ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்துக்கு இந்திய வீரர்கள் சேவாக், யுவராஜ் சிங், யூசுப் பதான், ஆஸ்திரேலிய வீரர்கள் ஜான்சன், பிராட் ஹேடின், ஸ்டீவன் ஸ்மித் உள்ளிட்ட 31 பேருக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 லட்சம், ரூ.1 கோடி, ரூ.1.5 கோடி, ரூ.2 கோடி என 4 பிரிவுகளில் அடிப்படை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 7-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் 12-ம் தேதி பெங்களூரில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்துக்காக 10 நாடுகளைச் சேர்ந்த 233 வீரர்களின் பட்டியலை இறுதி செய்த ஐபிஎல் அமைப்பு, அது தொடர்பான விவரங்களை 7-வது ஐபிஎல் போட்டியில் விளையாடும் 8 அணிகளின் நிர்வாகத்திடமும் கொடுத்துள்ளது. இந்தப் பட்டியலில் 46 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
டாப் 31 வீரர்கள்
இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக், பிரவீண் குமார், அமித் மிஸ்ரா, ஆசிஷ் நெஹ்ரா, பிரக்யான் ஓஜா, யூசுப் பதான், வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், மனோஜ் திவாரி, ராபின் உத்தப்பா, முரளி விஜய், ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி, பிராட் ஹேடின், பிராட் ஹாட்ஜ், மைக்கேல் ஹசி, மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, ஷான் மார்ஷ், ஜேம்ஸ் பட்டின்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், சமித் பட்டேல், கெவின் பீட்டர்சன், நியூஸிலாந்தின் பிரென்டன் மெக்கல்லம், ராஸ் டெய்லர், தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ், இலங்கையின் திலகரத்னே தில்ஷான், மஹேல ஜெயவர்த்தனா, ஏஞ்செலோ மேத்யூஸ், மேற்கிந்தியத் தீவுகளின் மார்லான் சாமுவேல்ஸ் ஆகிய 31 பேரின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இர்ஃபானுக்கு ரூ.1.5 கோடி
இந்தியாவின் ஆல்ரவுண்டரான இர்ஃபான் பதானுக்கு அடிப்படை விலையாக ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதேபோல் இலங்கையின் முன்னணி வீரர்களான குமார் சங்ககாரா, தினேஷ் சன்டிமல், ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், மிட்செல் மார்ஷ், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கெமர் ரோச் ஆகியோரின் பெயர்களும் ஏலத்துக்கான வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.
சங்ககாரா பங்கேற்கவில்லை
இலங்கை அணி இந்த ஆண்டு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சென்று விளையாடவிருப்பதால் அதற்கு தயாராவதற்காக சங்ககாரா போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிகிறது. சங்ககாரா, கடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைஸர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 36 பந்துகளில் சதம் கண்ட நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் கோரே ஆண்டர்சன் இந்த முறை அதிகஅளவில் விலை போவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய அடிப்படை விலையாக ரூ.1 கோடியாகும்.
டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரான இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், மற்றொரு இங்கிலாந்து வீரர் சமித் படேல் ஆகியோர் இடம்பெற்றிருந்தாலும் அவர்களுக்கு பெரிய தொகை கிடைத்தால் மட்டுமே ஐபிஎல் போட்டியில் விளையாட நாட்டிங்காம்ஷையர் அணி அனுமதிக்கும். அவர்கள் இருவரும் நாட்டிங்காம்ஷையர் அணிக்காக கவுன்டி போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
பிராட், ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை
இங்கிலாந்து வீரர்கள் ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு பெரிய அளவில் மவுசு இருந்தபோதிலும், அவர்கள் இருவரும் ஆஷஸ் தொடருக்கு தங்களை தயார்படுத்துவதற்காக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிகிறது. மற்றொரு இங்கிலாந்து வீரரான இயான் பெல், சொந்த அணிக்காக இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடாத போதிலும், ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் இடம்பெறாதது ஆச்சரியமாக இருந்தாலும், இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பெறுவதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆஷஸ் தொடரில் மட் பிரையர் சொதப்பியதால் அவருடைய இடத்தைப் பிடிப்பதில் ஜோஸ் பட்லர் தீவிரமாக இருக்கிறார்.
பாகிஸ்தானியர்கள் இல்லை
இந்த முறையும் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறாதபோதிலும் பாகிஸ்தானில் பிறந்து வெளிநாட்டில் குடியேறியவர் களான அசார் மெஹ்மூத் (இங்கிலாந்து) பவாட் அஹமது (ஆஸ்திரேலியா) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் அசார் மெஹ்மூத் கடந்த ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
முரளீதரனுக்கு ரூ.1 கோடி
ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக்தான் இந்த முறை இடம்பெற்றுள்ள வீரர்களில் அதிக வயதுடையவர். அவருக்கு இப்போது வயது 43. அவருக்கு அடிப்படை விலையாக ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த ஹாக், ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். 40 வயதுக்கு மேற்பட்ட மற்றொரு வீரர் முத்தையா முரளீதரன் ஆவார். அவருடைய அடிப்படை விலை ரூ.1 கோடியாகும். இவர் கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். நெதர்லாந்து கிரிக்கெட் வீரரான ரியான் டென் தஸ்சாத்தேவுக்கு அடிப்படை விலையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மைக்கேல் கிளார்க் விலகல்
ஐபிஎல் போட்டி ஏலத்துக்கான வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் இடம்பெறவில்லை. ஆஷஸ் டெஸ்ட் தொடர் மற்றும் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புத்துணர்ச்சியோடு இருப்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago