இந்திய பிட்சில் வேகப்பந்து வீச்சினால் இந்திய அணியை வீழ்த்த முடியும்: கிளென் மெக்ராவின் பரிந்துரைகள்

By எஸ்.தினகர்

இந்திய பிட்ச்களில் வேகப்பந்து வீச்சு எடுபடாது என்று யார் கூறுவது, வீசியபடி வீசினால் வேகப்பந்து வீச்சின் மூலமும் இந்திய பிட்ச்களில் அயல்நாட்டு அணிகள் வெற்றி பெற முடியும் என்கிறார் கிளென் மெக்ரா.

2004-ம் ஆண்டு தொடரில் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா கடைசியாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய போது மெக்ரா, ஜேசன் கில்லஸ்பி, காஸ்பரோவிக்ஸ் ஆகியோர் பங்களிப்பு பிரதானமானது.

தற்போது மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் அது போன்றதொரு பந்து வீச்சை வீச முடியுமா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் ‘ஏன் முடியாது?’ இந்திய பிட்ச்களில் வேகப்பந்தில் இந்திய அணியை முறியடிக்க முடியும் என்று மெக்ரா நம்பிக்கையுடன் சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

இந்தியாவில் 8 டெஸ்ட் போட்டிகளில் கிளென் மெக்ரா 33 விக்கெட்டுகளை அருமையான 21.30 என்ற சராசரியில் கைப்பற்றியுள்ளார். 2004 தொடரில் மெக்ரா 14 விக்கெட்டுகளையும், ஜேசன் கில்லஸ்பி 20 விக்கெட்டுகளையும் (சராசரி 16.15), காஸ்பரோவிக்ஸ் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். விழுந்த 70 இந்திய விக்கெட்டுகளில் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு மட்டும் 43 என்பது கவனிக்கத்தக்கது. ஷேன் வார்ன் 14 விக்கெட்டுகளை 2004-ல் வீழ்த்தினார்.

இந்நிலையில் தி இந்து (ஆங்கிலம்) கிளென் மெக்ராவிடம் இந்திய பிட்ச்களில் வேகப்பந்து வீச்சை வெற்றிகரமாக வீசும் ரகசியம் என்னவென்று உரையாடிய போது, “இந்தியாவில் புதிய பந்துகள் கொஞ்சம் வேகம் கொடுக்கும். பந்துகள் ஓரளவுக்கு எழும்பும். எனவே புதிய பந்தில் ஸ்லிப் திசையில் அதிக வீரர்களை நிறுத்தி எட்ஜ்களை எடுக்கச் செய்து தொடக்கத்திலேயே விக்கெட்டுகளைச் சாய்க்க வேண்டும்.

புதிய பந்தின் திடத்தன்மை குறைந்து மென்மையாகத் தொடங்கும் போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடினமேற்படும். ஸ்லிப் பீல்டர்களை சற்றே குறைத்து மிட்விக்கெட், ஷார்ட் கவர் வைத்துக் கொண்டு ஸ்டம்புக்கு நேராக பந்துகளை வீசுவதோடு பந்தை நன்றாகத் தேய்த்து ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முயற்சி செய்ய வேண்டும். பந்து ரிவர்ஸ் ஆகத் தொடங்கியவுடன் மீண்டும் பீல்டர்களை அருகில் அழைத்து நெருக்கடி கொடுக்க வேண்டும்.

கேள்வி: இந்திய பிட்ச்களில் வீச சரியான அளவு எது? ஏனெனில் ஆஸ்திரேலியா அளவுக்கு இங்கு பவுன்ஸ் கிடைக்காது:

மெக்ரா: ஆஃப் ஸ்டம்ப் மேல்பகுதியை பந்துகள் தாக்குமாறு லெந்தில் வீச வேண்டும் பேட்ஸ்மெனிலிருந்து 7-8 அடிகள் முன்னால் பந்துகள் பிட்ச் ஆவதைத்தான் நாம் குட் லெந்த் என்கிறோம். ஆனால் இது பிட்சிற்கு பிட்ச் மாறுபடும். மேலும் பேட்ஸ்மெனுக்கு பேட்ஸ்மெனும் சரியான லெந்த் என்பது மாறுபடும். பேக்ஃபுட் வீரர் என்றால் அவரை முன்னால் வரச் செய்வதும், முன்னால் வந்து ஆடுபவர் என்றால் பின்னால் செல்ல வைப்பதும் வழக்கம், ஆனால் பேட்ஸ்மென் என்ன உயரம் என்பதும் இதில் முக்கியம்.

பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்போது ஃபுல் லெந்தில் வீச வேண்டும், ஸ்டம்புகளை தாக்குமாறு வீச வேண்டும். ஆஃப் ஸ்டம்பிலிருந்து உள்ளே கொண்டு செல்ல வேண்டும். ஆஸ்திரேலியாவில் பந்து பழசானாலும் எட்ஜிற்காக வீசலாம் ஆனால் பவுன்ஸ் குறைவான இந்தப் பிட்ச்களில் பவுல்டு, எல்.பி ஆகியவற்றிற்கு குறி வைக்க வேண்டும்.

நான் ஃபுல் லெந்தில் வீசி எட்ஜுக்காகத்தான் பார்ப்பேன், பவுன்ஸ் இல்லாததால் இங்கு பேட்ஸ்மெனை பின்னால் செல்லவைப்பது பயனளிக்காது, பின்கள வீரர்கள் கூட நம் பந்தை எளிதில் அடித்து ஆடுவார்கள்.

பிட்ச்களில் பிளவுகள் தோன்றத் தொடங்கும் போது ஆஃப் கட்டர்கள், லெக் கட்டர்கள் மிகுந்த பயனளிக்கும் (2004-ல் கில்லஸ்பி, காஸ்பரோவிக்ஸ் ஆகியோர் ஆஃப் கட்டர்களை கொண்டே வீழ்த்தினர்) கொஞ்சம் வேகம் குறைவாகவும் ஃபுல் லெந்திலும் இங்கு வீசினால் பேட்ஸ்மென்களுக்கு பந்தை ‘டைம்’ செய்வது கடினமாக அமையும். சுற்றிலும் பீல்டர்களை வட்டமாக நிறுத்தினால் அவர்கள் பந்தின் லைனுடனேயேதான் ஆட முடியும் அப்போது தவறாக ஒரு டிரைவ் ஆடி கேட்ச் ஆக வாய்ப்புள்ளது.

மட்டையின் அகலத்தில் பாதியளவுதான் பந்தை வெளியே கொண்டு செல்வதாகட்டும் உள்ளே கொண்டு வருவதாகட்டும் இருக்க வேண்டும். பந்தின் திசை ஆஃப் ஸ்டம்ப் அல்லது 4-வது ஸ்டம்ப் லைனாக இருக்க வேண்டும். என்ன பந்து வீசப்போகிறோம் என்பதை மனதிற்குள் பூட்டி வைத்து அந்த முறையிலேயே சரியாக வீச வேண்டும்.

இவ்வாறு கூறுகிறார் மெக்ரா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்