ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீிரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ரஷியாவின் மரியா ஷரபோவா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-வது சுற்றில் நடால் 6-2, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் இளம் வீரரான தனாஸி கொக்கினாகிஸைத் தோற்கடித்தார். முதல் நிலை வீரரான நடால் 1 மணி நேரம், 53 நிமிடங்களில் தரவரிசையில் 570-வது இடத்தில் உள்ள கொக்கினாகிஸை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் 5 முறை ஆஸ்திரேலிய வீரரின் சர்வீஸை முறியடித்த நடால், 3 முறை தனது சர்வீஸை “சேவ்” செய்தார்.
மற்றொரு 2-வது சுற்றில் உலகின் 6-ம் நிலை வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவருமான ரோஜர் ஃபெடரர் 6-2, 6-1, 7-6 (4) என்ற நேர் செட்களில் ஸ்லோவேனியாவின் பிளாஸ் கேவ்சிச்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ராட் லேவர் மைதானத்திற்கு வெளியில் விளையாடிய ஃபெடரர், முதல் இரு செட்களை 54 நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தார்.
3-வது செட்டில் கடுமையாகப் போராடிய பிளாஸ் கேவ்சிச், அதை டைபிரேக்கர் வரை இழுத்துச் சென்றார். ஆனால் விடாப்பிடியாக போராடிய ஃபெடரர் 7-4 என்ற கணக்கில் டைபிரேக்கர் செட்டை கைப்பற்றி வெற்றி கண்டார். டைபிரேக்கர் செட் 53 நிமிடங்கள் நீடித்தது. இந்த ஆட்டத்தில் ஃபெடரர் 11 ஏஸ் சர்வீஸ்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.
வெற்றி குறித்துப் பேசிய ஃபெடரர், “முதல் இரு செட்களும் சிறப்பாக அமைந்தன. அதில் நான் மிகுந்த ஆக்ரோஷமுடன் விளையாடினேன். அதனால் பலன் கிடைத்தது. 3-வது செட்டில் இருவருமே சிறப்பாக ஆடினோம். கேவ்சிச்சின் சர்வீஸ் நன்றாக இருந்தது. 3 செட்களில் போட்டியை முடித்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். மற்றொரு 2-வது சுற்றில் பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்கா 7-6 (6), 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பிரேசிலின் தாமஸ் பெலூச்சியைத் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மேல்பகுதி மூடப்பட்ட மைதானத்தில் விளையாடியதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்ததோடு, அதிவேக சர்வீஸ்களையும் அடிக்க முடிந்தது. எனக்கு இந்த சூழல் நன்றாக இருந்தாலும், பெலூச்சிக்கு பாதகமாக அமைந்துவிட்டது” என்றார்.
நிஷிகோரி வெற்றி
உலகின் 16-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி 6-1, 6-1, 7-6 (3) என்ற நேர் செட்களில் செர்பியாவின் துசன் லஜோவிச்சை வீழ்த்தி 3-வது சுற்றை உறுதி செய்தார். ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ந்து 4-வது ஆண்டாக 3-வது சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் நிஷிகோரி.
செபி அதிர்ச்சி தோல்வி
சர்வதேச தரவரிசையில் 91-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் டொனால்டு யங் 6-4, 2-6, 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள இத்தாலியின் ஆன்ட்ரேஸ் செபிக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.
ஷரபோவா வெற்றி
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகின் 3-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் மரியா ஷரபோவா 6-3, 4-6, 10-8 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள இத்தாலியின் கரீன் நாப்பை தோற்கடித்தார்.
கடும் வெயிலுக்கு மத்தியில் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய ஷரபோவா, அடுத்த செட்டை 4-6 என்ற கணக்கில் நாப்பியிடம் இழந்தார். பின்னர் வெற்றியைத் தீர்மானிக்க டைபிரேக்கர் செட் நடைபெற்றது. 1 மணி நேரம் 55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த செட்டை கடும் போராட்டத்துக்குப் பிறகு 10-8 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியை வெற்றியில் முடித்தார் ஷரபோவா.
நடப்பு சாம்பியனான பெலாரஸின் விக்டோரியா அசரென்கா 6-1, 6-4 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் பர்போரா ஜலவோவா வைத் தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-0, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக்ஹேலையும், சர்வதேச தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 6-0, 7-5 என்ற நேர் செட்களில் பெலாரஸின் வோல்கா கோவர்ட்சோவாவையும் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
போபண்ணா, சானியா ஜோடிகள் வெற்றி
ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பாகிஸ்தானின் அய்ஸம் உல் ஹக் குரேஷி ஜோடி வெற்றி கண்டது.
இந்த ஜோடி 6-3, 4-6, 7-6 (5) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ரமீஸ் ஜுனைத்-பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோ ஜோடியைத் தோற்கடித்தது. இந்தப் போட்டியில் விடாப்பிடியாக போராடிய இந்திய ஜோடி இறுதியில் வெற்றி கண்டது.
மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் டேமி பேட்டர்சன்-அரினா ரொடினோவா ஜோடியைத் தோற்கடித்தது. போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சானியா ஜோடி தங்களின் 2-வது சுற்றில் ருமேனியாவின் மோனிகா-செக்.குடியரசின் கிளாரா ஸகோபலோவா ஜோடியைச் சந்திக்கிறது.
கொளுத்திய வெயில் குளிர்வித்த மழை
மெல்போர்னில் வியாழக்கிழமை 107.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. இதனால் ராட்லேவர் கோர்ட் மற்றும் ஹைசென்ஸ் கோர்ட் ஆகியவற்றின் மேல் பகுதி மூடப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் கடும் வெயிலால் போட்டி நிறுத்தப்படுவது இது முதல்முறையாகும். மெல்போர்னில் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக அங்குள்ள காட்டுப் பகுதியில் தீப்பிடித்து எரிந்து வருகின்றன. வெயிலை சமாளிக்க முடியாமல் டென்னிஸ் வீரர்கள் வாந்தி எடுத்ததோடு, மயக்கமும் அடைந்தனர். சில வீரர்கள் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக ஐஸ் கட்டிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
போட்டியில் விளையாடிய பிறகு சில வீரர்களால் பேசக்கூட முடியவில்லை. இதையடுத்து ராட்லேவர் மற்றும் ஹைசென்ஸ் கோர்ட்களைத் தவிர, மற்ற மைதானங்களில் நடைபெறவிருந்த ஆட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி விளையாடவிருந்த இரட்டையர் முதல் சுற்றும் அடங்கும். மாலையில் திடீரென பெய்த மழையால் மெல்போர்ன் நகர் குளிர்ந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago