பொறுமையை சோதித்த மே.இ.தீவுகள் பந்துவீச்சு: விட்டுக் கொடுக்காத இந்திய பேட்டிங்!

By ஆர்.முத்துக்குமார்

ஜமைக்கா டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது.

162 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ம் நாள் ஆட்ட முடிவில் ரஹானே 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்தும், விருத்திமான் சஹா 17 ரன்கள் எடுத்தும் ஆடிவருகின்றனர். நேற்று 88 ஓவர்களில் 232 ரன்களையே எடுக்க முடிந்தது, காரணம் பிட்சின் கடினமான தன்மையோ இந்திய பேட்ஸ்மென்கள் மட்டைபோட்டனர் என்பதோ அல்ல, மே.இ.தீவுகள் அணி தப்பித்தவறியும் கூட நெருக்குதல் கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி விடக் கூடாது என்ற அணுகுமுறையைக் கடைபிடித்ததே.

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே, அதாவது 4-வது ஸ்டம்ப் கூட அல்ல 5-வது ஸ்டம்புக்கு வீசுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர், ஆனால் முதல் நாளை விட கட்டுக்கோப்புடன் வீசினர். பிட்சில் இன்னமும் பவுன்ஸ் உள்ளது, ஸ்விங் எடுத்தது. ஷனன் கேப்ரியல், கமின்ஸ், ஹோல்டர் ஆகியோர் நேற்று காலை 14 ஓவர்களை அதாவது 84 பந்துகளை வீசியதில் ராஹுல் மற்றும் புஜாரா 38 பந்துகளை ஆடாமல் விட்டதாகவும் 29 பந்துகளை தடுத்தாடியதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கே.எல்.ராகுல், ராஸ்டன் சேஸ் பந்தை சிக்ஸ் அடித்து 96-லிருந்து 102 சென்றார். புஜாரா முதல் நாளில் 18 நாட் அவுட், மறுநாளில் தன் முதல் ரன்னை எடுக்க ஒரு மணி நேரம் ஆனது. அதாவது முதல் பந்து வீச்சு மாற்றம் சேஸ் வந்த பிறகே புஜாரா தன் முதல் ரன்னை எடுத்தார். அதாவது 57 பந்துகளில் 18 இருந்த புஜாரா 92 பந்துகளிலும் 18 ரன்களிலேயே இருந்தார், இந்த அளவுக்கு அறுவை போடும் அளவுக்கு பந்து வீச்சில் ஒன்றுமில்லை என்பதையும் கூறுவது அவசியம். சேவாக் போன்றவர்களுக்கு இத்தகைய பந்துகளை வீசியிருந்தால் 60 பந்துகளில் சதம் கண்டிருப்பார் என்பதே எதார்த்தம்.

126/1 என்ற நிலையிலிருந்து உணவு இடைவேளையின் போது ஸ்கோர் 185/1 என்பதாகவே இருந்தது. ராகுல் 107, புஜாரா 37 நாட் அவுட். புஜாரா கமின்ஸ் மற்றும் கேப்ரியலை நேர் பவுண்டரிகள் அடித்தார், இடையே கமின்ஸை கவர் பாயிண்டில் பவுண்டரி அடித்தார். 159 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 46 ரன்கள் எடுத்த புஜாரா, இடுப்புக்கு வந்த ஷார்ட் பிட்ச் பந்தை லெக் திசையில் தட்டி விட்டார். பந்து உண்மையில் ஃபைன் லெக், ஸ்கொயர் லெக் இடையே சென்றிருந்தால் ஒரு ரன் ஓடுவதற்கு நேரம் இருந்திருக்கும், ஆனால் பந்து ஸ்கொயர் லெக்கிற்குச் சென்றதால் சேஸ் அதனை அருமையாக எடுத்து ரன்னர் முனையில் ஸ்டம்பில் அடிக்க புஜாரா ரன் அவுட் ஆனார்.

இப்படி அறுவை போட்டு விட்டு கடைசியில் இப்படி அவுட் ஆவது கடும் விமர்சனங்களுக்காளாகும் ஒரு விஷயமாகி விடும். இவ்வளவு நேரம் மே.இ.தீவுகள் பவுலரின் பொறுமையையும் நம் பொறுமையையும் சேர்த்து சோதித்த புஜாரா கடைசியில் அவையெல்லாம் வீணாக ரன் அவுட் ஆவது அபத்தமானதே. அதாவது சமகால வீரர்களின் பிரச்சினை என்னவெனில் டி20 கிரிக்கெட் என்றால் இயல்பை மீறிய அடிதடி ஆட்டம், டெஸ்ட் கிரிக்கெட் என்றால் இயல்பற்ற ஒரு தடுப்பாட்டம் என்று ஆடிவருகின்றனர். இயல்பூக்கமான ஆட்டம் டெஸ்ட் போட்டியிலிருந்து சென்று கொண்டிருப்பதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆபத்தாகும். சச்சின், சேவாக், லஷ்மண் என்று யாராக இருந்தாலும் பவுண்டரி பந்து என்றால் அது பவுண்டரிதான், அதில் சமரசம் கிடையாது, ஆனால் Post-Dhoni இந்திய அணியில் ஒரு தேவையில்லாத எச்சரிக்கையும், அசட்டுத்தனமான தடுப்பாட்டமுமே எஞ்சி நிற்கிறது.

ஆனால் ராகுலை நாம் அப்படி கூற முடியாது. அருமையாக டிரைவ் செய்கிறார், சில வேளைகளில் ஐபிஎல் ரக தூக்கி அடித்தல்களும் உண்டு.

விராட் கோலியும் ராகுலும் இணைந்தனர், ஆனால் மே.இ.தீவுகள் அணியில் எந்தவித பரபரப்பும் இல்லை புதிய பந்து எடுக்க முடியும் என்ற போதும் எடுக்கவில்லை. புஜாரா அவுட் ஆனது ஒரு நிகழ்வு போலவேயல்லாமல் மீண்டும் அதே பந்துவீச்சு, அதே பீல்டிங் என்று சென்று கொண்டிருந்தனர், கேப்ரியல் உண்மையில் முயற்சி செய்தார், கோலியை இருமுறை அவர் பீட் செய்தார், ஒருமுறை கோலி கேப்ரியல் பந்தில் பிளம்ப் எல்.பி.ஆனார். வெளியே வீசிக் கொண்டேயிருந்தவர் திடீரென ஒரு பந்தை உள்ளே கொண்டு வர கோலி கால்காப்பில் வாங்கினார், அந்த பந்து லெக்ஸ்டம்பைத் தாக்கும் பந்து ஆனால் நடுவர் அலீம் தார் நாட் அவுட் என்றார், கேப்ரியல் கடும் ஏமாற்றமடைந்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஸ்விங் ஆன பந்துகள் கோலியை படுத்தின.

ராகுல் 303 பந்துகளில் 15 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 158 ரன்கள் எடுத்த நிலையில் கேப்ரியல் வீசிய லெக் திசை பந்தைத் தொட்டு கேட்ச் கொடுத்தார். அது தரையில் பட்டு கேட்ச் ஆனதா என்று முதலில் ரீப்ளே பார்த்தனர், பிறகு எட்ஜா என்று பார்த்தனர், இது தவறானது, தரையில் பட்டு கேட்ச் என்று சரிபார்த்தால் அதை மட்டும்தான் பார்க்க வேண்டும், எட்ஜா என்பதை சரிபார்க்க ஸ்னிக்கோ மீட்டர் போன்ற வசதிகள் இல்லாத போது அதைச் சரிபார்ப்பது முறையல்ல.

ஆனால் ராகுல் அவுட் என்று தீர்ப்பானது. கோலி கடைசியில் பிஷூ பந்து வீச வந்தவுடன் மட்டமான இரண்டு ஷார்ட் பிட்ச் பந்துகளை லாங் ஆனில் ஒரு சிக்ஸ் மிட் விக்கெட் பவுண்டரி விளாசினார், பிறகு அதே ஓவரில் ஒரு அருமையான ஆன் டிரைவ் பவுண்டரி என்று நன்றாக தனது அனாயாச ஆட்டத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் சேஸ் வீசிய ஆஃப் ஸ்பின் பந்தை சற்றும் எதிர்பாராமல் ஷார்ட் லெக் கையில் நேராக கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பிஷூ பிறகு 3 ரன்களில் அஸ்வினை புல் லெந்த் பந்தில் எல்.பி.செய்தார். ஆனால் ஒன்றைக் கூறியாக வேண்டும் எந்த ஒரு கவலையுமில்லாமல் ரஹானே ஆடினார், குறிப்பாக ஹோல்டரை அடித்த புல் ஷாட், பிறகு சேஸ் பந்தை மேலேறி வந்து நேராக தூக்கி அடித்த சிக்ஸ் அழகு. மேலும் கேப்ரியலை அடித்த அப்பர் கட், என்று ரஹானே அருமையாக ஆடி வருகிறார். அவர் 42 ரன்களிலும் சஹா 17 ரன்களிலும் உள்ளனர்.

இந்தியா 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்