எங்களை கவர்கின்றன” என்றார்.
15 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் டிரைவர்கள் பிரிவில் ரெட்புல் டிரைவரான வெட்டல் 297 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பெராரி டிரைவர் பெர்னாண்டோ அலோன்ஸா 207 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், லோட்டஸ் டிரைவர் கிமி ராய்க்கோனென் 177 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். மெர்ஸிடஸ் டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் 161 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ரெட்புல் அணியின் மற்றொரு டிரைவர் மார்க் வெப்பர் 148 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
அணிகள் பிரிவிலும் ரெட்புல் அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியுள்ளது. அந்த அணி 445 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பெராரி அணி 297 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், மெர்ஸிடஸ் அணி 287 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. இந்திய அணியான சஹாரா போர்ஸ் இந்தியா அணி 62 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.
இந்தியர்கள் இல்லாத போட்டி
இந்திய மண்ணில் நடைபெறும் இந்த கார் பந்தயத்தில் இந்தியர்கள் யாரும் போட்டியிடவில்லை. கடந்த 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் ஹிஸ்பேனியா அணியின் சார்பில் இந்திய வீரர் நரேன் கார்த்திககேயன் இந்தப் போட்டியில் பங்கேற்றார். ஆனால் 2013 சீசனில் ஹிஸ்பேனியா அணி பங்கேற்கவில்லை. இதனால் கார்த்திகேயன் இந்திய கிராண்ட்ப்ரீ போட்டியில் களமிறங்கவில்லை.
40 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்பனை
போட்டி நடைபெறவுள்ள புத்தா சர்க்கியூட் மைதானத்தில் 1 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். முதல்முறையாக இங்கு போட்டி நடைபெற்றபோது, 90 ஆயிரம் பேர் நேரில் போட்டியை ரசித்தனர். கடந்த 65 ஆயிரம் ரசிகர்கள் வந்திருந்தனர். வியாழக்கிழமை மதியம் வரை 40 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்றிருந்தன. எனினும் கடைசிக் கட்டத்தில் டிக்கெட்டுகள் விற்பனையாகலாம் என தெரிகிறது.
போட்டி அட்டவணை
அக்.25
முதல் பயிற்சி போட்டி- காலை 10-11.30
2-வது பயிற்சி போட்டி-பிற்பகல் 2-3.30
அக்.26
3-வது பயிற்சி போட்டி- காலை 11-12
தகுதிச்சுற்று – பிற்பகல் 2 மணி
அக்.27: பிரதான போட்டி- பிற்பகல் 3 மணி
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago