பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பரிதாபத் தோல்வி

By இரா.முத்துக்குமார்

அடிலெய்டில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது.

மீண்டும் இந்திய அணியின் இலக்கற்ற பந்துவீச்சே தோல்விக்குக் காரணமாக அமைந்தது. மோசமான பந்து வீச்சினால் வார்னர், மேக்ஸ்வெல் அதிரடி சதங்களை எடுக்க ஆஸ்திரேலியா 371 ரன்கள் குவித்தது. இத்தனைக்கும் அந்த அணி 48.2 ஓவர்களே விளையாடியது. தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு ஷிகர் தவன், அஜிங்கிய ரஹானே, அம்பாட்டி ராயுடு நம்பிக்கை அளித்தனர். ஆனால் ஆட்டத்தின் எந்தத் தருணத்திலும் இலக்கைத் துரத்தி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை இந்திய அணியின் விரட்டல் ஏற்படுத்தவில்லை, கடைசியாக 45.1 ஓவர்களில் 265 ரன்களுக்கு இந்தியா சுருண்டு தோல்வி அடைந்தது.

வேகப்பந்து வீச்சாளர் கமின்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்டார்க், ஜான்சன், ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரெய்னா, வார்னரின் அபார பீல்டிங் மற்றும் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

முதல் ஓவரில் ரோஹித் சர்மா ஒரு அபாரமான கவர் டிரைவ் பவுண்டரியை தன்னம்பிக்கையுடன் அடித்தார். ஷிகர் தவனும் ஒரு அருமையான கவர் டிரைவை ஹேசில்வுட் பந்தில் அடித்திருந்தார். ஜான்சனையும் ஒரு ஆஃப் சைட் பவுண்டரி அடித்தார் தவன்.

ஆனால் 5-வது ஓவரில் ரோஹித் சர்மாவின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளின் மீதான பலவீனத்தைப் பயன்படுத்தி ஒரு பந்தை சற்றே எழுப்பினார். ரோஹித் சர்மா அதனை அரைகுறை கட்ஷாட்டுக்கு முயன்று எட்ஜ் செய்து ஃபின்ச்சிடம் கேட்ச் கொடுத்தார். பின்ச் அதனை தட்டித்தட்டி பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தவன் மீண்டும் ஜான்சனை ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார். விராட் கோலி 18 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார். ஆனால் இந்த தேர்ட் மேன் திசையில் தட்டி விட வேண்டும் என்ற ஆர்வம் ஆபத்தில் பல தடவை முடிந்திருந்தும், கோலி அப்படி ஒரு ஷாட்டை முயன்று பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு கடும் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

இந்தியா 10வது ஓவரில் 53/2 என்று ஆனது.

ஷிகர் தவன், ரஹானே சதக்கூட்டணி:

அதன் பிறகு ஷிகர் தவன், ரஹானே கூட்டணி உண்மையில் ஆட்டத்தை சிறப்பாகக் கொண்டு சென்றனர். 15 ஓவர்களில் 104 ரன்களைச் சேர்த்தனர். சில அபாரமான ஷாட்களை தைரியமாக ஆடிய ரஹானே 52 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தார். தவன் 71 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்தார். ரஹானே பீல்ட் இடைவெளிகளை நன்றாக பிக் செய்தார், சில துல்லியமான ஷாட்களை ஆடினார் அவர்.

இருவரும் இணைந்து 15 ஓவர்களில் 104 ரன்களை விரைவாக 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஸ்கோர் 25-வது ஓவரில் 157.2 என்று நம்பிக்கை அளித்த போது ரஹானே ரன் விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் கமின்ஸ் பந்தை மிட் ஆனில் தூக்கி அடிக்க முயன்றார் ஆனால் அது கேட்சாக முடிந்தது.

தொடர் விக்கெட்டுகள் சரிவு:

ரஹானே சென்றவுடன் அடுத்த 4 விக்கெட்டுகள் 28 ரன்களுகு மடமடவென சரிந்தது. தவன், ஜான்சனின் ஷாட் பிட்ச் பந்துக்கு இரையானார். ராயுடு ஒரு பந்தை ஷாட் பாயிண்டில் தட்டி விட்டு ரன் எடுக்க முயல அதில் ரெய்னா (9), டேவிட் வார்னரின் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். அதற்கு அடுத்த பந்தே கமின்ஸ், தோனிக்கு பவுன்சர் ஒன்ற வீச தோனி அதனை பயங்கரமான ஹூக் ஷாட் ஒன்றை ஆடினார் பந்து ஸ்கொயர் லெக் பவுண்ட்ரிக்கு சிக்சர் போலவே சென்றது, ஆனால் ஸ்டார்க் ஒர் கையில் அபாரமான கேட்சை பிடிக்க தோனி 0-வில் வெளியேறினார். ஸ்டூவர்ட் பின்னி, ஜான்சனின் பந்தை பொறுப்பற்ற முறையில் மேலேறி வந்து விளாச முயன்று பவுல்டு ஆனார்.

185/7 என்ற நிலையிலிருந்து ராயுடு, ஜடேஜா ஸ்கோரை 254 ரன்களுக்கு உயர்த்தினர். ராயுடு 42 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 53 எடுத்து ஹேசில்வுட்டின் ஷாட் பிட்ச் பந்துக்கு அவுட் ஆனார். ஜடேஜா 20 ரன்கள் எடுத்து கமின்சிடம் வீழ்ந்தார். கடைசியாக அஸ்வின் 5 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 45.1 ஓவர்களில் 265 ரன்களுக்குச் சுருண்டு பரிதாபத் தோல்வி தழுவியது.

ஆட்ட நாயகனாக மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்பட்டார்.

மோசமான பந்துவீச்சை அடித்து நொறுக்கிய வார்னர், மேக்ஸ்வெல்

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா இந்தியப் பந்துவீச்சு பலவீனத்தை முழுதும் பயன்படுத்தி 371 ரன்கள் குவித்துள்ளது.

அந்த அணியின் டேவிட் வார்னர் 83 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 104 ரன்களை எடுக்க, கிளென் மேக்ஸ்வெல் 4-வது டவுனில் இறங்கி வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சி 57 பந்துகளில் 11 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 122 ரன்கள் எடுத்து போதும் என்று ரிட்டையர்ட் ஆனார்.

பந்தை எங்கு அடிக்கலாம் என்று பவுலர்களை கேட்காதது ஒன்றுதான் குறை. மற்றபடி மைதானத்தில் ஆளில்லா இடங்களில் பந்துகள் பறந்தவண்ணமே இருந்தன.

ஃபின்ச் 20 ரன்கள், வாட்சன் 22 ரன்கள், ஸ்மித் 1 ரன் எடுத்து மிகவும் அலட்சியமாக ஆஃப் திசையில் ஒதுங்கிக் கொண்டு உமேஷ் பந்தை விரட்ட நினைத்து கோட்டைவிட்டு பவுல்டு ஆனார்.

பெய்லி 44 ரன்களை எடுக்க, மார்ஷ் (21), மிட்செல் ஜான்சன் (19) கடைசியில் ரன்கள் சேர்த்தனர். மேக்ஸ்வெல் ரிட்டையர்ட் ஆகாமல் இருந்தால் 400 ரன்கள் நிச்சயம்.

மொகமது ஷமி ஒன்று புல்டாஸ் இல்லையேல் ஓவர் பிட்ச், இல்லையேல் ஷாட் பிட்ச். இதனால் 9.2 ஓவர்களில் 83 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் மட்டுமே பந்து வீச்சில் சொல்லிக்கொள்ளும் படியாக இருந்தது கடைசியில் மேக்ஸ்வெல் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் விளாசும் வரை நன்றாகவே வீசினார். ஆனால் அவரால் ஒரு யார்க்கரை கூட வீச முடியவில்லை.

மோஹித் சர்மா 6 ஓவர்களில் 62 ரன்கள் 2 விக்கெட்டுகள். அஸ்வின் 6 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து சிக்கனம் காட்டினார். ஜடேஜா 2 ஓவர்கள் 19 ரன்கள். ஸ்டூவர்ட் பின்னி 6 ஓவர்கள் 41 ரன்கள் 1 விக்கெட். அக்‌ஷர் படேல் 5 ஓவர்களில் 47 ரன்கள் ஒரு விக்கெட்.

மொத்தம் 44 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் விளாசப்பட்டது. மொத்த ரன் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் பவுண்டரிகள், சிக்சர்கள்.

அடுத்த பயிற்சி ஆட்டம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்