கோப்பையுடன் விடைபெற்றார் சச்சின்

By செய்திப்பிரிவு

சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது மும்பை இண்டியன்ஸ்.

சச்சினுக்காக கோப்பையை வெல்வோம் என மும்பை வீரர்கள் ஏற்கெனவே கூறியது போலேவே, கோப்பையை வென்று அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.

முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் 18.5 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் திராவிட், மும்பை அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். வாட்சன் வீசிய 5-வது ஓவரில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விளாசிய சச்சின், அடுத்த பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ஸ்மித்துடன் இணைந்தார் அம்பட்டி ராயுடு. வாட்சன் வீசிய 11-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசிய ஸ்மித், அடுத்த ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 39 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து கேப்டன் ரோஹித் சர்மா களம்புகுந்தார். தான் சந்தித்த 3-வது பந்தில் ரோஹித் சிக்ஸர் அடித்தார்். மும்பை 104 ரன்களை எட்டியபோது ராயுடு 29 ரன்களில் வீழ்ந்தார். இதையடுத்து ரோஹித்துடன் ஜோடி சேர்ந்தார் கிரண் போலார்ட்.

மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவம்

பாக்னர் வீசிய அடுத்த ஓவரில் போலார்ட் கிளீன் போல்டு ஆனார். அவர் 10 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இதையடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல், பாக்னர் ஓவரில் ஒரு பவுண்டரியையும், சிக்ஸரையும் விளாசினார்.

சுக்லா வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 14 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தினேஷ் கார்த்திக் களம்புகுந் தார். ரோஹித் ஆட்டமிழந்தபோதும், மேக்ஸ் வெல் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரி யையும் விரட்ட, கார்த்திக் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரைத் தூக்கினார். இதனால் 18-வது ஓவரில் 20 ரன்கள் கிடைத்தன.

19-வது ஓவரில் மேக்ஸ்வெல் இரு பவுண்டரிகளை விளாச, கார்த்திக் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை விரட்டினார். வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல், கடைசி ஓவரில் ரன் அவுட்டானார். அவர் 14 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களம் கண்ட ஹர்பஜன் சிங், வந்த வேகத்தில் ஒரு சிக்ஸரை விரட்ட மும்பை அணி 200 ரன்களை எட்டியது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. கார்த்திக் 15, ஹர்பஜன் சிங் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

சாம்சன் அதிரடி

இதன்பிறகு 203 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த ராஜஸ்தான் அணியில் பெரேரா 8 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹானேவுடன் இணைந்தார் சாம்சன். ஹர்பஜன் வீசிய 3-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், பவுண்டரியையும் விரட்டிய சாம்சன், அதற்கடுத்த இரு ஓவர்களில் 3 சிக்ஸர்களையும், இரு பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். தொடர்ந்து வேகம் காட்டிய சாம்சன் 23 பந்துகளில் அரைசதம் கண்டார். அவர் 33 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்தார். ரஹானே 37 பந்துகளில் அரைசதம் கண்டார். வாட்சன், 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 62 ரன்கள் தேவைப்பட்டன.

16-ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டிய ரஹானே, ஹர்பஜன் வீசிய அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார்.

அதேஓவரில் ஸ்டூவர்ட் பின்னியும் (10 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி 169 ரன்களுக்கு சுருண்டது. ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டுகளையும், போலார்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மும்பைக்கு வெற்றி தேடித்தந்தனர்.

பிரியா விடை பெற்ற இரு சகாப்தங்கள்

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் சுவர் என்று இந்திய ரசிகர்களால் வருணிக்கப்படும் ராகுல் திராவிட் ஆகிய இருவரும் விளையாடிய கடைசி இருபது ஓவர் போட்டி இதுதான். அவர்கள் இருவருமே இந்தப் போட்டியோடு இருபது ஓவர் போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டனர். சச்சின், திராவிட் இருவரையும் இனி வண்ணயமான சீருடையில் ரசிகர்கள் காண முடியாது. ஏனெனில் சச்சின் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதேநேரத்தில் சச்சின் வெள்ளைச் சீருடையில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதைக் காண முடியம். ஆனால் ராகுல் திராவிட் அனைத்துவித போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்றுவிட்டதால், இனி அவருடைய ஆட்டத்தை ரசிகர்கள் காண முடியாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்